ஓமைக்குரோன் தாக்கம் | ஒன்ராறியோ மாகாண அரசின் புதிய கட்டுப்பாடுகள்

அதி தீவிர ஓமைக்குரோன் பரவலைக் கட்டுப்படுத்தும்பொருட்டு ஒன்ராறியோ மாகாண அரசு இன்று (ஜனவரி 03), பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.

இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் இத் திருத்தப்பட்ட இரண்டாம் படிக் கட்டுப்பாடுகள் (modified Step 2) பற்றி அறிவித்திருக்கிறார்.



“இப் புதிய நடவடிக்கைகளால் மக்கள் கோபத்துக்குள்ளாகுவார்கள், அது குறித்து சில வேளைகளில் அவர்கள் தடுமாற்றத்துக்கும் உள்ளாகலாம் என்பதஹி நான் புரிந்துகொள்ளும் அதே வேளை இந்நடவடிக்கையை மேற்கொள்ளாமலிருந்தால் அதனால் ஏற்படும் ஆபத்து மிகவும் பாரதூரமானதாக இருக்கும் என்பதையும் நான் உணர்ந்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தரவுகளின்படி ஒன்ராறியோ மாகாணத்தில் 1,232 பேர் கோவிட் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 248 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஓமைக்குரோன் தொற்றுக்குள்ளாகுபவர்களில் 1 வீதமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ப்டக்கூடுமென இத் தரவுகள் எதிர்வு கூறுகின்றன. தற்போதுள்ள நிலையில் மருத்துவ மனைகள் இந்த அளவிலான நோயாளிகளை அனுமதிக்கும் நிலையில் இல்லை எனவும் பெரும்பாலான முன்னிலை மருத்துவப் பணியாளர் மிகவும் களைத்துப்போயுள்ளதாக்வும் பலர் பணிகளைத் துறந்துவருவதாகவும் அறியப்படுகிறது.

மாகாண அரசினால் அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்:

  • ஜனவரி 17 வரை பாடசாலைகள் மூடப்ப்ட்டிருக்கும். மாணவர்கள் அதுவரை இணையவழிக் கற்றலையே பாவிக்க வேண்டும்.
  • உணவகங்களில் உள்ளிருந்து உணவருந்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது
  • தேகாப்பியாச நிலையங்கள் மூடப்படவேண்டும்
  • ஜனவரி 5 முதல், மக்கள் கூடுவது வீட்டுக்குள் / கட்டிடத்துக்குள் அதிக பட்சம் 5 பேரும், வெளியே அதிக பட்சம் 10 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். இக் கட்டுப்பாடு மேலதிக தரவுகள் கிடைக்கும்வரை, 21 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • ஜனவரி 5 முதல் மருத்துவமனைகளில் அத்தியாவசியமற்ற அறுவைச் சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை செயற்பாடுகள் நடைபெறமாட்டா.
  • அங்காடிகள் மற்ரும் சில்லறை வியாபார நிலையங்களில் அவற்ரின் கொள்ளளவின் 50% த்துக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர்
  • உணவகங்கள், மதுவகங்கள் மூடப்படும்
  • கொண்டாட்ட அரஙகுகள், தியேட்டர்கள், திரையரஙகுகள் ஆகியன மூடப்படும்
  • தனிப்பட்ட சேவை வழஙகும் நிலையங்கள் (சிகை அலஙகாரம் போன்றன) 50 வீதம் கொள்ளளவுக்கு வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம்
  • கட்டிடங்களுக்குள் நடைபெறும் திருமண நிகழ்வுகளும் மரணச் சடங்குகளும் 50% கொள்ளளவில் நடைபெற அனுமதியுண்டு
  • பாடசாலைகள் வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களும், வீடுகளில் வைத்துக் கல்வி புகட்ட முடியாத விசேட கல்வித் தேவைகளை வழங்கும் நிறுவனஙகளும் தொடர்ந்தும் பணிகளை வழஙக அனுமதியுண்டு
  • மருத்துவ மற்றும் முன்னிலைச் சுகாதாரப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு இக் காலத்தில் இலவச குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விச் சேவைகள் வழஙகப்படும்
  • அவசியமற்ற வேளைகளில், தொழில்நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அவரவரது பணியாட்களை வீட்டிலிருந்து பணியாற்ற ஒழுஙகுசெய்யவேண்டும்
  • நூலகஙகள் 50% கொள்ளளவில் இயஙக வேண்டும்
  • மியூசியம், கண்காட்சிச் சாலைகள், மிருகக் காட்சிச் சாலைகள் மூடப்படவேண்டும்
  • மூடப்படும் வியாபார நிலையங்களுக்கு ஆதன வரி மற்றும் எரிபொருள் செலவுகளின் 50 வீதம் நிவாரணமாக வழஙகப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி நடுப்பகுதியிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படும்


இதே வேளை ஓமைக்குரோன் தொற்றுக்குள்ளாகியோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வீதம் ஜனவர், பெப்ரவரி மாதங்களில் வேகமாக அதிகரிக்கச் சாத்தியமுண்டு என ஒன்ராறியோ மாகாண மருத்துவ அதிகாரி டாக்டர் கியெரன் மூர் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ மாகாணத்தின் ஆங்கிலத்திலான அறிக்கையைப் பார்வையிட இங்கே அழுத்தவும்