கடத்தல் விவகாரம்: தூதரக வாசலில் உண்ணாவிரதம்!

கடத்தல் விவகாரம்: தூதரக வாசலில் உண்ணாவிரதம்!

Spread the love

December 2, 2019

கடத்தல் விவகாரம்: தூதரக வாசலில் உண்ணாவிரதம்! 1
இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகம் [படம்: முகநூல்]

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் தொடர்பாக முன்னாள் மாகாணசபை அங்கத்தவரும், இளைப்பாறிய இராணுவ மேஜருமான அஜித் பிரசன்னா தூதரக வாசலில் உண்ணாவிரதமொன்றை ஆறம்பித்துள்ளார்.

கடத்தல் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர் காவற்துறைக்கு வாக்குமூலமளிக்கவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த ஊழியரின் மோசமாகும் உடல்நிலை காரணமாக அவர் வாக்குமூலம் அளிக்கமுடியாதுள்ளதாக தூதரகம் கூறியிருக்கிறது.

“சுவிட்சர்லாந்தின் தூதரே, எங்கள் தாய்நாட்டின் நல்ல பெயரைக் கெடுக்காதீர்கள். அந்தப் பெண்ணைச் சிறீலங்கா காவற்துறைக்கு வாக்குமூலமளிக்க அனுமதியுங்கள்” எனும் வாசகங்களைக் கொண்ட பதாகையொன்றைப் பிடித்தபடி பிரசன்னா தனது எதிர்ப்பைத் தூதரக வாசலில் காட்டியபடி நிற்கின்றார்.

அதே வேளை இக் கடத்தல் நடைபெறவேயில்லை எனவும் இது அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கை எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கடத்தல் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின்படி கடத்தப்பட்டவரின் கூற்று தவறானது எனவும் அதற்கான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அதன்படி குறிப்பிட்ட கடத்தல் நடக்கவேயில்லை எனத் தாங்கள் முடிவெடுத்திருப்பதாகவும் காவற்துறை அதிகாரிகளும், விமல் வீரவன்சவும் தெரிவித்துள்ளார்கள்.

கடத்தப்பட்ட பெண் ஒரு தமிழர் எனவும் அவர் கடத்தல், தடுத்து வைக்கப்பட்டமை, அவர்க்கு விசா வழங்கப்பட்டமை என்பன தொடர்பாக இன்னுமொருதடவை விசாரணைக்குட்படுத்தப்பட விரும்பவில்லை என அறியப்படுகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்கள், கொடுகப்பட்ட சாட்சியம் ஆகியவற்றில் காணப்படும் முரண்பாடுகளை வைத்துக்கொண்டு அப் பெண்ணை அதிகாரிகள் இரக்கமில்லாமல் மேலும் துன்புறுத்துவார்கள் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

வெளிப்புறக் கமராக் காட்சிகள், ஊபர், தொலைபேசி உரையாடல்கள், செய்மதி நடமாட்டப் பாதைகள் பற்றிய தரவுகள் ஆகியவற்றின் ஆதாரப்படி கடத்தல் பற்றிய குற்றச்சாட்டு தவறானதென முடிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவரை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கும்படி கோரிக்கை விடுக்கிறோம்

இலங்கை அரசாங்கம்

கடத்தல் தொடர்பாக சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக் விடுத்த அறிக்கை தவறானதெனவும் வெளியுறவுச் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னவும் தம்மிடமுள்ள ஆதாரங்களுக்கும் கடத்தப்பட்ட பெண்ணினது நடமாட்டங்களுக்கும், கொடுக்கப்பட்ட சாட்சியத்துக்குமிடயில் உள்ள முரண்பாடுகளை முன்வைத்துச் சுட்டிக்காட்டினர். GPS, Uber, CCTV, Cellphone கருவிகளின் மூலம் பெறப்பட்ட தரவுகளை அவர்கள் ஆதாரமாக முன்வைத்தனர் என அறிய முடிகிறது.

” திங்கள், நவம்பர் 25, 2019 அன்று சுவிஸ் தூதரகத்தின் பணிபுரிந்த உள்நாட்டு ஊழியர் ஒருவர் தொடர்பாக இடம்பெற்ற குற்றச் சம்பவம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் பூரண விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

“இன்று மாலை (1 டிசம்பர் 2019), வெளிவிவகாரச் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க, பாதுகாப்புச் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனெரல் கமால் குணரத்ன மற்றும் சம்பந்தப்பட்ட வேறு சில அதிகாரிகளும் சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹான்ஸ்பேற்றர் மொக் மற்றும் தூதரகத்தின் உதவித் தூதுவரைச் சந்தித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

29 நவம்பர் 2019 அன்று சுவிஸ் தூதரகத்தால் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்டவரை விசாரணைக்கு முன்நிறுத்த முடியவில்லை எனினும் சட்ட அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது. சுவிஸ் தூதரகத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர் மீது நடத்தப்பட்ட குற்றச் செயல் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட அறிக்கைக்கும் பாதிக்கப்பட்டவரது நடமாட்டங்கள் தொடர்பாகப் பெறப்பட்ட சாட்சியங்கள், ஊபர் தரவுகள், வெளிக் கமராக் காணொளி, தொலைபேசி உரையாடல்கள், செய்மதி தரவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களுடன் உடன்படுவதாகவில்லை.

” சுவிஸ் தூதரகத்துக்கு வழங்கப்பட்ட மறுக்கமுடியாத ஆதாரங்களின் பின்னணியில், இக்குற்றம் தொடர்பான உண்மைகளை நிலைநாட்ட மேலும் விசாரணைகள் அவசியமாகின்றன. அதற்கு பாதிக்கப்பட்டவர் சட்ட அதிகாரிகள் முன் சாட்சியமளிக்க வேண்டிய அவசியம் எழுகிறது. கடத்தலின்போது தான் காயப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர் கூறியிருப்பதால், அவரை இலங்கையிலுள்ள சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் பரிசோதிக்க அவரை முன்னிறுத்த வேண்டும்.

இந்தக் கடத்தல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்குப் பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று தூதரகத்துக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email