Spread the love

செய்மதித் தரவுகளை ஆதாரம் காட்டுகிறது

சீனாவின் வூஹான் நகரில் இவ் வருட ஆரம்பத்தில் ஆரம்பித்ததாக இதுவரை நம்பப்பட்டு வரும் கோவிட்-19, அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டுமென ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.

செய்மதிப் படங்களை ஆராய்ந்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல வாகனங்கள் மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுப்பதையும் அவற்றின் தரிப்பிடங்கள் நிரம்பி வழிவதையும் அவதானித்து, இப்படியான ஊகத்துக்கு ஆய்வாளர் வந்துள்ளனர்.

மேற்கு நாடுகளின் வேவு நிறுவனங்களின் உத்தியைப் பாவித்து, ஹார்வார்ட் ஆய்வாளர்கள் செய்மதிப் படங்களை அவதானிப்பதன் மூலம், சீனாவின் வூஹான் நகரின் ஐந்து பெரிய மருத்துவமனைகளின் வாகனத் தரிப்பிடங்கள் போன்றவற்றை ஆராய்ந்தனர். இதன் விளைவாக, 2019 கோடை மற்றும் இலையுதிர்கால ஆரம்பத்தில் இந்த ஐந்து மருத்துவமனைகளிற்கும் வாகனங்கள் நெரிசலாகச் சென்று வந்ததை அவர்கள் அவதானித்தனர் என, இன்வாய்வுக்குழுவின் தலைவரான, ஹார்வார்ட் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜோன் பிறவுண்ஸ்டீன் தெரிவித்தார்.

அதே வேளை, இதே காலப் பகுதியில், சீனாவின் இணைய தேடுதல் தளத்தில் ‘சில அறிகுறிகளைக் குறிப்பிட்டு’ மேற்கொண்ட தேடுதல்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததையும் இணைத்து, கொறோணாவைரஸ் இக்காலத்திலேயே பரவ ஆரம்பித்திருக்கவேண்டும் என்ற முடிவை இக் குழு எய்தியிருக்கிறது.இம் முடிவுகள் மேலெழுந்தவாரியாக உள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் டாக்டர் பிறவுண்ஸ்டீன், கோவிட்-19 நோயின் மர்மமான மூலத்தை அறிவதில் முக்கிய தரவுப்புள்ளியொன்றைத் தந்திருக்கிறது என்கிறார்.

“அக்டோபர் மாத அளவில் ஏதோ ஒன்று அப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. கொறோணாவைரஸ் தொற்று அறிவிக்கப்படுவதற்குமுன் அங்கு ஏதோ ஒரு சமூகக் குழப்பம் ஒன்று நடைபெற்றிருக்கிறது” என டாக்டர் பிறவுண்ஸ்டீன் கருதுகிறார்.

அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு 1
ஜொங்னான் மருத்துவமனையின் வாகனத்தரிப்பிடம் ஒப்பீடு 2018-2019 அக்டோபர் மாதம் படம் : ABC News

சீன அரசாங்கம் கோவிட்-19 தொற்று பற்றி டிசம்பர் 31, 2019 அன்றுதான் உலக சுகாதார நிறுவனத்துக்கு அது பற்றி அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க உளவு நிறுவனங்கள் சீனாவின் இத் தொற்று பற்றி நவம்பர் மாதக் கடைசியிலேயே அறிந்து பென்டகனுக்கு அறிவித்துவிட்டன.

அதே வேளை, சீனாவில், சுவாசக் கருவிகள் மற்றும் முகக்கவசங்கள் போன்றவற்றின் ஏற்றுமதிக் கட்டுப்பாடு, இறக்குமதி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளும் 2019 வருட இறுதியில் அதிகரித்திருந்த விடயத்தையும் இன்னுமொரு ஆய்வு முன்னர் தெரிவித்திருந்தது.

SARS-CoV-2 கொறோணாவைரஸின் மூலம் பற்றி அறிவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் உலக நாடுகளின் பல நிபுணர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க சீனா மறுத்து வருகிறது என அமெரிக்க, உலகசுகாதார நிறுவன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை, பொஸ்டன் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட டாக்டர் பிறவுண்ஸ்டீனும் அவரது குழுவும் ஒரு மாத காலமாக மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் இவ்வூகங்களை எட்டியிருக்கிறது.

Related:  பிரேசில் | சுதேசிகளைக் கொன்றொழிக்கும் கொறோணாவைரஸ்


அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு 2
வூஹான் டொங்ஜி மருத்துவப் பல்கலைக் கழக வாகனத் தரிப்பிடம் – படம்: ABC News
அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு 3
வூஹான் ரியான்யூ மருத்துவமனை. படம்: ABC News
அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு 4
ஹுஆனான் கடலுணவுச் சந்தையின் வாகனத் தரிப்பிடம் – படம்: ABC News

இவ்வாய்வு தற்போது இதர நிபுணர்களின் அபிப்பிராயத்துக்காக (peer review) உலகின் பல மருத்துவ சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. திங்களன்று, ABC செய்தி நிறுவனத்துக்குச் சொந்தமான சஞ்சிகை ‘டாஷ்’ இணையத் தளம் தற்காலிக முடக்கலுக்கு உள்ளாகியிருந்தது.

உளவு நிறுவனங்களான Central Intelligence Agency மற்றும் Defense Intelligence Agency ஆகியன உலகம் முழுவதும் நடைபெறும் அசாதாரண தரை நிகழ்வுகளைத் தினமும் ஆராய்ந்து வருகின்றன.

அமெரிக்காவில் இதுவரை கோவிட்-19 தொற்றினால் மரணமடைந்தவர்கள் 110,000. இந் நோய் பற்றி உலகம் அறிவதற்கு முன்னரே வூஹானிலிருந்து பயணிகள் இந் நோயை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்துவிட்டனர். ஜனவரியில் நாம் பயணத்தடை கொண்டுவருவதற்கு முன்னரே நோய் வந்துவிட்டது என்கிறார் முன்னாள் உள்ளகப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கோஹென்.

அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு 5
ஹூபே பெண்கள், குழந்தைகள் மருத்துவமனை – படம்: ABC News

கொறோணாவைரஸ் பற்றிய பல முக்கியமான தகவல்களைப் பகிர சீனா மறுத்து வருகிறது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.

அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு 6
சீன இணையத்தளத் தேடுதல்கள் (இருமல், வயிற்றுப்போக்கு) – படம்: ABC News
Print Friendly, PDF & Email