Health

ஒலி அலைகள் மூலம் புற்றுநோய் சிகிச்சை

ஒலி அலிகளைப் பாய்ச்சுவதன் மூலம் புற்றுநோய்க் கட்டிகளை நிர்மூலமாக்கும் புதிய சிகிச்சை முறையொன்றை நோயாளிகளில் பிரயோகிப்பதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க உணவு – மருந்து நிர்வாகம் (Food and Drug Administration) வழங்கியிருக்கிறது. அமெரிக்க மிச்சிகன் மாநிலத்திலுள்ள சில பொறியியலாளர்களும் மருத்துவர்களும் இணைந்து 2009 இல் உருவாக்கிய ஹிஸ்ரோசோனிக்ஸ் (Histosonics) என்ற நிறுவனம் மேற்கொண்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு மனிதர்கள் மீது இச்சிகிச்சையை மேற்கொள்ள FDA நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

மனிதர்கள் மீதான சிகிச்சைப் பயிற்சி (human trial) 2021 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் றொஜெல் புற்றுநோய் மையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஹிஸ்ரோட்றிப்ஸி (Histotripsy) எனப்படும் இச்செயல்முறையின்போது குறிக்கப்பட்ட அதிர்வெண்ணில் அதிரும் ஒலி அலைகளை புற்றுநோய் கட்டிகளின் மீது செலுத்துவார்கள். நோயாளர் மீதான பயிற்சி சிகிச்சையின்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் நோய் பரவிய (metastatic) ஈரல் புற்று நோயாளர்கள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்கள். இப்பயிற்சி சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஏற்படுத்திய நன்மைகளையும் அதே வேளை அவர்களுக்கு இதன் மூலம் ஏற்படக்கூடிய தீங்குகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். புற்றுநோய்க்குத் தற்போது அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை முறைகளான சத்திர சிகிச்சை (surgery), கதிரியக்கம் (radiation), வேதிப்பொருள் சிகிச்சை (chemotherapy) ஆகியவற்றின் போது நோயாளிகளின் உடல்களில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த ஒலி அலைச்சிகிச்சை மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்கு இதுவரை பக்கவிளைவுகள் ஏதுவும் ஏற்படவில்லை என இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.


இச்சிகிச்சையின்போது புறஒலி அலைகளை (ultrasound waves) புற்றுநோய்க்கட்டிகளின் மீது உடலுக்கு வெளியே இருக்கும் ஒரு கருவி மூலம் பாய்ச்சுகிறார்கள். இச்செயல்முறையின் போது நுண் குமிழிகள் (microbubbles) விரிந்து சுருங்குவதால் அவற்றைச்சுற்றியுள்ள (புற்றுநோய்க்கட்டியினுள்) நோய்க்கலங்கள் தகர்க்கப்படுகின்றன. இதன் மூலம் ஏற்படும் கழிவுகள் உடலின் நோயெதிர்ப்பு கலங்களால் சுத்திகரிக்கப்படுகின்றன. இந்நடைமுறையின்போது புற்றுநோய்க் கட்டியின் வெளிப்புறம் சிதையாமல் இருப்பதனால் கொல்லப்படாத நோய்க்கலங்கள் தப்பி இரத்த ஓட்டத்தில் கலந்து நோயை இதர உறுப்புகளுக்குப் பரவுவது (metastasis) தவிர்க்கப்படுகிறது. (மருத்துவர்கள் சில புற்றுநோய்க்கட்டிகளை சத்திர சிகிச்சை மூலம் அகற்றத் தயங்குவதற்கு இப்படியான பரவலே காரணம்)

இச்சிகிச்சை பெறும் நோயாளிகள் இதர புற்றுநோய்ச்சிகிச்சைகளில் போல மருந்து ஒவ்வாமை, நீண்ட நோயாறு காலம் ஆகியவற்றைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். அது மட்டுமல்லாது இதில் பாவிக்கப்படும் ஒலிக்கற்றை நோயிழையத்தை மட்டுமே குறிவைத்து பிரயோகிக்கப்படுவதால் அருகிலுள்ள ‘நல்ல’ இழையங்கள் பாதிப்புக்குள்ளாவதில்லை.

இக்கருவியை உருவாக்கிய ஹிஸ்ரோசோனிக்ஸ் நிறுவனம் எடிசன் (Edison) என்னும் பெயரில் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சை நிலையங்களுக்கும் விற்பனை செய்கிறது. இக்கருவியில் உடலுள்ளுறுப்புக்களை ஆராயும் புறஒலி (ultrasound) கருவியும் இணைக்கப்பட்டுள்ளதால் சிகிச்சையின்போதே புற்றுநோய்க்கட்டிகளை உடனுக்குடன் பார்வையிடக்கூடிய வசதியுமுண்டு.

மனித் சிகிச்சைக்கு முன்னர் எலிகளின் மீது இச்சிகிச்சை பரீட்சிக்கப்பட்டபோது 50% முதல் 70% வரையிலான புற்றுநோய்க் கலங்கள் அகற்றப்பட்ட பின்னர் சிதைக்கப்பட்ட கலங்களை இனம்கண்டு அகற்றிய நோயெதிர்ப்புக் கலங்கள் தொடர்ந்தும் மீதமுள்ள நோய்க்கலங்களை அகற்றியமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடலின் புற்றுநோயெதிர்ப்பு சக்தி தொடர்ந்தும் செயற்பட்டமையும் அவதானிக்கப்பட்டது.

இதிலுள்ள மிகவும் ஆச்சரியமான விடயமென்னவென்றால் ஹிஸ்ரோட்றிப்ஸி என்ற இச்சிகிச்சை முறையின்போது புற்றுநோய்க் கலங்களின் வெளிச்சுவர்கள் அகற்றப்படுவதால் அதன் பின்னாலுள்ள அன்ரிஜென் (antigen) எனப்படும் புரதத்தை உடலின் நோயெதிர்ப்பு கலங்கள் இனம்கண்டு அக்கலங்களை உடனடியாக அகற்றிவிடுகின்றன. மாறாக கதிரியக்க மற்றும் வேதிப்பொருட் சிகிச்சைகளின்போது புற்றுநோய்க்கலங்களிலுள்ள அன்ரிஜென் புரதம் முற்றாக அழிக்கப்பட்டு விடுவதால் உடலின் நோயெதிர்ப்பு கலங்களால் புற்றுநோய்க்கலங்களை இனம்காண முடியாமல் போய்விடுகிறது.

ஹிஸ்ரொசோனிக்ஸ் நிறுவனத்தின் உருவாக்கத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பங்குண்டு என்பதோடு அதன் வர்த்தக இலாபத்திலும் பங்குண்டு என்பதனால் இக்கருவியின் தொழிற்பாடு, நோயாளிகளின் பலன்கள், பக்க விளைவுகள் போன்றவை பற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(Credit: Erica Bass/Rogel Cancer Center/Michigan Medicine)