Spread the love

ஏ.ஆர்.ரஹ்மான், கமல் ஹாசனுடன் இதர பிரபல பாடகர்களும், 80 இற்கு மேற்பட்ட இசைக் கலைஞர்களுடன் இணைந்து வழங்கும் 6 மணி நேர இணையவழி இசை நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

‘ஒரு குரலாய்’ என்ற தலைப்பில், முகநூல் நேரடி ஒலிபரப்பாக நடைபெறும் இந் நிகழ்ச்சி மூலம் சேர்க்கப்படும் நிதி, கொறோணாவைரஸ் மூலம் வாழ்வாதாரத்தை இழந்துநிற்கும் கலையுலகத்தைச் சார்ந்து வாழும் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

கொறோணாவைரஸ் கொள்ளைநோய்ப் பரவலினால் கலை நிகழ்ச்சிகள், திரையரங்க நிகழ்வுகள் எதுவும் நடைபெறாத நிலையில், இவற்றைச் சார்ந்து வாழும் கலைஞர்களும், இதர பணியாளர்களும் ஏறத்தாழ வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“இரு இசைக் கலைஞர் தான் இப்போது மரக்கறி விற்பனை செய்வதாகக் கூறும் காணொளி ஒன்றைப் பார்த்தேன். “எந்த ஆதரவு இல்லாமலிருந்தும்கூட நான் இசைத் துறைக்கு வந்ததே எனது ஆர்வம் காரணமாகத் தான்” என்கிறார் அந்த இசைக் கலைஞர். என்னால் அதைச் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது” என்கிறார் ஒரு பிரபல பாடகர் சிறிநிவாஸ்.

இப்படியான சம்பவங்களினால் உந்தப்பட்டு அவர் ஐக்கிய பாடகர் அறக்கட்டளை (United Singers Charitable Trust (USCT)) என்னும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரபல இசைக் கலைஞர்கள் உன்னி கிருஷ்ணன், சுஜாதா மோஹன், ராஹுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த், ஹரிசரண் மற்றும் சாயிந்தவி ஆகியோர் இவ்வமைப்பின் அறங்காவலர்களாக உள்ளனர்.

‘ஒரு குரலாய்’ என்ற இந்த இசை நிகழ்ச்சியை இந்த அமைப்பு, ‘சில்வெர் ட்றீ’ எனும் ஒரு நிகழ்சி ஒழுங்கு செய்யும் நிறுவனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், கமல் ஹாசன் உட்பட, 80 க்கும் மேலானவர்கள் இந் நிகழ்ச்சியில் பங்குபற்றுகிறார்கள்.தமிழில் மட்டுமே நடக்கும் இந் நிகழ்ச்சியில், இதர பிரபல பாடகர்களான ஹரிகரன், ஷங்கர் மஹாதேவன், ஷ்ரேயா கோஷால் ஆகியோரும் பங்குபற்றுகிறார்கள்.

“இக் கலைஞர்களின் நெகிழ்வு என்னை உருக வைத்துவிட்டது. எங்கள் எல்லோருக்குள்ளும் ஆனவம், மேலாண்மை, தலைக்கனம், மாற்று மனப்பான்மை எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், அதையெல்லாம் புறம் தள்ளி வைத்துவிட்டு இந் நிகழ்ச்சியில் பங்குபற்றுகிறார்கள்” என்கிறார் பாடகர் சிறிநிவாஸ்.

பலர் தமது பாடல்களைத் தமது வீடுகளிலும், சிலர் ஸ்ரூடியோக்களிலும் பாடல்களைப் பதிவுசெய்து அனுப்பியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஒலிபரப்பாகும் இந் நிகழ்ச்சி இந்தியாவில் இன்று (சனி) மாலை 6:00 மணிக்கு முகநூல் மூலம் ஒலிபரப்பாகும். அமெரிக்கா, தென் கிழக்காசிய நாடுகள், அவுஸ்திரேலியா, நியூசீலந்து ஆகிய நாடுகளிலுள்ளவர்களும் இந் நேரடி ஒலிபரப்பைக் கேட்கலாம். இதற்கான இணையவழித் தொடுப்பு USCT Facebook page.

Related:  முகேஷ் அம்பானியின் றிலையன்ஸ் இண்டஸ்றீஸ் நிறுவனத்தின் பெறுமதி $200 பில்லியன்!

இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ், அனிருத் ஆகியோரும் தமது சமூக வலைத்தளங்கள் மூலம் இந் நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள்.

இவ்வொலிபரப்பு இலவசமானதெனினும், பார்வையாளர்கள் தமது பங்களிப்பை நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பாகும் இணையத் தொடுப்பின் மூலம் செய்துகொள்ளலாம்.

இதந் மூலம் சேர்க்கப்படும் நிதியைப் பங்கிடுவதை மேற்பார்வை செய்ய துணைக்குழுக்கள் அமைக்கப்படுமெனவும் நிதி தேவைப்படுபவர்களை இக் குழுக்கள் அடையாளம் கண்டு அவர்களிடம் உரிய பங்களிப்பை வழங்கும் எனவும் சிறிநிவாஸ் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
‘ஒரு குரலாய்’ | ஏ.ஆர்.ரஹ்மான், கமல், பிரபல பாடகர்கள் இணைந்து வழங்கும் நிதி சேர் இசை நிகழ்ச்சி
ஒரே குரலாய் இசை நிகழ்ச்சி

‘ஒரு குரலாய்’ | ஏ.ஆர்.ரஹ்மான், கமல், பிரபல பாடகர்கள் இணைந்து வழங்கும் நிதி சேர் இசை நிகழ்ச்சி