கடந்த 11 வருடங்களில் பதியுதீன் வீட்டுப் பணிப்பெண்களில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர் – பொலிஸ்

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வீடுப் பணிப்பெண் ஹிஷாலினியின் மர்ம மரணம் தொடர்பாக மேலும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

16 வயதுடைய ஹிஷாலினியின் மீது பாலியல் வல்லுறவு செய்தாரெனச் சந்தேகப்படும் பதியுதீனின் மனைவியின் 44 வயதுடைய சகோதரர் மேலுமொரு பணிப்பெண் மீதும் வல்லுறைவைச் செய்தார் என அப்பணிப்பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இப் பணிபெண்ணைப் பொலிசார் பதியுதீன் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது அப்பெண் அங்கு சில இடங்களை அடையாளப்படுத்தி மேலும் விபரங்களைப் பொலிசாருக்கு வழங்கியுள்ளார்.

அவரது வாக்குமூலத்தின் பிரகாரம், 2009 இலிருந்து பதியுதீன் வீட்டில் 10 பணிப்பெண்கள் பணிபுரிந்துள்ளார்கள் எனவும் அவர்களில் ஹிஷாலினி உடபட் மூவர் தற்போது மரணமாகியுள்ளனர் எனத் தெரியவருகிறது. இவர்களில் ஒருவர் புற்றுநோயால் மரணமானார் எனவும் இன்னுமொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் ஊடகப் பேச்சாலர் தெரிவித்துள்ளார்.

இப் பணிப்பெண்கள் அனைவரும் ஹிஷாலினியின் டயாகம தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் எல்லோரையும் ஒரே தரகர் மூலமாகவே பதியுதீன் பணிக்கெடுத்துக்கொண்டார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் ஏழு பெண்களிடமிருந்து பொலிசார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். ஒருவர், தான் பதியுதீனின் மைத்துனரால், பதியுதீனின் வீட்டில் வைத்துப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

பதியுதீனின் மனைவி, அவரது தந்தையார், சகோதரர் மற்றும் பணிப்பெண்களை வழங்கி வந்த தரகர் ஆகியோர் தற்போது இவ்வழக்கில் சந்தேகநபர்களாக இருப்பதால் அவர்களது பெயர்களைப் பொலிசார் வெளியிடவில்லை. பெறப்பட்ட சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளின்போது பெறப்பட்ட ஆதாரங்கள், தடயங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு நீதி மன்றமே அவர்களது பெயர்களை வெளியிடும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.