சிவதாசன்

ஒரு பன்சேனையின் கதை

இன்னுமொரு நூறாண்டுகளில் ஆலமரமொன்றின் கீழிருந்து (இருந்தால்) பாட்டி சொல்லும் கதையொன்றிலும் அன்புநெறியின் கதையிருக்குமெனினும் அதை இப்போதே சொல்லிவிடலாமென நினைக்கிறேன்.அன்புநெறி என்னும் மகத்தான சமூகப்பணி நிறுவனத்துடன் வெளி நின்று ஒட்டி உராய்ந்து மகிழ்பவர்களில் நானும் ஒருவன். போரினால் உமிழ்ந்து தூர எறியப்பட்ட விழுதுகள் நல்மண்ணில் முளைத்துத் தழைத்து ஊரில் போய் ஒரு நிலத்தைத் தத்தெடுத்து விதையூன்றி விருட்சமாக்கிய கதையிது.

எல்லோரைப் போலவும் என் தங்கை என் தம்பி என் மருகன் என்று கப்பலேற்றி நடுக்கடலில் கைவிட்ட கதையென்றில்லாமல் வானம் பார்த்த பூமியில் வதங்கி நின்ற, வெளியூரில் அண்ணன், தம்பி, அக்கா, அத்தான் இல்லாத ஒரு சமூகத்தைத் தத்தெடுத்துக் கல்வியூட்டி நிமிர்த்தி விட்ட கதை இது.

பன்சேனை என்பது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிந்தங்கிய கிராமம். அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு உடைந்த சிரட்டையே உலகக் கிண்ணமென இருந்தது. அது ஒரு காலம். போருக்குத் தப்பினாலும் யானைக்குத் தப்பினால் தான் உணவு வீட்டுக்கு வருமென்றிருந்த காலம். இக் காலத்தில் தான் ‘அன்புநெறி’ அங்கு புகுந்தது.

நெறி என்பதற்கு மார்க்கம் அல்லது பாதை எனவும் சொல்வார்கள். அன்பினால் நிரவப்பட்ட இப்பாதையைப் புலம்பெயர் நாடுகளிலிருந்த சில இளைஞர்கள் சிலவருடங்களுக்கு முன்னர் போடும்போது இது பன்சேனைக்குப் போகுமென நான் நினைத்திருக்கவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று புலம் பெயர் தேசங்களில் மிகவும் சிறப்பாகத் தம்மை நிர்மானித்துக் கொண்டவர்கள். கல்வியின் அருமை இவர்களை விட்டால் வேறெவருக்குத் தெரியும்? “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன், மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.” என்றார் ஔவை. சென்ற இடமெல்லாம் சிறப்புற வாழும் இவர்களுக்கு ஒரு ஆசை வந்தது. அதுவே ஒருநாள் ‘அன்புநெறி’யாக மாறியது.

****

2015 இல் உருவாகிய இவ்வமைப்பு இலங்கையின் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்காகத் தமது சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்தத் தீர்மானித்தார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசம் அதிகம் போக்குவரத்து வசதிகளைக் கொண்டிராத ஒன்று. மட்டக்களப்பு வாவிக்கு கிழக்கே உள்ள பிரதேசம் எழுவான் கரையெனவும் வடக்கேயுள்ளது படுவான் கரையெனவும் அழைக்கப்படுகிறது. எழுவான் கரைப் பிரதேசம் இம் மாவட்டத்தின் பல நகரங்களை இணைக்கும் பெருந்தெருவை அண்டி இருப்பதால் இங்கு வாழும் மக்கள் இதர பிரதேச மக்களுடன் ஊடாடுவதன் மூலமும் பற்பல அரச மற்றும் தனியார் சேவைகளைப் பெறுவதன் மூலமும் உலகை ஓரளவு அறிந்திருந்தார்கள். ஆனால் படுவான்கரைப் பிரதேச மக்கள் வாவியைக் கடப்பதற்கே வசதியற்றிருந்தார்கள். வயல்களில் விளைவதை யானைகளுடன் பகிர்ந்துண்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. போக்குவரத்து வசதிகளின்மையால் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்ல விரும்புவதில்லை. இதனால் அங்கு வாழும் மக்களது கல்வியறிவு மிகவும் தேக்கமான நிலையில் இருந்து வருகிறது. போர்க் காலத்தில் இக்கிராமங்கள் விடுதலைக்கும் வித்துக்களைத் தந்தன. மேற்கு மட்டக்களப்பு பிரதேசத்தில் ஒரு பின்தங்கிய கிராமம்தான் பன்சேனை. 2017 இல் இக் கிராமத்தை மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அதில் தனது சமூகநலப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டது ‘அன்புநெறி’.

வசதிகளற்ற வாழிடங்களுக்கெனத் தனிப்பண்புகள் இருக்கும். இவற்றில் பெரும்பாலும் கல்வியறிவின்மையாலும் இதர சமூகங்களிடையேயான ஊடாட்டங்கள் இன்மையாலும் ஏற்படும் முரண்படு கலாச்சாரம். வெளியார் பார்வைக்கு இவை ஒவ்வாத தீய பண்புகளாக இருப்பினும், அவை அப்பிரதேசங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்புகளாகவே இருப்பதுண்டு. அந்த வகையில் பால்ய திருமணம் பன்சேனைக் கிராமத்தில் பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் கல்வியறிவு போதாமை என்றுணர்ந்த ‘அன்புநெறி’ தனது திட்டங்களில் முதன்மையானதாக கல்வி அபிவிருத்தியைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனாலும் கல்வியைப் பெறவிரும்பும் ஒருவருக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழல் என்று ஒன்றை ஏற்படுத்தாமல் கல்வியைக் கொடுத்தும் பிரயோசனமில்லை என்பதும் விரைவிலேயே தெரியவந்தது. பன்சேனைக் கிராமம் அடிப்படையான வசதிகள் ஏதுமே இல்லாத ஒரு கிராமம். இதன் விளைவாக ‘அன்புநெறியின்’ பணிகளை விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பயனாக இப்போது அங்கு தபால் நிலையம், மருத்துவமனை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், யானை வேலி, வீதி வெளிச்சம், வீட்டு வசதி, சுய தொழில் முயற்சிகள், மாலை மற்றும் இரவு நேர வகுப்புகள், தற்காலிக ஆசிரிய வசதிகள், க.பொ.த. சாதாரண வகுப்புகள், தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்கு இருசக்கர வண்டிகள், நூலகம், பாலர் வகுப்புகள், சிறுவர் பூங்கா, க.பொ.த. உயர்தர வகுப்புகள் என அனைத்தையும் பெறும் ஒரு மாதிரிக் கிராமமாக பன்சேனை இப்போது வளர்ந்து விருட்சமாக இருக்கிறது. ஐந்தே வருடங்களில் இவ் விருட்சம் விதைகளையும் தந்திருக்கிறது.

*****

சில நாட்களுக்கு முன் 2021 இற்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கான பெறுபேறுகளை இலங்கை கல்வி அமைச்சு வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனக்குப் புல்லரித்தது. பன்சேனைக் கிராமத்தில் ‘அன்புநெறி’யினால் பராமரிக்கப்படும் பாரி வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதிய 12 பேரில் 10 பேர் சித்தியெய்தி உயர்தர வகுப்புக்குச் செல்கிறார்கள். பன்சேனைக் கிராமத்திலும், இப்பள்ளியிலும் இது புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறது. ‘அன்புநெறி’யினால் நடத்தப்பட்ட மாலை, இரவுநேர ஊக்க வகுப்புகள் இம்மாணவர்களுக்கு பெரும் உதவியைச் செய்திருக்கின்றன. தலை விறைக்கிறதா? இதையும் படியுங்கள்.

கல்வியில் மட்டுமல்லாது கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற இணைவிதான துறைகளிலும் பன்சேனை மாணவர்கள் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் சிறந்து மிளிர்கின்றனர். 2016,2017, 2018 ஆண்டுகளில் மாகாண ரீதியில் முதலிடம் பெற்ற காற்பந்தாட்ட வீராங்கனைகள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். 2019 இல் மூன்றாம் இடம் இவர்களுக்குக் கிடைத்தது.

பன்சேனை பாரி வித்தியாலயத்தில் 11 ஆம் வகுப்பு வரை மட்டுமே கற்கை வசதிகள் தற்போதுள்ளன. இங்கு க.பொ.த. சாதரண தரப் பரீட்சையில் சித்தியெய்தும் மாணவர்கள் உயர்தர வகுப்புகளுக்காக மட்டக்களப்பு மண்முனை மேற்கு / அரசடித்தீவு தேசிய பாடசாலைக்குச் செல்லவேண்டும். இங்கு செல்லும் மாணவர்களுக்கான விடுதி வசதி, உணவு மற்றும் மேலதிக ஊக்க வகுப்புகள் போன்றவற்றிற்கான செலவுகளையும் ‘அன்புநெறி’யே ஏற்கிறது. இப்படிக் கல்வி கற்ற இரண்டு மாணவ்ர்கள் 2021 உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பும் கைகூடும் போல் தெரிகிறது. அது நிறைவேறும் பட்சத்தில் இவ்விரு மாணவர்களும் தமது பல்கலைக்கழகக் கல்விகளை முடித்துக்கொண்டு தமது வாழ்காலத்தில் இன்னுமொரு ‘பன்சேனைக்’ கிராமத்தைத் தத்தெடுக்கலாம். யார் கண்டது?

*****

‘பன்சேனை’யை இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதற்குமே ஒரு மாதிரிக் கிராமமாக மாற்றிய ‘அன்புநெறி’யும் அந்த வகையில் ஒரு மாதிரி சமூக நல அமைப்புத்தான். அரச மான்யங்கள் எதையும் பெறாது சில தொண்டர்களின் உளமார்ந்த முயற்சிகளின் பயனாக சிறு சிறு விழாக்களையும், கையேந்தல் நிகழ்வுகளயும் மேற்கொண்டு இவ்வமைப்பினால் ஒரு கிராமத்தைக் கட்டி எழுப்ப முடிந்திருக்கிறது. இது ஒரு மகத்தான சாதனை. இக்கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் ‘பிறப்பு’ இருந்தால் எத்தனை பன்சேனைகள் உருவாகும்? புல்லரிக்கிறது!