Entertainment

ஒற்றைக் கிண்ணம் (The Single Tumbler)

மாயமான்

சுமதி சிவமோகன் தயாரிப்பில் உருவாகிய ‘ஒற்றைக் கிண்ணம்’ (The Single Tumbler), இவ்வருட சர்வதேச தென்னாசிய திரைப்படவிழாவில் கலந்துகொள்கிறது. வட அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இத் திரைப்படவிழா இவ்வருடம் ஆகஸ்ட் 12-22 வரை இணையவழியாக அரங்கேறுகிறது.

திரைப்பட விழாவின் ஐந்தாம் நாள் கண்பிக்கப்படவிருக்கும், தமிழ் மொழியிலான ‘ஒற்றைக் கிண்ணம்’ (ஒற்றைத் தம்ளர் எனவும் அழைக்கப்படுகிறது) 75 நிமிடங்களுக்கு நகரும் ஒரு முழுநீளப் படம்.

ஈழப்போரின் முடிவிற்குப் பிறகு, குழப்பகரமான நிலையில் தான் விட்டுச் சென்ற உறவுகளைப் பார்க்க இலங்கை திரும்பும் ஒரு பெண்ணின் (லலிதா) வலி நிறைந்த அனுபவங்களைத் தொடுத்துக் கதையாக்கியுள்ளார் சுமதி.

கசப்பான நினைவுகள் நிழலாகப் பின்தொடர அவற்றை உதறித் தாள்ளிவிட முடியாமல் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் எண்ணற்ற மனிதர்களின் கதைகள் நெடுங்கதையாக்கப்படிருக்கிறது. டெய்சி ரீச்சர் ஏன் அந்த ‘ஒற்றைக் கிண்ணத்தை’ விட்டுப் பிரிய மறுக்கிறார்? யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்டபோது பாத்திமா விடுதலைப் புலிகள் மீது சாபமிட்டாரா? ஏன் சகோதரர் ஜூட் காணாமல் போனார்? ஜெஸியும் அந்தனியும் எப்படியான இரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்?

வங்க தேச சினி மேக்கிங்க் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்ட ‘ஒற்றைக் கிண்ணம்’, ஜய்ப்பூர் சர்வதேச திரைப்படவிழாவிலும் யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவிலும் (2020-21) அரங்கேறியிருந்தது. அத்தோடு, ‘இமாஜின் இன்டியா சர்வதேச திரைப்படவிழாவில் அக்டோபர் 2021 இல் காண்பிக்கப்படவிருக்கிறது.

“போர் பற்றிய எந்தவொரு காட்சியும் இணைக்கப்படாமலேயே அதன் வலிபொதிந்த விளைவுகளை ஆழமாகப் பதிப்பதுடன் போரின் தேவை, பயன் பற்றி மீள்கருத்துருவாக்கத்தை ஒருவர் மனதில் பதிக்கும் வலிமையான படம். கதை நகர்த்தப்படும் விதம், பின்னணியில் போர் நடந்துகொண்டிருக்கும் ஒருவித பிரமையை ஏற்படுத்துகிறது. போக்கிடமில்லாம்ல், போகும் வழி தெரியாமல், வழிகாட்ட எவருமில்லாமல் அல்லாடும் ஒரு தேசத்தை இப் படம் கண்முன் கொண்டு வருகிறது” என எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சரத் கெல்லெபோதா இப் படம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்க்கருத்துடையவர்களால் அரசியல் நோக்கோடு , திரைப்படவிழாக்களை இலக்கு வைத்து எடுக்கப்பட்ட இன்னுமொரு படம் என்ற விமர்சனமும் இப் படத்தின்மேல் வைக்கப்படுகிறது.

யாழ் சர்வதேச திரைப்படவிழாவில் இப்படம் காண்பிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற பின்னூட்டக் கருத்தரங்கின்போது ‘அலை’ பத்திரிகை ஆசிரியரும் விமர்சகருமாகிய அத்தனாஸ் யேசுராசா தனது முகநூலில் எழுதிய விமர்சனத்தின் இணைப்பையும் இங்கு பதிவு செய்கிறேன்.

(https://www.facebook.com/jesurasa.athanas.35/posts/1631147183753778)

இத் திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் https://www.iffsavirtual.com/ எந்ற இணைப்பின்மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம்.