NewsSri Lanka

‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ செயலணி இலங்கையின் பல்சமூக கட்டமைப்பைப் பாதிக்கும் – ம.உ.அமைப்பு மைய நாடுகள்

மனித உரிமைகள் ஆணையத்தின் 49 ஆவது அமர்வின் போது கனடா, ஜேர்மனி, வட மகெடோனியா, மலாவி, மொண்டிநீக்ரோ மற்றும் பிரித்தானியா ஆகிய மையநாடுகளின் குழு தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் தொடர்பான ஆணையாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு இம் மைய நாடுகள் தெரிவித்த கருத்தின்படி, ஆணையகத்தின் தீர்மானம் 46/1 இன் பிரகாரம் சீர்திருத்தங்கள் தொடர்பாக இலங்கை சில ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவற்றில் போதுமான முன்னேற்றங்கள் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, காணாமலாக்கப்பட்டோர் பெயர்களைக் கொண்ட முதற் பட்டியல் மீது காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் முன்னேற்றகரமானதாக இல்லை என்பது மட்டுமல்லாது குழப்பகரமானதாகவும் இருக்கிறது என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

சிவில் சமூகங்கள் மீதான கண்காணிப்புகளும், மிரட்டல்களும் தொடர்கின்ற அதே வேளை, ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீதான மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், கைதுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. அஹ்னாஃப் ஜசீம், ஹேஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரின் பிணை அனுமதிகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் வரையறைகளுக்குள் கொண்டுவரும் முயற்சியென மையநாடுகள் திருப்தி கொண்டுள்ளன. இருப்பினும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மீது முன்வைக்கப்பட்ட திருத்தப் பிரேரணைகள் மிகவும் மட்டமாக இருப்பதாகவும் மிக நீண்டகால கரிசனைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

அதே வேளை ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ செய்லணி, இலங்கையின் பல்சமூக கட்டமைப்புக்குப் பாதகமாக இருக்கிறது. இச்செயலணிசகலரையும் உள்வாங்கி, பாரபட்சமற்ற வகையில் செயற்பட வேண்டுமென மைய நாடுகள் கோரிக்கையை முன்வைத்துள்ளன.