ஓரிடத்தில் நிற்காதீர்கள், வாய்ப்புகளைத் தேடுங்கள்!
ஜெகன் அருளையா

“மக்கள் தங்களது கடவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்கணக்காக தூக்கத்துடன் வரிசையில் காலம் கழிக்கிறார்கள்” என இலங்கை ‘சண்டே ரைம்ஸ்’ தனது ஜூலை 2022 பதிப்பொன்றில் கூறியிருந்தது. “தற்கால பொருளாதார நிலை காரணமாக சுமார் 2000 மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்” என ‘சிலோன் ருடே’ தனது செப்டம்பர் இதழில் செய்தி வெளியிட்டிருந்தது. இப்படிப் பலரும் நாட்டை விட்டு வெளியேறிவரும் நிலையில் நாட்டுக்குத் திரும்பிவருகிறார் யாழ்ப்பாண இளைஞன் ஒருவர். அவரைப் பற்றிய கதை இது.
நீலேஷை முதன் முதலில் பார்ப்பவர்கள் அவரை ஒரு கலிபோர்ணியாவிலிருந்து வரும் இளைஞனென்றுதான் நினைப்பார்கள். அமெரிக்க உல்லாசக் கடலோடியை ஒத்த இழுவையான ரகமாகவே அவரது உரையாடல் தென்படும். நேரடியாக அவனைத் தூண்டாவிட்டால் அவர் எப்போதும் ஒரு புதிரான அமைதியோடுதான் இருப்பார். திடீரென அவர் மிகுந்த நம்பிக்கையுடன் கூடிய, விவேகமான சொல்வளத்துடன் உரையாடலை மேற்கொள்வார். நீலேஷ் உண்மையில் கனடாவின் புறநகர்ப் பகுதியான மார்க்கத்தில் பிறந்தவர். இலங்கையின் யுத்தத்தால் புலம்பெயர்ந்த அகதிகளுக்குப் பிறந்த முதலாம் தலைமுறைக் கனடியர் அவர்.
போர்க் காலத்தில், குறிப்பாக இளஞர்கள், ஏதாவதொரு இயக்கத்தால் உள்வாங்கப்படும் நிலை இருந்தது. விடுதலைப் புலிகள் அவர்களை உள்ளெடுக்கலாம் அல்லது இலங்கை இராணுவத்தினர் அவர்களைச் சிறையில் தள்ளி வாட்டி வதைக்கலாம். சப்பாத்துக்களின் ஓசைகள் கேட்டதுமே குடும்பங்களும், நண்பர்களும் அயலவர்களும் தத்தம் பிள்ளைகளை ஒளித்துவைக்கவேண்டிய நிலைமை. இக்காலகட்டத்தில் இளைஞர்களை நாட்டைவிட்டுத் தப்பியோடுவதைத் தவிர வேறு வழிகள் இருக்கவில்லை.
இப்படியொரு தருணத்தில் தான் கூரையில் ஒளித்திருந்த 20 வயதுடைய ஜீவராஜா அவருடைய குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டை விட்டு வெளியேறவேண்டி வந்தது. அவரது மூத்த சகோதரரான பூபதிராஜா அப்போது கனடாவில் இருந்தார். அவரது ஆலோசனையின் பேரில் ஜீவராஜா இந்தியா சென்று பின்னர் அண்ணாவின் உதவியுடன் கனடா சென்றார். இந்த ஜீவராஜாவுக்குக் கனடாவில் பிறந்த மகன் தான் நீலேஷ்.
ஓரிடத்தில் மட்டும் நிற்காதீர்கள். எழுந்து, நடந்து உலகைச் சுற்றி வாய்ப்புகளைத் தேடுங்கள். சில வேளைகளில் இவற்றையெல்லாம் செய்துவிட்டும் நீங்கள் திரும்பி அதே இடத்துக்கே வரவும்கூடும். பெரும்பாலும் அதற்கான அவசியமிருக்காது எனவே நம்புகிறேன்
நீலேஷ்
1986 இல் பூபதிராஜா தனது இளைய சகோதரரைத் தனது உற்ற நண்பர் ஒருவரின் உதவியுடன் சென்னைக்கு அழைத்திருந்தார். இந்நண்பரின் மனைவியின் சகோதரிதான் நீலேஷின் தாயார் ஜெயகுமாரி. ஜெயகுமாரி 1985 இலேயே, போர் ஆரம்பித்த கையோடு, சென்னைக்கு வந்துவிட்டார். அவரது குடும்ப நண்பர்களுடன் அவர் சென்னையில் வாழ்ந்துவந்தார். சென்னைக்கு வந்து மூன்று வருடங்களில், 1989 இல், நீலேஷின் தந்தைக்கு கனடிய வதிவுரிமை கிடைத்தது. 1992 இல் ஜெயகுமாரியையும் கனடா அழைத்துக்கொண்டது. 1996 இல் நீலேஷின் பெற்றோர் மணமுடித்தனர். முதலாவது குழந்தை விதுஷா 1997 இலும், நீலேஷ் 1999 இலும் பிறந்தனர்.
அகதிகளைப் பொறுத்தவரையில் அப்போது கனடா மிகவும் தாராளமனதோடு செயற்பட்டுவந்தது. ஹொங்க் கொங்க் மீதான நிர்வாக உரிமை 1997 இல் சீனாவுக்கு வழங்கப்பட்டதும் பிரித்தானியா ‘தமது குடிமக்களைக்’ கைகழுவி விட்டிருந்தது. இவர்களில் பெருந்தொகையானோரை அப்போது கனடா தன்னுடன் சேர்த்துக்கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில் தான் இலங்கையிலிருந்து தப்பியோடும் அகதிகளுக்கும் கனடா புகலிடமளித்தது.
கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஒன்ராறியோவின் புறநகர்ப்பகுதிகளில் ஒன்றுதான் மார்க்கம். இலங்கையின் போரினால் புறந்தள்ளப்பட்டு புகலிடம் தேடியவர்கள் பலர் செறிந்துவாழும் பகுதிகளில் இதுவுமொன்று. நீலேஷ் படித்த ஆரம்பப் பள்ளியில் ஏறத்தாழ அனைத்து ஆசிரியர்களுமே வெள்ளை இனத்தவர். ஆனாலும் மாணவர்களில் வெகு சிலரே வெள்ளையர்கள். பெரும்பாலான மாணவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மிகுதியினர் இந்திய, சீன பூர்வீகங்களைக் கொண்டவர்கள். நீலேஷ் தொடர்ந்து இரண்டு உயர்பள்ளிகளில் கல்வியைப் பெற்றார். முதலாவதில் பல முஸ்லிம் மாணவர்களும் இலங்கையர்களும் படித்தார்கள். மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து நின்றார்கள். இந்த வாழ்க்கை அவருக்குப் பிடிக்கவில்லை அதனால் அவர் தனது பாடசாலையை மாற்றிக்கொண்டார். பெரும்பாலும் சீனர்களையும் இலங்கையர்களையும் மாணவர்களாகக் கொண்டிருந்த இரண்டாவது பள்ளியிலும் வெகு சிலரே வெள்ளையர்கள். இங்கு அவர் மிக மகிழ்ச்சியோடு இருந்தார். பாடங்களை விட விளையாட்டிலேயே அவரது மோகம் இருந்தது.

கற்கைக் காலம் முழுவதும் பெற்றோரின் கனவான ‘எஞ்சினியர்’ ஆகும் நோக்கத்தையே பிரதிபலித்தது. இருப்பினும் அது முற்றிலும் உண்மையானது அல்ல என்பதையும் அவர் ஒத்துக்கொள்கிறார். பொறியியலோ, மருத்துவமோ, சட்டமோ அவரது விருப்பக் கல்வியாக ஒருபோதுமே இருக்கவில்லை. மக்களுக்கு உதவிகளைச் செய்யும் தொண்டு நடவடிக்கைகளே அவரது குறிக்கோளாக இருந்தன. அதை அவர் மிகவும் விரும்பியிருந்தார். பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சிதரும் வகையில் காவற்துறையில் இணைவதற்கு அவர் முடிவெடுத்தார். “வாழ்நாள் முழுவதும் காவற்காரனாக வேலைசெய்யப் போகிறாயா” என அவரது மாமா எச்சரித்தார். இளைய சமுதாயத்தைச் சரியான பாதையில் போக வைப்பதே தனது நோக்கம் என அவர் முடிவெடுத்தார். நீதித்துறையின் சிக்கல்களுக்குள் இளையோர் சிக்குப்படாது அவர்களுக்கு உதவிசெய்வதே தனது பணி என அவர் தீர்மானித்திருந்தார்.
காவல்துறையில் இணைவதற்கு முதலில் சமூக நீதித்துறையில் டிப்ளோமாவும் பின்னர் குற்றவியல் நீதித்துறையில் இளமானிப்பட்டமும் பெறவேண்டியிருந்தது. 2021 இல் அவர் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டபோது கோவிட் பெருந்தொற்று அவரது நோக்கங்களைத் தகர்த்துவிட்டது. இரண்டு வருடங்களுக்கு சமூகத் தொண்டுகளைச் செய்வதாக முடிவெடுத்தார். அதன் பிறகு தனது 25 ஆவது வயதில் காவல் துறையில் இணையலாம் என அவர் யோசித்தார். கோவிட் பெருமுடக்கத்தின் காரணமாக அவரால் சமூகப்பணிகளைச் செய்ய முடியவில்லை. இக்காலகட்டத்தில் தனது அன்றாட செலவுகளைச் சமாளிப்பதற்காக கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் ‘ஹோம் டிப்போ’ எனப்படும் நிறுவனமொன்றில் இணைந்து பணியாற்றினார்.
நகர்வு முடக்கம் காரணமாக வாடிக்கையாளர் உள்ளே வந்து பொருட்களைப் பார்வையிட முடியாத நிலையில் ‘ஹோம் டிப்போ’ இணையவழி விற்பனைமுறையைத் தேர்ந்தெடுத்தது. வாடிக்கையாளர்கள் இணையவழி மூலம் பண்டங்களைக் கோரிவிட்டு கட்டிடத்திற்கு வெளியே வாகனங்களில் வரிசையில் வந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே பலவித கோவிட் கட்டுப்பாடுகளினால் சிரமங்களுக்குள்ளாகியிருந்த வாடிக்கையாளருக்கு மெதுவாக அசையும் வாகன வரிசையில் காலத்தைக் கொல்வது மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. கோபம் மீறிட்ட வாடிக்கையாளர்கள் பணியாளர் மீது தமது தமது எரிச்சலைக் கொட்டித் தீர்த்தார்கள். இக்காலகட்டத்தில் தான் அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்னும் கறுப்பினத்தவரை காவல்துறை சுட்டுக்கொன்றதை எதிர்த்து பலவித ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சில காவற்துறையினரின் நடவடிக்கைகளுக்காக முழு காவல்துறையையும் மக்கள் வெறுக்கும் நிலை உருவாகியிருந்தது. எதிர்காலத்தில் இப்படித்தான் காவற்துறை அதிகாரியின் நிலைமை இருக்கப்போகிறது என நீலேஷின் உள்ளுணர்வு சொன்னது. வாரத்தில் நான்கு நாட்கள், 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான வேலைக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் பரிசு அவதூறு என உணர்ந்ததும் அவருக்குப் போதுமென்றாகிவிட்டது. மக்கள் தொண்டுக்காக அவர் தயாராகிவிட்டார்.
2021 ஜூலை முதல் செப்டம்பர் வரை அவர் வேறு பணிகளுக்காக முயற்சி செய்தார். 50 விண்ணப்பங்கள் அனுப்பியும் வேலையேதும் கிடைக்கவில்லை. நவம்பரில் அவரது மைத்துனர் சுகந்தன் சண்முகநாதன் யாழ்ப்பாணத்திலிருந்து கனடா வந்திருந்தார். மைத்துனராக இருந்தாலும் நீலேஷை விட சுகந்தனுக்கு 25 வயது அதிகம். நீலேஷின் தந்தையைப் போலவே சுகந்தனும் இலங்கையிலிருந்து கனடாவுக்கு அகதியாகக் குடிபெயர்ந்தவர். வட அமெரிக்காவிலேயே இரண்டாவது பெரிய தளபாடத் தயாரிப்பு நிறுவனமொன்றில் மூத்த நிர்வாகியாக ஒருகாலத்தில் பணிபுரிந்தவர். நாற்பது வயதுடைய சுகந்தன் தனது பண வளத்தைச் சீர்படுத்திக்கொண்டு 2014 இல் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார். அப்போதிருந்து, சுகந்தன் தனது மனைவி ஷகீலாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்திலும், வடமாகாணம் எங்கிலும் தனது பன்முக வியாபார முயற்சிகளை விஸ்தரித்து வருகிறார். வடக்கின் உணவுகளையும் பானங்களையும் தயாரித்து ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாது இதர வியாபார முயற்சிகளையும் மனதில் கொண்டு 70 ஏக்கர் நிலத்தில் “ஸ்மார்ட் சிற்றி” (Smart City) ஒன்றையும் நிர்மாணித்து வருகிறார்.
சுகந்தன் தனது இரண்டு பிள்ளைகளையும் (ஆணும் பெண்ணும்) யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்திருந்தார். சில காலம் மூதாதையர் நிலத்தில் வாழ்ந்து அனுபவித்த பின் அவர்கள் கனடாவுக்குத் திரும்பி அங்கு பல்கலைக்கழகப் படிப்புகளை முடிக்கவேண்டுமென்பதே சுகந்தனின் நோக்கம். கல்வியை முடித்துக்கொண்டதும அவர்கள் தாம் விரும்பிய இடங்களில் வாழ்ந்துகொள்ளலாம் என்பது சுகந்தன் தம்பதியினரின் முடிவு. சில வருடங்களாக சுகந்தன் நீலேஷுடன் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடிய பலவித வியாபார முயற்சிகளைப் பற்றியும் உரையாடி வருகிறார். காவற்துறை அதிகாரியாக வருவதையே நோக்கமாகக் கொண்டு அதற்காக உழைத்து வந்த நீலேஷ் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு சுகந்தனின் ஆலோசனையை ஏற்று ஒரு மாத யாழ்ப்பாணக் ‘கள ஆய்வை’ மேற்கொள்ளவென யாழ்ப்பாணம் வந்தார்.

ஜனவரி 2022 இல் யாழ்ப்பாணம் வந்த நீலேஷ் பெப்ரவரியில் கனடா திரும்புவதாக இருந்தார். ஆனாலும் மாமா சுகந்தன் – வயது வித்தியாசம் காரணமாக அப்ப்டித்தான் அவர் அழைக்கிறார் – மற்றும் தன் வயதையொத்த சுகந்தனின் மகன் ஷகீல் ஆகியோருடன் கழித்த காலங்கள் அவரது மனதை மாற்றிவிட்டன. யாழ்ப்பாணம் இப்போது அவரது மனதைக் கொள்ளைகொண்டுவிட்டது. அவரது கண்களுக்கு கனடா ஒரு வேகமான ஆனால் ஆழமற்ற ஒரு தேசம். சாதாரணமான வாழ்வொன்றுக்காக இரண்டு வேலைகளைச் செய்யவேண்டிய நிலைமை. சக மனிதர்களுடன் ஒரு ஆழமான உறவுகளை விருத்தி செய்யவோ அல்லது சுய தரிசனத்தைப் பெற்றுக்கொள்ளவோ நேரம் இருப்பதில்லை. யாழ்ப்பாணம் அப்படியல்ல. ஒரு பிரச்சினையை ஆழமாக அணுகுவதற்குப் போதுமான அவகாசத்தை அது தருகிறது. “யாழ்ப்பாணத்தில் விடியவே நீங்கள் பணிகளை ஆரம்பித்து மதியத்துடன் முடித்து விடலாம், மீதி அரை நாளுள் இன்னுமொரு முழு நாள் உங்களுக்காக இருக்கும்” என்கிறார் நீலேஷ்.
யாழ்ப்பாணத்தை அண்டிய கரையோரத் தீவுகளில் ஒன்றான அனலைதீவிலிருந்து வந்த மீன்பிடிப்படகொன்றின் வருகையோடு பிறந்தது நீலேஷின் ஞானம். சுகந்தன், ஷகீல் மற்றும் இருவரோடு இத் தீவில் ஒருநாள் முழுவதையும் கழிக்கும் சந்தர்ப்பம் நீலேஷுக்கு ஏற்பட்டது. இச்சிறிய தீவில் நாளைக்கழித்துவிட்டு கடல்வழிக் காற்றையும் வெளியையும் அனுபவித்துக்கொண்டு படகில் யாழ்ப்பாணம் திரும்பினர். ஐந்தே நிமிடங்களில் அனுபவித்த இந்த நல்லுணர்வை அனுபவிக்க வேண்டுமானால் ரொறோண்டோவில் நீலேஷின் வீட்டிலிருந்து 4 மணித்தியாலங்கள் பயணம் செய்தபின்னர் அடையும் ஆற்றங்கரையில் தான் அது சாத்தியமாகும். அனலைதீவுக் கடலில் அப் படகில் மிதந்தபோது பெற்ற அந்த அனுபவமே நீலேஷின் கண்களைத் திறந்தது.
சுகந்தன் நிர்மாணிக்கும் 70 ஏக்கர் உல்லாசப் பனஞ்சோலைப் போக்கிடத்தில் இப்போது நீலேஷ் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். நீர் விளையாட்டு (water sports) போன்ற உல்லாசத் துறைகள் உலகின் இதர நாடுகளில் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில் அவர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். வடக்கிற்கு உல்லாசப் பயணிகளை வருவிப்பதற்கான நீர்வளப் பாவனைகள் பர்றி அவர் ஆராய்கிறார். இதன் பொருட்டு அவர் கொழும்பிற்குச் சென்று 50 அடி ஓடத்தை இயக்குவற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றதுடன் நீர் மற்றும் மனித பாதுகாப்புகளுக்கான பயிற்சிகளையும் பெற்றுவந்திருக்கிறார். சுகந்தனின் கீழ் பணிபுரியும் முன்னாள் கடற்படை நீர்மூழ்கிப் பயிற்சியாளர் நீலேஷுக்கு ‘ஸ்னோர்க்கிளிங்’ மற்றும் ‘ஸ்கூபா’ நீர்மூழ்கும் வித்தைகளைக் கற்றுத்தந்திருக்கிறார்.
நீலேஷின் முயற்சிகளுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் ஆதரவு தரும் வகையில் இரண்டு படகுகள் மற்றும் அவற்றுக்கான ஓட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளூர் மீனவர்களிடமிருந்து சுகந்தன் கொள்வனவு செய்திருக்கிறார். நீலேஷ் தற்போது ஒரு நீர்க்கீழ் காட்சிச்சாலை (underwater museum), பூங்கா, சதுரங்கம், கரம் உள்ளிட்ட நிலக்கீழ் விளையாட்டுக்கள் ஆகியனவற்றை நிர்மாணிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். உல்லாசப் பயணிகளுக்கோ அல்லது உள்ளூர்வாசிகளுக்கோ பொழுதுபோக்கு என்று சொல்வதற்கு வடக்கில் தற்போது எதுவித வளங்களுமில்லை. இதை நிவர்த்தி செய்ய, சுகந்தனின் ஆதரவுடன் அவரது ‘பனைப் பூங்காவில்’ (Palmyrah Resort) நீலேஷ் பலவித ஆய்வுகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
நீண்ட காலமாக சுகந்தன் நீலேஷுக்கு உபதேசித்து வரும் ஒரு விடயம் ” இது பணம் சார்ந்ததல்ல, வாய்ப்புகள் சார்ந்தது (it’s not about the money it’s about the opportunities) என்பது. “நான் சிறுவனாக இருந்தபோது எப்போதுமே பணமே எனது நோக்கமாக இருந்தது. எனது வாழ்வின் பெரும்பகுதியைத் தவறான காரணங்களுக்காகச் செலவழித்துவிட்டேன்” ” என்கிறார் நீலேஷ். சிறுவனாக இருந்தது முதல் பணத்தைச் சேகரிக்கும்படியே அவருக்கு ஊட்டி வளர்க்கப்பட்டது. யாழ்ப்பாண வாசத்தில், சுகந்தனின் வளர்ப்பும் ஷகீலின் நட்பும் அவரது சிந்தனையில் மாற்றங்களை உருவாக்கிவிட்டன.
இளைஞர்களுக்கு நீலேஷ் கூறும் புத்திமதி: “ஓரிடத்தில் மட்டும் நிற்காதீர்கள். எழுந்து, நடந்து உலகைச் சுற்றி வாய்ப்புகளைத் தேடுங்கள். சில வேளைகளை இவற்றையெல்லாம் செய்துவிட்டும் நீங்கள் திரும்பி அதே இடத்துக்கே வரவும்கூடும். பெரும்பாலும் அதற்கான அவசியமிருக்காது எனவே நம்புகிறேன்”
நீலேஷுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் பின்வரும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்: neelesh.j88@marumoli
( — இக்கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து தனது இரண்டு வயதில், குடும்பத்தினருடன் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம் பெயர்ந்தவர். இலண்டனில் வளர்ந்த இவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம்பெற்றபின் இரண்டு தசாப்தங்களாக தகவற் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார். இதைல் அரைவாசிக்காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை இலங்கையிலும், இந்தியாவிலும் நிர்வகித்தார். 2015 இல் இலங்கைக்குத் திரும்பிய ஜெகன் யாழ்ப்பாணத்தைத் தனது தளமாகக் கொண்டு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். விரும்புபவர்கள் jekhanaruliah@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலம் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.-)
(இக் கட்டுரை லங்கா பிசினெஸ் ஒன்லைன் (Lanka Business Online (LBO)) என்ற இணையப் பத்திரிகைக்காக எழுதப்பட்டுப் பிரசுரமானது. தலைப்பு மற்றும் சிறிய மாற்றங்களுடன், ஆசிரியரின் அனுமதியுடன் இங்கு மீள் பிரசுரமாகிறது- தமிழாக்கம்: சிவதாசன்)