ஒஸ்கார்: ‘யானை கிசு கிசுப்பவர்கள்’ (The Elephant Whisperers) சிறந்த விவரணப்படமாகத் தெரிவு
தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்திலுள்ள தேப்பக்காடு முதுமலை புலிகள் காப்பகத்தில் படமாக்கப்பட்ட The Elephant Whisperers நேற்று நடைபெற்று முடிந்த ஒஸ்கார் விருது விழாவில் 2023 க்கான சிறந்த ஆவணப் படமாகத் தெரிவாகியிருக்கிறது. 105 வருடங்கள் பழமையான, ஆசியாவிலேயே மிகவும் புராதனமான இக் காப்பகத்தில் பணி புரியும் பொம்மன், பெல்லி தம்பதிகளால் காப்பாற்றப்பட்ட ரகு என்ற யானைக் குட்டியொன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை கார்திகி கொண்சால்வெஸ் இயக்கியிருந்தார். இதுவே இவர் இயக்கிய முதற் படம்.
பொம்மன் பொதுவாக யானைப் பாகனாகவும் பெல்லி அம்மா யானையைப் பாராமரிப்பவராகவும் பணிபுரிகிறார்கள். மிக மோசமாகக் காயமடைந்த நிலையில் ரகுவைக் காப்பாற்றிக் குணமாக்குவது இப்படத்தின் கதை.
நீலகிரி மலைத்தொடரிலிருந்து உருவாகும் மோயாறு ஆற்றங்கரையில் தேப்பக்காட்டிலுள்ள புலி காப்பகத்தில் இருக்கும் யானை முகாமில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 28 யானைகள் இங்கு வைத்து விசேடமாகப் பணிக்கப்பட்ட யானைப் பாகர்களால் பராமரிக்கப்படுகின்றன.
இப்படத்தை எடுப்பதற்காக கார்த்திகி கொண்சால்வெஸ் முதுமலை முகாமில் 5 வருடங்கள் தங்கியிருந்தார். 41 நிமிடங்களுக்கு காட்சி தரும் இப்படம் தம்பதிகளான பொம்மன், பெல்லி ஆகியோரால் எடுத்து வளர்க்கப்பட்ட ரகு என்ற யானைக்குட்டியுடனான அவர்களது நெருக்கமான உறவை வெளிப்படுத்துகிறது.
முதுமலை புலி முகாமில் இருக்கும் இந்த தேப்பக்காடு யானை முகாமை அண்டி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுநாயகன் குலத்தைசேர்ந்த, பொம்மன், பெல்லி போன்ற பல குடும்பங்கள் வாழ்கின்றனர். மக்கள் குடியிருப்புக்களுக்கு வந்து அழிவுகளைச் செய்யும் யானைகளை வசப்படுத்தி அவற்றுக்கு உரிய பயிற்சிகளை அளித்து கும்கி யானைகளாக மாற்றி மனிதருடன் மோதுவதைத் தவிர்க்க வைப்பதே இவர்களது பணி.
இதே வேளை காடுகளிலிருந்து மனிதக் குடியிருப்புக்களுக்கு வரும் யானைகளைத் துரத்துவதற்கும் இய்யானைகள் பயிற்றப்பட்டுள்ளன. இம்முகாமைச் சேர்ந்த கிருமாறன், வாசிம் ஆகிய யானைப் பாகர்கள் இரு காட்டு யானைகளைப் பிடித்து அவற்றைப் பயிற்றுவித்து நற்குணமுள்ளவையாக மாற்றியுள்ளனர். மூர்த்தி, ஈஸ்வரன் ஆகிய இய்யானைகளில் பயிற்றப்படுவதற்கு முன்னர் மூர்த்தி 22 பொதுமக்களைக் கொன்றிருந்தது. தேப்பக்காடு முகாமில் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் மூர்த்தியைத் தனது பேரப்பிள்ளைகளோடு விளையாட விடுகிறார் கிருமாறன். ஆனால் ஈஸ்வரனைப் பராமரிக்கும் வாசிம் மூன்று தடவைகள் ஈஸ்வரனால் தாக்கப்பட்டிருக்கிறார்.
‘யானைக் கிசு கிசுப்பவர்கள்’ படத்தின் பிரதான பாத்திரங்களான பொம்மனும் பெல்லியும் இன்னும் அப்படத்தைப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் இரண்டு யானைகள் மின்சாரம் தாக்கி மரணமாகியதைத் தொடர்ந்து அனாதையாக்கப்பட்ட இரண்டு குட்டிகளைத் தத்தெடுத்துப் பராமரிக்கும் பணியில் இவர்கள் இருவரும் தற்போது தமிழ்நாடு அரசினால் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
ஒஸ்காரில் விருதைப் பெறும்போது கார்த்திகி கொன்சால்வேஸ் இப்படிக் கூறியிருந்தார்: ” இன்று இங்கு நான் நிற்பதற்குக் காரணம் எமக்கும் இயற்கை உலகுக்குமான அந்த புனிதமான உறவைப் பற்றிப் பேசுவதற்காக; சுதேசிய சமூகங்களுக்கு நாம் அளிக்கவேண்டிய மரியாதைக்காக; ஏனைய உயிர்களுடன் நாம் இவ்வெளியைப் பகிர்ந்துகொல்ளவேண்டுமென்பதற்காக; இறுதியாக நமது ஒன்றிணைந்த வாழ்வுக்காக”
இப்படம் வெளிவந்து மக்கள் மனங்களை வென்றுகொள்ளும்போது பொம்மனும் பெல்லியும் ரகுவை இழந்துவிட்டார்கள். ரகு இப்போது வேறு பாகர்களின் கவனிப்பில் இருக்கிறது. உலகத்தை வென்ற ரகுவால் சமூகத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. பெல்லி அம்மாவுக்கு இப்போ அதிகம் வேலை இல்லை, வீட்டில் தான் இருக்கிறார். வன அதிகாரிகளின் வீடுகளில் தற்காலிக வீட்டு வேலைகளைச் செய்து பிழைக்கிறார் இந்த ஒஸ்கார் நட்சத்திரமான பெல்லி அம்மா. அவர் தமிழ்நாட்டு வனத் திணைக்களத்தின் நிரந்தர பணியாளராகப் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் இப்படத்தின் மூலம் கிடைக்கப்படும் வருமானம் எதுவும் அவருக்குப் போகாது.

“ரகு என்னிடம் கொண்டுவரப்படும்போது அது மிகவும் மோசமான நிலையில் காயப்பட்டிருந்தது. வால் வெட்டப்பட்டுவிட்ட நிலையில் அது பிழைக்குமென்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனாலும் இயன்ற வரைக்கும் நாம் முயற்சி செய்வோம் என்று எனது குடும்பத்தினர் வற்புறுத்தினர். ரகு பிழைத்துக்கொண்டதுமல்லாது ஒஸ்கார் வரைக்கும் எங்களைக் கொண்டுபோய் விட்டிருப்பது எமக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது” என்கிறார் பெல்லி அம்மா.
கார்திகி கொன்சால்வெஸ்
கார்திகி கொன்சால்வெஸ் பிங்ஹாம்டன், நியூ யோர்க்கில் பிறந்து தமிழ்நாடு ஊட்டியிலுள்ள நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில் வளர்ந்தவர். கோயம்புத்தூர் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் விஞ்ஞானக் கல்லூரியில் படித்து 2007 இல் பட்டம் பெற்றவர். தற்போது இயற்கைப் படப்பிடிப்பு, சூழல் காப்பு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.