ஒமிக்றோன் திரிபு | அதிக சோர்வு, மருத்துவமனை அனுமதி குறைவு – தென்னாபிரிக்கா


உலகில் இதுவரை 150 பேருக்குத் தொற்று, எவரும் மரணமாகவில்லை

கொறோணாவைரஸின் பிந்திய திரிபான, ஒமிக்றோன் எனப் பெயரிடப்பட்ட B.1.1.159 பற்றிய பிந்திய தகவல்களை உலகசுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இதன் பிரகாரம் இத் திரிபினால் தொற்றப்பட்ட நோயாளிகளில் மிகையான உடற் சோர்வு மற்றும் தொணடை அரிப்பும் காணப்படுவதாகவும், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவைகள் குறைவு என்றும் கூறப்படுகிறது. இத் திரிபினால் தென்னாபிரிக்காவில் இதுவரை மரணமடையவில்லை எனவும் அறியப்படுகிறது.

இருப்பினும் இப் புதிய திரிபின் தொற்று வீதம் ஏற்கெனவே வந்த திரிபுகளைவிட மிகவும் வேகமானது என்பதனையும் சிலரில் வெகு குறைவான நோயறிகுறிகள் காணப்படுவதாகவும் தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒமிக்றோன் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளான மாலாவி, எதியோப்பிய, சாம்பியா, மொசாம்பிக், கினியா, லெசோத்தோ ஆகியவற்றுக்கு கோவாக்ஸ் அமைப்பு மூலமாக கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளையும் பொட்ஸ்வானாவுக்கு கோவாக்ஸின் தடுப்பு மருந்தையும் உடனடிப் பாவனைக்காக அனுப்பிவைக்கவுள்ளது. அத்தோடு பரிசோதனை உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றையும் அது அனுப்பவுள்ளது.

அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் தமது பாவனைக்காக மேலதிக தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதனால் வறுமையான நாடுகளில் நீண்டகாலமாக அழிக்கப்படாமலிருக்கும் வைரஸ் புதிய திரிபுகளை எடுக்கச் சாத்தியமுள்ளது எனப் பலகாலமாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்தியா இதுவரை 25 மில்லியன் டோஸ்கள், இந்திய தயாரிப்புகளான தடுப்பூசிகளை 41 ஆபிரிக்க நாடுகளுக்கும் மேலும் 16 நாடுகளுக்கு 1 மில்லியன் டோஸ்களை இனாமாகவும், 16 மில்லியன் டோஸ்களை கோவாக்ஸ் மூலமாக 33 நாடுகளுக்கும் வழங்கியிருக்கிறது.

ஒமிக்றோன் பரவல் தொடர்பாக மேலதிக தகவல்களைத் தாம் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ஆனால் ஒமிக்றோன் தொற்றின் காரணமாக இதுவரை எந்த நாட்டிலும் எவரும் மரணமடைந்ததாகத் தமக்குத் தகவல் கிடைக்கவில்லை எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்தில் 6 பேரும், போச்சுக்கலில் 13 பேரும், கனடா, அவுஸ்திரேலியாவில் தலா இரண்டு பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும், 15 நாடுகளில் 150க்கும் மேலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது.