‘ஒரு ஐடியா’
வடிவேலர் உலா
கிருஷ்ணானந்தா
“கேள்விப்பட்டனியே? கனடாவில சங்கரியின்ர பொடிக்கு நடந்ததை”. தேஞ்சுபோன பிரேக் சத்தம் போட்டபடி வடிவேலரது சைக்கிள் முக்கி முனகி கேட்டில் வந்து நின்றது. நான் சுடச் சுட பிளேன்ரீயோட காலைக்கதிரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளூராட்சித் தேர்தல் ‘ஹோர்ஸ் ட்றேடிங்’ படங்களால் முதற் பக்கம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. முன்னைய தேர்தல்களில் கரை சேராத நண்டுகள் ஒன்றுகூடி விளையாடுவதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். வடிவேலர் ஆடுகளத்தைக் கனடாவுக்கு மாற்றிவிட்டார்.
“பாவம் தான். என்ன செய்யிறது. பொடியனும் தனக்கு அளவான தொப்பியைப் போட்டிருக்கலாம். உலகம் முழுவதும் வெள்ளைத் தேசியம் மீண்டெழுங்காலம் இது அண்ணை”
“எனக்கொரு ஐடியா இருக்கு. பேசாம நம்ம அருச்சுனாவை ஒரு கிழமை கனடிய பாராளுமன்றத்தில பேசிறதுக்கு பெர்மிஷன் எடுத்து அனுப்பிவிட்டா உந்த வெள்ளையள் எல்லாரையும் விசராக்கி விட்டிடுவான். விட்டிட்டு ஓடிவிடுவாங்கள். பாவிகள் போற இடமெல்லாம் பள்ளமும் பிட்டியும். சரி அதை விடு. நம்ம உள்ளூராட்சித் திருவிழா எப்பிடி இருக்குது?
“அது தான் பார்த்துக்கொண்டு இருக்கிறன்”
“எல்லா எதிரியளும் ஒண்டாகிட்டங்கள். சுமந்திரனுக்கு பாராளுமன்றத் தேர்தலில சீட் கிடைக்காதது நல்லது போல. சிறீதர் தியேட்டர் வாசலிலயே கிடக்குதாம்”
“அண்ணை இஞ்ச சுமந்திரன் ஒரு வேண்டாத பெண்டாட்டி. அந்தாளும் கையையும் காலையும் வாயையும் வைச்சுக்கொண்டு சும்மா இருக்காது. அந்தாள் சுவரோட கதைச்சாலும் “அது எனக்குத்தான் சொன்னது” எண்டு தூக்கிக்கொண்டோட இங்க கன சனம் இருக்குது. எனக்கும் ஒரு ஐடியா வருகுது”
“நீயும் அருச்சுனாவை இறக்கப் போறியோ?”
“கனடாவில இருக்கிற மாதிரி கட்சிகள் ஃபெடெறலுக்கு ஒண்டு, புரோவின்சலுக்கு ஒண்டு எண்டமாதிரி இருக்க வேணும். தமிழரின்ர உரிமைக்காகப் போராடிற சுமந்திரன் போல ஆக்கள் ஃபெடெறல் தமிழரசுக்கட்சியில இருக்க வேணும். மாகாணக் கட்சி அபிவிருத்தியை மட்டும் கவனிச்சுக்கொண்டு பேசாமக் கம்மெண்டு இருக்க வேணும். அபிவிருத்திக்காக சிவஞானம் வேணுமெண்டா டக்ளஸோடயும் பேசலாம். ஆரு ஆரோடை பேசினாலும் ஒருவரும் கேட்க ஏலாது. ‘பிரதேசத்தின் அபிவிருத்திக்காக’ எண்டொரு சொல்லைத் தூக்கிப் போட்டா சனம் சிங்களத் தலைவர்கள் யாழ்ப்பாணம் வந்தாப் பொட்டு வைச்சுக் கும்பிடுகிறது போல தூக்கி வைச்சுக் கொண்டாடும். உதயன் பத்திரிகை முதற்பக்கச் செய்தி கிடைக்காமல் நிண்டு போயிடும். ‘ஒரு நாடு இரு தேசக்’ கோஷ்டி வழக்கம்போல கொழும்பிலயே இருந்திடலாம். ஊர்ச்சோலியள உள்ளூர்க் குதிரையள் பார்த்துக்கொள்ளும். அவை டக்ஸசோடயோ பிரேமச்சந்திரனோடயோ ஆரோட எண்டாலும் கட்டிப்பிடிச்சுக் காதலிச்சாலும் ‘ஒரு நாடு இரு தேசத்தின்ர’ கற்பு மாசுபடாமலிருக்கும். கேட்டால் ‘மத்தியில கூட்டாட்சி, மாகாணத்தில சுயாட்சி’, ‘அவங்க வேற, நாங்க வேற’ எண்டு போட்டு தாளிச்சிடலாம். எப்பிடி அண்ணை ஐடியா?”
“உத வேற ஆரெட்டையும் பறைஞ்சனியோ?”
“இல்லை ஏன்?”
“பின்னேரம் சுமந்திரனும் பொன்னம்பலமும் என்ர வீட்ட வருகினம். எடுத்து விடப்போறன். இது சரி வந்தா வரலாற்றில டி.எஸ். சேனநாயக்காவின்ர பேருக்கு கீழ என்ர பெயர் இருக்கும்”.
நான் ஃபோனை எடுத்தேன்.
“இப்ப ஆருக்கு ஃபோன் எடுக்கிற?” வடிவேலர் கேட்டார்.
“அருச்சுனாவுக்கு”
“அட ராசா, குஞ்சு. நான் பகிடிக்குச் சொன்னனானடா” வடிவேலரது சைக்கிள் சிறீதர் தியேட்டர் பக்கமாகப் போனது.
