Spread the love

சிவதாசன்

ஒபாமாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது பற்றிப் பலருக்குக்  கவலை.  அவர் ஒரு கண்ணியவான், நீதிமான், ஏழைபங்காளன், சமாதானம் விரும்பி என்று பலரும் பூ மழை பொழிகிறார்கள். அவர் இருக்கும்வரை வெள்ளை மாளிகை பளிங்கு மாளிகையாகவே சுவர்களுக்கு வெளியில் நின்றவர்களுக்குத் தெரிந்தது. துரும்பரின் வரவில் ஒபாமாவின் ஒளிவட்டம் பெரிதாகியதில் வியப்பில்லை.

துரும்பர் வெண்கலக் கடைக்குள் புகுந்த யானை என்பதிலும் மாற்றுக கருத்தில்லை. போன நாளிலிருந்து ஒரே ‘சவுண்டு’ விட்டுக்கொண்டுதான் இருக்கிறார். அவர் முன்னரும் அப்படித்தான். இப்படித்தான் நடந்துகொள்வார் என்பதும் எதிர்பார்த்ததுதான். எதிர்பாராதது இவ்வளவு விரைவில் நடக்குமென்பது மட்டுமே.

‘The Making of Trump’ என்றொரு டேவிட் கேய்  ஜோண்ஸ்டன்  எழுதிய புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். துரும்பரின் குணாதிசயங்களைப் பற்றி அவர் ஆதாரங்களுடன் நிறைய எழுதியிருந்தார். அதில் முக்கியமான சில 1) எதிரிகளைப்  பழி வாங்குவதில் இன்பம் பெறுபவது  2) எடுத்த காரியத்தை குறுக்கு வழிகளில் போயாவது முடித்து வைப்பது 3) பொய் சொல்வது 4) உறவினரென்றாலும் ஈவு இரக்கம் காட்டாதிருப்பது ஆகியன. துரும்பரின் தந்தையும், தாத்தாவும் இவரைப் போலவே தார்மீகமற்ற வியாபாரிகள். கடும் உழைப்பாளிகள். துரும்பரின் வெற்றியின் பின்னால் ஊழல் நிறைத்த அரச ஊழியர்களும், அரசியல்வாதிகளும் (கிளிண்டன் உட்பட), மாபியாக் கோஷ்டிகளும், போதை வஸ்து கடத்துபவர்களும், சூதாட்டக் காரர்களும் தானிருந்திருக்கின்றனர்.

துரும்பர் ஒரு கோடீஸ்வரர். ஆனால் இதர கோடீஸ்வரர்கள் இவரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கினார்கள். அதிகார வர்க்கம் இவரை மதிப்பதில்லை. இந்த இரண்டு சாராரும் துரும்பருக்கு எதிரிகள். துரும்பரது நடவடிக்கைகள் பற்றி நன்றாக அறிந்தவர்கள். துரும்பரின் முதலாவது பழிவாங்கல் இவர்கள் மீதானது. உழைப்பவர்களின் தோழனாக அவர் போட்ட வேடம் தான் அவரை வெள்ளை மாளிகைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இனி அவர் போட்ட  வேடத்திற்கேற்ப ஆடியே ஆகவேண்டும். பலவீனமான முஸ்லீம் மக்கள் அவரது முதல் பலிக்கடாக்கள்.

இதைப் பாருங்கள். 2015 ஐ.நா. அறிக்கையின்படி 63.5 மில்லியன் அகதிகள் தத்தம் நாடுகளிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். சமீப மனித வரலாற்றிலேயே இந்தளவு கொடுமை நடந்ததில்லை. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். அமெரிக்கப் படையெடுப்புகளினாலும், குண்டுவீச்சுக்களினாலும் அவர்களால் உருவாக்கப்படட பயங்கரவாதிகளாலும் துரத்தப்படடவர்களே இந்த அகதிகள். துரும்பரின் முஸ்லீம் தடைக்கு எதிராக இன்று முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜனாநாயக, குடியரசுக் கட்சிக்காரர்களினாலேயே இம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப் படடார்கள்.

புஷ் ஆரம்பித்து வைத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரை இறுதிவரை உக்கிரமாக முன்னெடுத்தவர் ஒபாமா. இப்போர்கள் உருவாக்கிய அகதிகளையே துரும்பர் தடை செய்கிறார். மனிதாபமில்லாதவாரென்று அறியப்படட துரும்பரிடம் இதை எதிர்பார்க்கலாம். ஆனால் மனித உரிமைகளின் காவலன் என்று மகுடம் சூட்டிக்கொண்டு, சமாதானத்துக்கான நோபல் பரிசையும் பெற்றுக்கொண்ட ஒபாமாவிடம் இதை எதிர்பார்க்கலாமா? ஆனால் அவரது அறுவடைதான் இந்த உலக அவலம். ஈராக்கில் புஷ் துரத்திய சுனி முஸ்லிம்களுக்கு லிபியாவில் பயிற்சி தந்து சிரியாவில் போரிட வைத்த ஒபாமா மீதான பழிவாங்கல் தான் இந்த முஸ்லீம் தடை. துரும்பரின் பார்வையில் ஒபாமா எப்போதும் ஒரு முஸ்லீம் தான்.

அது மட்டுமல்ல. ஒபாமா நிர்வாகத்தில் நாடு கடத்தப்படட முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.5 மில்லியன். இவருக்கு முன்னான அத்தனை ஜனாதிபதிகளினதும் மொத்த நிர்வாக காலத்தில் இப்படியொரு துர்ப்பாக்கியம் நடைபெற்றதில்லை. மூன்று வயதுக்கு குழந்தைக்குக்கூட ஒரு வக்கீலை வைக்க முடியாது அந்த குழந்தைகள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்தக் கொடுமை நீதிமான் ஒபாமா நிர்வாகத்தில்தான் நடந்தது.

துரும்பரின் அரசியல் ஒபாமா அரசியலின் நீட்சிதான். அவருடைய மந்திரிசபையில் அமர்த்தப்பட்டிருக்கும் பெரு வணிகர்கள், இராணுவ ஜெனெரல்கள், தீவிர வலதுசாரி கடும் போக்காளர்கள் எல்லோரும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர்களின் பெருமாதரவுடன் தான் நியமனம் பெறறார்கள். எனவே துரும்பர் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஆசீர்வதிக்கப்பட்டு ஆமோதிக்கப்படடவையேதான். எனவே ஒபாமாவோ ஹிலாரி கிளின்ரனோ அல்லது புஷ் சோ இந்நியமனங்களுக்கு எதிராக ஒப்பாரி வைக்க முடியாது.

ஒபாமா ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் முன்னெடுத்த ‘நீதி யுத்த’ த்தின் போது புஷ் சை விட பத்து மடங்கு அதிகமான குண்டு வீச்சுக்களை நிகழ்த்தினார். 2008-2016 காலப்பகுதியில் மட்டும் 272 ஆளில்லா விமானத்தாக்குதலின் மூலம் 600 க்குமதிகமான பொதுமக்களைக் கொன்றொழித்தார்.  ஆனால் எந்தவொரு ஆர்ப்பாட்டங்களோ, தெருப்போராட்டங்களோ உலகெங்கும் முன்னெடுக்கப்படவில்லை.  ஆனால் துரும்பர் வெள்ளை மாளிகைக்குள் காலெடுத்து வைக்கு முன்னரே, குண்டுகளை முஸ்லீம் மக்களின் மீது பொழிவதற்கு முன்னரே பல்லாயிரக் கணக்கானவர்கள் தெருக்களில் இறங்கி விடடார்கள்.

உண்மையான செயல்வாதிகளால்தான் (activists) அரச கொள்கைகள் திருத்தம் பெறுகின்றன. பெரும்பான்மையான வாக்காளர்கள் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்தவுடன் காலாவதியாகிவிடுகின்றனர். தவணை முடியும்வரை அரசையும் அரசியல்வாதிகளையும் உரிய முறையில் செயற்பட வைப்பது இந்த செயல்வாதிகள் தான். அவர்களது ஆடுகளம் தெருக்கள்  தான். ஆனால் துரதிர்ஷ்டா வசமாக இந்த நவீன தாராளவாத முலாமைப் பூசிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சி போன்றன ஆட்சியமைக்கும் போது செயல்வாதிகள் மௌனமாகிவிடுகிறார்கள். சமாந்த பவர், சூசன் ரைஸ் போன்ற மனித உரிமை செயல்வாதிகள் தாம் சார்ந்திருக்கும் அரசின் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். துரும்பரின் வரவுக்கெதிரான பெண்களின் போராட்டம் ஒபாமாவின் அக்கிரமங்களைக் கண்டுகொள்ளாதாது துர்ப்பாக்கியம்.முகநூலில் ஒரு கார்ட்டுனில் பெண்கள் போராடடம் பற்றி ஹிலாரி சொல்வதுபோல் ஒரு வாசகம் இருந்தது. ” இந்த “———-” எல்லாம் தேர்தல் அன்று எங்கே போயிருந்தார்கள்” என்று. கற்பனையானாலும் சிந்திக்க வேண்டியது.

அமெரிக்காவின் அதிபராக ஒரு அசுரர் அவதரித்திருக்கிறார் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவரது வரவை இலகுவாக்கியவர்கள் ஒபாமா, ஹிலாரி போன்றவர்கள் தான்.

துரும்பர் ஆட்சிக்கு வந்ததும் கூறிய ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

“நான் எனது நாட்டை முன்னேற்றவும் பாதுகாக்கவும் பாடுபடுவேன். நீங்களும் உங்கள் நாடுகளை முன்னேற்றுங்கள், பாதுகாருங்கள்”  ஒரு பாதிக்கப்படட அமெரிக்க உழைப்பாளியை அவரது இவ்வாசகங்கள் மகிழ்ச்சிப்படுத்துமேயானால் அவரது அவதாரம் தேவையானதே.

இந்து மதத்தில் கூறப்படுவதுபோல் முறைப்படி தவம் செய்த அசுரனுக்கு வரத்தை அருளவேண்டியது கடவுளின் கடமை. முக்காலமுமும் உணர்ந்த கடவுள்  அசுரன் தன் வரத்தை துர்ப்பிரயோகம் செய்யக்கூடுமென்பதையும் அறிந்தே இருந்திருப்பார். ஆனாலும் தவத்துக்கான வரத்தை அவர் கொடுப்பதுதான் நீதி.  துர்ப்பிரயோகம் செய்யின் அசுரன் அழிக்கப்படுவான் என்பத்தும் அசுரனுக்குத் தெரியும்.

அமெரிக்க மக்கள் அசுரனுக்கு வரத்தை அளித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் போய் பாற்கடலைக் கடைந்து நஞ்சை எடுத்துக் பருக்க முடியாது . பொறுப்பதே நீதி.

மாசி 2017 இக் கட்டுரை ஈ குருவி பத்திரிகையில் பிரசுரமானது. [wp-rss-aggregator]

Print Friendly, PDF & Email