Health

ஒலிவ் எண்ணை: முதுமை மறதியால் ஏற்படும் மரணத்தைக் குறைக்கிறது

முதுமை மறதி பற்றிப் பல கட்டுரைகளை நரம்பியல் நிபுணரான டாக்டர் கனக சேனா அவர்கள் இவ்விணையத் தளத்தில் எழுதியுள்ளார். இதர வியாதிகளைப் போலல்லாமல் இவ்வியாதியின் தோற்றம், காரணம், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அறிகுறிகள், நோயைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் என இதுவரை உறுதியாக எவராலும் கூறமுடியவில்லை. பெரும்பாலும் 65 வயதுக்குப் பின்னர் தோன்றும் மறதி ஒன்றுதான் இந்நோய்க்கான ஆரம்ப சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. ஆனால் வயது முதிர்ச்சியின்போது வெளிப்படும் இயல்பான ஞாபக மறதியை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவருக்கு இந்நோய் வந்துவிட்டது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட முடியாது.

மூளையில் ஞாபகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் ஹிப்போகம்பஸ் என்னும் பகுதியில் இருக்கும் நரம்புக் கலங்கள் செயலிழந்துபோவதிலிருந்து இந்நோய் / மறதி ஆரம்பிக்கிறது. மனிதரின் நரம்புத் தொகுதியில் பலவிடங்களில் இந்நரம்புக் கலங்கள் காணப்படுகின்றன. பல்வேறு நரம்புக்கலங்கள் ஒன்றுடன் ஒன்று இரசாயன முறையில் இணைந்து சமிக்ஞைகளை (signals) கடத்துவதன் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ஒரு கணனியில் எப்படி தகவல்கள் சேமித்துவைக்கபட்டு (Read Only Memory (ROM)) தேவைப்படும் நேரத்தில் அவை மீட்டெடுக்கப்படுகின்றனவோ அப்படித்தான் மூளையின் ஞாபகசக்தியும் இப்படியான கலங்களில் சேமித்து வைக்கப்பட்டு தேவையான போது மீட்டெடுக்கப்படுகிறது. கணனியில் ROM உடனான தொடர்பு துண்டிக்கப்படும்போது அல்லது ROM முற்றாக அழிக்கப்படும்போது அதிலுள்ள தகவல்களை மீட்டெடுக்க முடியாமல் போகிறது. இதே போலத்தான் மூளையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க முடியாமல் போகும்போது அதை ஞாபக மறதி என்கிறோம்.

ஞாபக மறதியில் இரண்டு வகையுண்டு. ஒன்று குறுங்கால ஞாபகம் (short term memory) மற்றது நீண்ட கால ஞாபகம் (long term memory). புலன்கள் கொண்டுவரும் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு தேவையெனக் காணப்படுவன இந்த இரண்டில் ஒன்றில் சேமிக்கப்படுகின்றன. குறுங்கால ஞாபகம் அதிக பட்சம் 30 செக்கண்டுகள் வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும். மூளையின் நரம்புக்கலங்களுக்கு செல்லும் இரத்தம் தடைப்படும் சந்தர்ப்பத்தில் (பக்க வாதம், இரத்தக் கசிவு, விபத்து, உயரழுத்தம் போன்ற காரணங்களினால்) இக்கலங்கள் இறக்க நேரிட்டால் இஞ் ஞாபகங்களும் சேர்ந்தே அழிக்கப்படுகின்றன. அதே வேளை இக்கலங்களுக்கிடையேயான தொடர்புகள் (synaptic connections) துண்டிக்கப்பட்டு ஆனால் கலங்கள் உயிரோடு இருந்து, தொடர்பு மீளவும் ஏற்படுத்தப்படுமாயின் இழந்த ஞாபகம் மீட்டெடுக்கப்படும். நரம்புக் கலங்களால் சுரக்கப்படும் நரம்பியக் கடத்தி (neurotransmitters) எனப்படும் இரசாயனப் பதார்த்தங்களே நரம்புக் கலங்களிடையேயான இத்தொடுப்புக்களை ஏற்படுத்துகின்றன. இக்கடத்திகள் சீராக இயங்க கல்சியம், பொட்டாசியம் போன்ற மூலகங்கள் அத்தியாவசியமாகின்றன. இவற்றில் குறைபாடு இருக்கும்போதும் ஆரோக்கியமான ஞாபக சக்தியை எதிர்பார்க்க முடியாது.

விபத்து மற்றும் இரத்தோட்டம் சம்பந்தமான காரணங்களினால் ஞாபகம் இழக்கப்படுவதை விட முதுமை காரணமாகவோ (aging) அல்லது முதுமைக் காலத்தில் நரம்புக்கலங்கள் சிதைவடைவதன் காரணமாகவோ (degeneration) நரம்புக்கலங்கள் தமது செயற்பாட்டைச் சிறிது சிறிதாக இழப்பதன் மூலம் நீண்ட காலத்தின் பின்னர் மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக ஏற்படும் வியாதிகளில் முக்கியமானவை அல்சைமர்ஸ் (AD) மற்றது பார்க்கின்சன்ஸ். இதைவிட வேறு வியாதிகளும் உண்டு ஆனால் முதியவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் அதிக சிரமத்தைத் தருபவை இந்த இரண்டு நோய்கள் தான். நரம்புத் தொகுதியின் இத் தொடர்ச்சியான சீரழிவு சில்கவேளைகளில் இரண்டு தசாப்தங்கள் கூட நீடிக்கலாம். இதில் ஞாபகமிழப்பு என்பது பெரிதாகப் பார்க்கப்படாவிட்டாலும் நோய் முற்றி இறுதிக் காலங்களில் இதர முக்கிய உறுப்புகளைப் (இதயம், சிறுநீரகம், சுவாசப்பை போன்ற உறுப்புகள்) பாதிக்கும்போது நோயாளிகள் அதிக சிரமங்களுக்குள்ளாகின்றனர். இவ்வுடலுறுப்புகள் செயலிழக்கும்வரை, ஞாபக மறதியைத் தவிர, வேறெந்த அறிகுறிகளையும் உடல் வெளிக்காட்டாமையால் அதற்கான சிகிச்சைகள் எதையும் மருத்துவ சமூகம் பரிந்துரைக்க முடியாமல் போகிறது.

அல்சைமர்ஸ் வியாதி மூளையின் ஞாபகத்திற்குப் பொறுப்பான பகுதியான ஹிப்போகம்பஸ் என்னும் உறுப்பில் ஆரம்பமாகிறது. இங்குள்ள நரம்புக் கலங்கள் இறந்துபோவதுடன் அயலிலுள்ள இதர கலங்களுடனான தொடர்புகளும் துண்டிக்கப்படுவதுடன் இது ஆரம்பமாகிறது. சிறிது சிறிதாக இச்செயற்பாடு அயலுறுப்புகளுக்கும் பரவுகிறது. துர்ப்பாக்கியமாக இந்நடவடிக்கைகளை இரத்தப் பரிசோதனை போன்றவற்றின் மூலம் (இதுவரை) அறிய முடியவில்லை. இது பரவி மூளையின் முற்பகுதியை (frontal sensory cortex) அடையும்போது புலனாட்சித் திறமைகள் (cognitive skills) குறைவடைய ஆரம்பிக்கும். தீர்மானங்களை எடுப்பதில் சிரமமும் தாமதமும் ஏற்படலாம். இதே போன்று பார்க்கின்சன்ஸ் வியாதி உள்ளவர்களில் இயக்க கட்டுப்பாடு (mortor cortex) நிலையற்றதாகவும் அவயவங்களிடையேயான ஒருங்கிணைப்பு சீரற்றதாக இருப்பதும் (நடையில் தடுமாற்றம் / தாமதம்) சில அறிகுறிகள்.

இதே வேளை இருதயத் துடிப்பு, வெப்பநிலைச் சமநிலை போன்ற பல செயல்கள் சீராக நடைபெறுவதை மூளையே மேற்பார்வை செய்கிறது. உடலில் அவ்வப்போது தேவையான ஹோர்மோன்களையும், நரம்பியக் கடத்திகளையும் (neurotransmitters) சுரப்பதற்கான கட்டளைகளை மூளையே பிறப்பிக்கிறது. உயிராபத்து ஏற்படும் நிலையில் தசைகளைப் பலமாக்குவதற்கு கோர்ட்டிசோல் (cortisol) போன்ற ஹோர்மோன்கள் அவசியம். ஆனால் ஆபத்து தீர்ந்ததும் உடலைச் சமநிலைக்கு உடனடியாகக் கொண்டுவந்துவிடவும் வேண்டும். இருதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிப்பதா வேண்டாமா அல்லது வுயர்வைச் சுரப்பிகளைத் தூண்டி உடலின் வெப்பநிலையைக் குறைப்பதா இல்லையா அல்லது சுவாசத்தை முடுக்கிவிட்டு அதிக ஒக்சிசனை உள்ளெடுப்பதா இல்லையா என்ற தீர்மானங்களை மூளை எடுக்கும்போது அவற்றைச் செயற்படுத்துபவை இந்த நரம்புக் கலங்கள் தான். எனவே அல்சைமர்ஸ் வியாதி முற்றிய நிலையில் நரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பினால் இருதயம், சுவாசப்பை, சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் இயக்கம் சீரற்றதாகிவிடுகிறது. எந்தவித மருந்துகளினாலும் இவ்வுறுப்புகளின் சீரான இயக்கத்தை நிலைநிறுத்த முடியாமல் போகிறது. இதனால் தான் அல்சைமர்ஸ் போன்ற வியாதிகளால் மரணம் ஏற்படுகிறது.

உலகில் வாழும் மனித குலத்தில் மத்திய தரைப்பிரதேச மக்களிடையே இருதய வியாதிகள் குறைவு; அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என பல ஆய்வுகள் கண்டறிந்திருந்தன. அவர்களது உணவு முறை இதற்கு முக்கிய பங்களிக்கிறது எனச் சிலர் கூறி வருகின்றனர். இவர்களிடையே முதுமை மறதியின் பாதிப்பு குறைவு எனவும் அறியப்பட்டிருந்தது. ஆனால் இவற்றின் காரணங்களென எதையும் குறிப்பாக ஆய்வாளர்களால் உறுதியாகச் சொல்ல முடியாமலிருந்தது.

இப்போது அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு ஆய்வு அவர்களின் நீண்ட நோயற்ற வாழ்வுக்கு ஒலிவ் எண்ணையும் ஒரு காரணமெனக் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் உணவுடன் ஒரு கரண்டி ஒலிவ் எண்ணையைச் சேர்த்துக் கொண்டால் நரம்புச் சிதைவினால் ஏற்படும் மரணத்தை 30% த்தால் குறைக்க முடியுமென ஹார்வார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஒலிவ் எண்ணையில் காணப்படும் பதார்த்தங்கள் நரம்புகள் சீரழியாமல் பார்த்துக்கொள்கின்றன என்கிறார்கள் ஹார்வார்ட் விஞ்ஞானிகள்.

அல்சைமர்ஸ் போன்ற நரம்புச் சீரழிவு வியாதியால் உலகில் தற்போது 55 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான எந்தவித வழிவகைகளும் இல்லாத நிலையில் சரியான உணவு, தேகாப்பியாசம், உள அப்பியாசம் போன்றவற்றினால் மட்டுமே இந்நோயின் தாக்கத்தைத் தாமதப்படுத்த முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். Photo by Steven HWG on Unsplash