Sri LankaUS & Canada

ஒற்றுமையாகத் தமிழ் ஈழத்தைப் பிரித்துத் தந்தால் US$ 52 பில்லியன் வெளிநாட்டுக்கடனை அடைக்கப் புலம்பெயர் தமிழர் தயார்!

– ‘பைடனுக்கான தமிழர்கள்’ அமைப்பு

சுமுகமாத் தமிழ் ஈழத்தைப் பிரித்துத் தந்தால் இலங்கையின் முழு வெளிநாட்டுக்கடனையும் தாம் தருவதற்குத் தயார் என அமெரிக்காவிலிருக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்பான ‘பைடனுக்கான தமிழர்கள்’ (Tamils for Biden) தெரிவித்துள்ளது.. “இலங்கை தனது 90% மான இராணுவத்தை வடக்கு கிழக்கில் வைத்துள்ளது. இந்துக் கோவில்களில் புத்த சின்னங்களைக் கொண்டுவந்து வைக்கிறது. தமிழர் நிலங்களைப் பறித்துவருகிறது” என ஜூன் இல் வெலியிட்ட அறிக்கையில் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

“இலங்கையின் அரசியல் தலைவர்களினால் சமீபத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பில், தற்போது இலங்கை எதிர்நோக்கும் மிகவு மோசமான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து அதைக் காக்க புலம்பெயர் தமிழர்கள் உதவிசெய்ய வேண்டுமெனக் கேட்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் முகமாக EIN Presswire.com இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் நியூ யோர்க்கைச் சேர்ந்த ‘பைடனுக்கான தமிழர்கள்’ அமைப்பின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பல்வேறுஅமைப்புகள், பொருளாதார பலமுள்ளவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இலங்கையைப் பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மீட்கவும், அதேவேளை தமிழர்களைச் சிங்களவர்களின் ஒடுக்குமுறையிலிருந்து மீட்பதோடு இனப்படுகொளையொன்றைத் தவிர்க்கவும் ஒரே வழி தனி ஈழம் ஒன்றை அமைப்பதுதான். இதைச் சுமுகமாகச் செய்துதர இலங்கை அரசு முன்வருமானால் அதன் மொத்த வெளிநாட்டுக் கடனான $US 52 பில்லியன்களையும் தருவதற்கு தாம் தயாராக இருப்பதாக இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை பல மூலகாரணங்களைக் கொண்டது, அதிலொன்று நடைபெற்ற யுத்தம். இலங்கை பட்ட கடனின் பெரும்பங்கு போரிற்காண பேரழிவு ஆயுதங்களை வாங்குவதற்கே. அரசாங்கத்திலும் பாதுகாப்புத் திணைக்களத்திலுமுள்ள ஊழல் பெருச்சாளிகளே இந்த நிலைக்குக் காரணம்.

அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவ்டிக்கைகளினால் ஏராளமான சிறிய தொழில் முனைவர்களும், உயர் தொழில்நுட்பப் பணியாளர்களும், படித்த இளைஞர் யுவதிகளும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள். இதனால் உற்பத்தித் துறை, ஏற்றுமதி, பயிற்சியளிப்போர் போன்ற திறமையானவர்கள் இல்லாமல் நாடு தன்னைத்தானே குட்டிச்சுவராக்கிக் கொண்டது. இதுவரை காலமும் அரசாங்கங்கள் கடைப்பிடித்துவந்த இனத்துவேஷக் கொள்கைகளினால் தான் நாடு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சுமார் இரண்டு மில்லியன் ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனவந்தர்களாக உள்ளனர். பல துறைகளிலும் கல்விகளைக் கற்று விற்பன்னர்களாக உள்ளனர். சுதந்திரமான தமிழ் ஈழம் அமையுமானால் அதைக் கொண்டுநடத்த இத் திறமையுள்ள தமிழர்கள் முன்வருவார்கள்.

சுமுகமாக இலங்கையைப் பிரித்து ஈழத்தைத் தமிழர் கைகளில் கொடுப்பின் புலம் பெயர் தமிழர் இலங்கையின் மொத்தக் கடனையும் அடைப்பதற்கான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட இப்போதே தயார்” என ‘பைடனுக்கான தமிழர்கள்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

பைடனுக்கான தமிழர்களின் அறிக்கை, தமிழில்: https://www.einpresswire.com/article/574822333/52

සිංහලයේ බයිඩන් සඳහා දෙමළ ජාතිකයන්ගෙන් ප්‍රකාශය: https://www.einpresswire.com/article/574823717/52