Healthமாயமான்

கஞ்சா குடிப்பவர்கள் சத்திர சிகிச்சை செய்வதைத் தவிர்க்கவும்

மாயமான்

இக்கட்டுரை சில வாசகர்களுக்கு வேதனையைத் தரலாம். இருப்பினும் உண்மையைச் சொல்லித்தானாகவேண்டும்.

கனடாவில் கஞ்சா குடிப்பது சட்டவிரோதமில்லை என பிரதமர் ட்றூடோ அறிவித்தத்தும் மூலைக்கு மூலை கஞ்சாக் கடைகள் தமது மொட்டுகளை விரித்து வருகின்றன என்பது பலருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி. சிவமூலிகையான கஞ்சாவைச் சிறை மீட்ட செம்மல், நமது பிரதமர் தன் செயலுக்கான காரணமாகக் கூறியது “பல தீரா வலிகளுக்கு நிவாரணம் தரும் மூலிகை கஞ்சா” என்பதற்காக. ஆனால் தற்போது வந்திருக்கும் ஆய்வறிக்கை அந்த நம்பிக்கைக்கு ஆப்பு வைத்துவிடும் போலிருக்கிறது.

அந்த ஆப்பறிக்கையின் விவரம் இதுதான். கஞ்சா பாவனையாளர்கள் தப்பித் தவறி சத்திர சிகிச்சை செய்யவேண்டி ஏற்பட்டால் அதனால் ஏற்படும் / உணரப்படும் வலி மிகவும் அதிகமாகவிருக்கும் என இவ்வறிக்கை கூறுகிறது. பொதுவாக சத்திர சிகிச்சை செய்தவர்களுக்கு அவர்களது உடனடி வலியை உணராமல் செய்ய மருத்துவர்கள் மோஃபீன் போன்ற மருந்துகளைக் கொடுப்பார்கள். கஞ்சா பாவித்தவர்களுக்கு இப்படியான மருந்துகள் வேலை செய்ய மாட்டாது என்பது வலி தரும் விடயமெனினும் அவர்கள் அனுபவிக்கப்போகும் சத்திர சிகிச்சை வலி மேலும் அதிகமாக உணரப்படும் என்பது மிக மிக வேதனை தரும் விடயம்.

அமெரிக்காவின் கிளீவ்லாந்து ‘அவுட்கம்ஸ் வலிச்சிகிச்சை நிலையத்தைச் (Outcomes Research Department at Cleveland Clinic’s Anesthesiology Institute)’ சேர்ந்த விஞ்ஞானியான டாக்டர் எல்யாட் எக்ராமியின் கருத்துப்படி கஞ்சா பாவிப்பவர்களின் சத்திர சிகிச்சைக்குப் பின்னான வலி சாதாரண நோயாளர்களின் வலியைவிடவும் அதிகமாக இருக்கும் என ‘சைரெக்டெய்லி’ என்ற சஞ்சிகையில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 2010 முதல் டிசம்பர் 2020 வரை சத்திர சிகிச்சை செய்துகொண்ட 34,521 நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி ‘இவ்வுண்மை’ நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாய்வில் பங்கெடுத்தவர்களில் 1,681 பேர் (5%) கஞ்சா பாவனையாளர் எனவும் இவர்கள் தமது சத்திர சிகிச்சைக்கு முன்னர் 30 நாட்கள் காலத்தில் கஞ்சா பாவித்திருந்தார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மற்றவர்கள் ஒருபோதும் கஞ்சா பாவித்திருக்கவில்லை. ஒப்பீட்டளவில், கஞ்சா பாவித்தவர்களில் 14% மானோர் சத்திர சிகிச்சை செய்து, முதல் 24 மணித்தியாலங்களில், மிகவும் தாங்க முடியாத வலியை அனுபவித்திருந்தனர் என்கிறது இந்த ஆய்வு.

இருப்பினும் இந்த ஆய்வு மட்டும் போதாது இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டுமென டாக்டர் எக்ராமி சொல்லியிருப்பது கஞ்சா பாவனையாளருக்கு மிகவும் சந்தோசமான செய்தியாக இருக்கும். (பாதுகாப்பு காரணமாக அவரது வீட்டு விலாசம் இங்கு தரப்படவில்லை).