ஓவியர் இயூஜீன் வின்சண்ட் கருணா | 1969 – 2019
தமிழ்க் கனடியர், நண்பர், ஓவியர் இயூஜீன் வின்சண்ட் கருணா இன்று, வெள்ளிக் கிழமை பெப்ரவரி 22, 2019, அகால மரணமடைந்தார்.
கருணா எனது நல்ல நண்பர். சுமார் இருபது வருடங்களுக்கு மேலாகத் தெரியும். கலை இலக்கிய வட்டத்திற்குள் சுற்றி வந்த போது அறிமுகமானவர். இலங்கையின் தலை சிறந்த ஓவியக் கலையின் குரு மாற்கு வின் மாணவர்.

ஒரு சிறந்த தேர்ச்சியுள்ள கலைஞர் தளம்பாத நிறைகுடமாக இருப்பார். எதிரிலிருப்பவன் நிறைகுடமோ, வெறும் குடமோ எல்லோரையும் உடனே இனம் கண்டு பாரபட்சமின்றிய ஒரு புன்னகையோடு கடந்து செல்லும் பக்குவம், முதிர்ச்சி அவருக்கிருக்கும். அவரே கருணா.
கனடாவில் மட்டுமல்ல உலகம் பூராவும், வீடுகளிலும், மண்டபங்களிலும், நூலட்டைகளிலும், விளம்பரங்களிலும் அவரது உயிரோவியங்கள் அலங்காரம் செய்துகொண்டிருக்கின்றன. கருணாவின் படைப்பாற்றல் உறங்கும் எரிமலை போன்றது. அவ்வப்போ சீறும்போது அது ஓவியமாகவும் வரும், மேடை நாடக நெறியாள்கையாவும் வரும், புகைப்படக் கருவியினால் வரைந்த ஒளி ஓவியமாகவும் வரும், கைத் தொலைபேசியில் என்னென்ன தொழில்நுட்பப் புதுமைகளுண்டோ அவற்றையெல்லாம் நமக்கெல்லாம் புரிய வைக்கும் கலை வடிவங்களில் வரும் போதாதற்கு இருக்கையின் அருகிலுருந்து காதிற்குள் கிசு கிசுக்கும் நகைச்சுவை வடிவங்களும் வரும்.
கருணா கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. ஒருவரை ஏசியதையோ, திட்டியதையோ பார்த்ததில்லை. திறந்து கிடக்கும் முகனூற் சுவர்களில் தன் காழ்ப்புகளை உமிழ்ந்ததில்லை. பிடிக்காதவர்களை விலத்திப் போய்விடும் பண்பு அவரிடமிருந்தது. பிடித்தவர்களோடு அதிகம் சிரிப்பார், பேசுவார். கூச்சமோ, முதிர்வின் வெளிப்பாடோ தெரியாது.
என் தொழில் சார்பில் அவருடைய கலைத் திறமையைப் பாவித்திருக்கிறேன். அவருடைய படைப்பாற்றலை ரசிப்பதற்கு எம்மிடையே தகைமையுடைய ரசிகர்கள் இல்லை. தமிழுக்கு அப்பால் சென்றிருந்தால் இன்று இன்று லண்டனிலோ, பாரிசிலோ, நியூ யோர்க்கிலோ பெரும் புள்ளிகளுடன் உரசிக்கொண்டிருந்திருக்க வேண்டியவர்.
தன் பொருட்டு எவருக்கும் துன்பம் தர விரும்பாதவர். அமைதியாக வாழ்ந்து, அமைதியாகவே பிரிந்திருக்கிறார்.
அவரது ஓவியங்களில் அவர் வாழ்வார்.
In memory of Our Dear Karuna
O’Karuna you will live for ever
In Canada, across the seas, you will live for ever
O’Karuna you will live for ever
In arts and crafts, point shoot and graph
You have no match ever
O’Karuna, you have no match ever
In the halls of fame, book covers you name
You are everywhere.
O’Karuna, you are everywhere
O’Karuna…you will live for ever
-Sivathasan
காணொளி / நன்றி: விமல் பானு
