HealthNewsWorld

ஓமைக்குரோன் பரவல் | வித்தியாமான அறிகுறிகள்?

முந்திய திரிபுகளைப் போலல்லாது கொரோனாவைரஸின் ஓமைக்குரோன் திரிபு மிகவும் வித்தியாசமான முறையில் நடந்துகொள்கிறது என பிரித்தானியாவின் மருத்துவ நிபுணர்களில் முன்னோடியான சேர் ஜோன் பெல் தெரிவித்துள்ளார்.

இதுவரை காணப்பட்ட திரிபுகளை விட, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை இலகுவாகப் புறந்தள்ளிவிடும் குணாதிசயம் இத் திரிபுக்கு இருக்கலாமென விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள்.

77 நாடுகளில் காணப்பட்டிருக்கும் இத் திரிபு, முந்திய திரிபுகளைவிட அதி வேகமாகப் பரவும் தன்மையுடையது எனவும் இதுவரை இதனால் நோயாளிகளுக்குத் தீவிர பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் உடலில் அதிகநாட்கள் தங்க நேரிட்டால் அது மேலும் திரிபுறுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்பதால் இப்ம் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



அறிகுறிகள்

முந்திய திரிபுகளின் தொற்றின்போது மனிதரில் காணப்பட்ட நோயறிகுறிகளைப் போல இத் திரிபு அதிக துன்பம் தருவதில்லையாயினும், இதன் அறிகுறிகள் முந்தியவற்றைவிட சற்று வேறுபட்டது என தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிறுவனமான ‘டிஸ்கவரி ஹெல்த்’ முதன்மை நிர்வாகியான டாக்டர் நோச் தெரிவித்துள்ளார்.

ஓமைக்குரோன் திரிபினால் தொற்றப்பட்ட நோயாளிகள் முதலில் தொண்டை அரிப்பை ( scratchy throat) எதிர்கொள்வார்கள் என்றும் அதைத் தொடர்ந்து சளி சேர்க்கையால் மூக்கினுள் அடைப்பு (nasal conjestion) ஏற்பட்டு அதன் பின்னர் வரட்டு இருமல் (dry cough)கண்டு இறுதியாக கீழ் முதுகில் தசை வலி (lower back pain (myalgia)) ஏற்படலாமெனவும் டாக்டர் நோச் கூறுகிறார். இவையனைத்தும் இலேசானதாக இருப்பதால் அவற்றை உதாசீனம் செய்துவிட்டு வெளியில் சென்று மற்றவர்களுக்குப் பரப்பவேண்டாமென அவர் எச்சரிக்கிறார்.

ஓமைக்குரோன் பரவல் தொடர்பான காணொளி (Courtesy: DW, UK)