• Post category:SPORTS / WORLD
  • Post published:March 24, 2020
Spread the love

கொறோணாவைரஸ் தொற்று காரணமாக, இந்த வருடம் (2020) யப்பானில் (டோக்யோ) நடைபெறவிருந்த ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள், அடுத்த வருடத்துக்குப் பின்போடப்பட்டுள்ளன.

இவ்வறிவித்தலை, யப்பானிய பிரதமர் ஏப் ஷின்சோவும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இவ் வருடம் ஜூலை 24 அன்று உத்தியோகபூர்வமாக போட்டிகள் ஆரம்பமாகவிருந்தன. நோய்ப் பரவல் காரணமாகக் கனடா உட்படப் பல நாடுகள், தாம் போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்தன.

யாபானிய அரசு, டோக்யோ 2020 அமைப்புக் குழு, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பணிப்பாளர் சபை ஆகியன இன்று (செவ்வாய்) கூடி எடுத்த முடிவின் பிரகாரம் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றைக் காரணம் காட்டிப் போட்டிகளைப் பின்போடும்படி பல சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுத்துவந்த போதிலும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இது குறித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் இருந்தது. சென்ற ஞாயிறன்று, ‘இன்னும் நான்கு வாரங்களில் முடிவை அறிவிப்போம்’ என அது தெரிவித்திருந்த நிலையில் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தம்மால் கலந்து கொள்ள முடியாது என நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்திருந்தன.

ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகளைப் பின்போடுவது பற்றிய ஆலோசனைகள கடந்த சில நாட்களாகப் பரிசீலிக்கப்பட்டு வந்தது எனவும், திட்டமிட்டபடி ஜூலை 24 இல் போட்டிகளை ஆரம்பிக்க முடியாது என்பது ஓரளவு உறுதியாக இருந்தது எனவும் கனடிய ஒலிம்பிக் அமைப்பின் அங்கத்தவர் டிக் பவுண்ட் திங்களன்று (நேற்று) தெரிவித்திருந்தார்.



” எமக்குத் தரப்பட்ட தகவல்களின்படி, சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு, யப்பானில் நடைபெறவிருந்த இவ்வருடத்துக்கான போட்டிகளைப் பின்போடும் முடிவை எட்டியிருக்கின்றது” என அவர் தெரிவித்ததாக USA Today பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

“விளையாட்டு வீரர்களினதும், உலக சமூகத்தினதும் ஆரோக்கியமும், பாதுகாப்பும் தான் முக்கியம்” என கனடிய ஒலிம்பிக் அமைப்பு ஞாயிறன்று அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. அதன் முடிவுக்கு கனடிய அரசும் ஆதரவு தெரிவித்திருந்தது.

Print Friendly, PDF & Email