‘ஒரு நாடு-ஒரு சட்டம்’: நீதி அமைச்சர் அலி சப்றி பதவி விலகலாம்?


‘ஒரு நாடு-ஒரு சட்டம்’ செயலணி விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் அமைச்சரான அலி சப்றி தனது நீதி அமைச்சர் பதவியைத் துறக்கக்கூடுமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்வுகூறிவருகின்றன.

இச் செயலணியின் உருவாக்கம் தொடர்பாக நீதி அமைச்சருடன் கலந்துரையாடப்படவில்லை எனவும், குறிப்பாக அதன் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டது நீதி அமைச்சருக்குத் திருப்தியாக இல்லை எனவும், ஜனாதிபதி நாடு திரும்பியதும் அமைச்சர் அவரைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஞானசேரரின் நியமனம் தொடர்பாக நீதி அமைச்சு அதிகாரிகள் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், அது சமூக ஊடகங்களால் அவிழ்த்துவிடப்பட்ட ஒரு பொய்த் தகவல் எனவே அவர்கள் ஆரம்பத்தில் நினைத்ததாகவும் இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது. இதனால் விசனமடைந்த அமைச்சர் சப்றி பதவியிலிருந்து விலகப்போவதாகக் கூறியதாகவும் அப்போது பிரதமர் ராஜபக்ச தலையிட்டு அவசரப்பட்டு முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாமெனவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவரோடு பேசும்படி கேட்டுக்கொண்டதாகவும் உள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய மிக்-27 கொள்வனவு தொடர்பான வழக்கு உட்படப் பல வழக்குகளில் கோதாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக வாதாடியிருந்த அமைச்சர் சப்றி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றிருந்தார். ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிவரும் ‘வியத்மக’ குழுவில் ஒருவரான சப்றிக்குத் தெரியாமலேயே ஜனாதிபதி இந்த செயலணியை உருவாக்கி அதற்குத் தலைவராக ஞானசேரரை நியமித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ உருவாக்கம் தொடர்பாக ஏற்கெனவே கணிசமான வேலைகள் செய்யப்பட்டுவிட்டன எனவும், நாடு சுதந்திரமடைந்த நாட்கள் முதல் நடைமுறையிலிருக்கும் தேச வழமைச் சட்டம், கண்டிய வழமைகள் சட்டம், முக்குவ சட்டம், முஸ்லிம்களின் திருமண சட்டம் போன்ற பொது வழக்கச் சட்டங்களை (Common Law) அகற்றிவிட்டு சகல இனங்களுக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு அம்சமாக இருந்து வருகிறது. முற்போக்கு எண்ணம்கொண்டவர்களிடையே இதற்கு வரவேற்பு இருந்ததெனினும், சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை ஏனைய இனங்களின் மீது திணிப்பதுவே இதன் பின்னணி எனவும் சிறுபான்மை இனத் தலைவர்களால் அப்போது சுட்டிக் கட்டப்பட்டிருந்தது. அலி சப்றி போன்ற முஸ்லிம் அமைச்சரின் தலைமையில் இச்சட்டம் உருவாக்கப்படுவதனால் சிறுபான்மை இனங்கள் இது தொடர்பாக அதிகம் பயப்படுவதற்கில்லை என அரசாங்கம் கூறிவந்தது. இந் நிலையில் ஞானசேரரது நியமனமும் அதை அமைச்சர் சப்றிக்கே தெரியாமல் செய்த அரசாங்கத்தின் கபடத்தனமும் இப்போது சிறுபான்மையினரின் அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.



அத்தோடு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 6 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த ஞானசேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமையும் பொதுபல சேனா என்ற அமைப்பின் பின்னணியில் கோதாபய இருந்திருக்கிறார் என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்தியிருக்கிறது. அதன் அடுத்த கட்டமாக ஞானசேரரை ஒரு நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க ராஜபக்ச உறுதி கொண்டுள்ளதாகவும் அதற்கு முன்னர் அவரது பெயர் மீதான களங்கத்தை நீக்கும் நோக்கிலேயே இச் செயலணிக்கு அவரைத் தலைவராக ஜனாதிபதி நியமித்தார் எனவும் கூறப்படுகிறது. இதற்காகவே அப்பே ஜனபல பக்சய கட்சியின் நியமன உறுப்பினரான அத்துறெலிய ரத்ன தேரரின் பதவியைப் பறித்து அந்த இடத்துக்கு ஞானசேரரை நியமிக்க நகர்வுகள் மேற்கொண்டுவரப்படுகின்றன எனவும் பேசப்படுகிறது.

அக்டோபர் 16 அன்று அபே ஜனபல பக்சய கட்சி ரத்ன தேரரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக பாராளுமன்றச் செயலாளருக்கு அறிவித்திருந்தது. கட்சியின் முடிவை எதிர்த்து ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்படாவிட்டால் ரத்ன தேரர் நியமன உறுப்பினர் பதவியையும் இழக்கவேண்டி ஏற்படும்.

இதே வேளை அரசாங்கத்தை விமர்சித்துவந்த இன்னுமொரு பிக்குவான முறெத்தெட்டுவ ஆனந்த தேரருக்கு பல்கலைக் கழக வேந்தர் பதவியை வழங்கும் முடிவும் பிரச்சினைக்குரிய புத்த பிக்குகளைச் சமாதானப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் உத்திகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.