ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பயிர்வு | சஜித் பிரேமதாச
தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
இன்று கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் இன்ஸ்டிரியூட்டில் நடைபெற்ற கொள்கை விளக்கக் கூட்டத்தில் தனது திட்டங்களை அறிவித்தார். நவதாராள கலப்பு பொருளாதாரம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பயிர்வு, பெண்களுக்கு தரப்படுத்தப்பட்ட (affirmative action) சலுகை போன்றவை அவரது சில திட்டங்கள்.
டாக்டர் ஹர்ஷா டி சில்வா, இறான் விக்கிரமரத்ன, அஜித் பெரேரா போன்ற மந்திரிசபை சகாக்களுடன் பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் கொழும்பு ‘படித்த’ ஐ.தே.க. உறுப்பினர்களுடன் கலந்துரையாடலாக நடைபெற்ற கூட்டத்தில் சஜித் பிரேமதாச தன் கொள்கைத் திட்டங்களை முன்வைத்தார்.
பொருளாதாரக் கொள்கை
பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரையில், சர்வதேச பொருளாதாரத்தில் பின்னிப் பிணைந்து செயற்படவேண்டுமாயின் ஏற்றுமதிப் பொருளாதார மாதிரியைப் பின்பற்ற வேண்டும் எனவும், வளர்ச்சியைப் பொறுத்தவரையில், உற்பத்தி சார்ந்த பொருளாதாரமே வளர்ச்சிக்கு உரமூட்டும் எனவும் பிரேமதாச கூறினார்.
ஒரு பொருளாதார சமூகத்துக்கு சாதகமாகவும் இன்னொன்றை உதாசீனம் செய்தும், பகைமையைத் தூண்டும், பொருளாதாரக் கொள்கைகளால் கட்டப்பட்ட சமூக அடுக்கு தற்போது நெருக்கடியான நிலைக்குள் சிக்கியிருக்கிறது.
” செழிப்பைப் பயிரவல்ல, ஒன்றிப்போகும் வளர்ச்சியைத் தரவல்ல பொருளாதார மாதிரியில் நான் உறுதியான் நம்பிக்கை கொண்டுள்ளேன். பெருமப்பொருளாதார இலக்குகளாக (macroeconomic targets) நாம் குறைந்த பணவீக்கம், குறைந்த வேலையற்றோர் எண்ணிக்கை, அதிக ஏற்றுமதி, குறைந்த வரவு-செலவு பற்றாக்குறை, கடன் குறைப்பு, உயர்வான தேசிய வருமானம், அரிதான வளங்களின் அதியுச்ச பாவனை, அதிகளவு நேரடி வெளிநாட்டு முதலீடு ஆகிய இலக்குகளை அடைவதற்காய் நாம் செயற்படவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இதை எய்துவதற்கு, பிரேமதாச இரண்டு எண்ணக் கருக்களை முன்வைத்தார்.
“பல்வேறுபட்ட மாதிரிகளையும், கோட்பாடுகளையும் முடிவெடுப்பவர்கள் பரிந்துரைப்பார்கள். ஒரு கரையில் கீனேசியன் மாதிரி (ஒன்றிணைந்த தேவையை நிர்வகிப்பது) மறு கரையில் ப்றைட்றிக் ஹயெக், மில்ரன் பிரீட்மன் மாதிரி (நவதாராள சந்தை) -இந்த இரண்டு பொருளாதார மாதிரிகளின் கலவையே எங்கள் நாட்டுக்கு உகந்த, வளர்ச்சியைத் தூண்டவல்ல மாதிரியாக இருக்குமென்று நான் நம்புகிறேன்” என்ற தன் கருத்தை முன்வைத்தார் பிரேமதாச.
சிறிய, மற்றும் நடுத்தர தொழிலதிபர்களை ஊக்குவிப்பதன் மூலமும், 1980 களில் பிரித்தானிய பிரதமர் மார்கிரெட் தச்சர் அவர்கள் கையாண்ட ‘பொருளாதார வலய’ அணுகுமுறை போல் பூகோள (பிரதேச) ரீதியாக இலக்குவைக்கப்பட்ட பொருளாதார வலயங்களை உருவாக்குவதன் மூலமுமே பொருளாதார சுபீட்சத்தை எய்த முடியுமென்று நம்புவதாக அவர் கூறினார்.
அவரது பேச்சின்போது, பல அமெரிக்க ஜனாதிபதிகளின் பொருளாதாரக் கொள்கைகளைத் தான் மாதிரிகளாக எடுத்துக்கொள்வதாகக் கூறினார். பிராங்ளின் றூசெவெல்ட்டின் ‘நியூ டீல்’, ஜோன் எப்.கென்னெடியின் ‘நியூ புறோண்டியர் ப்ரோகிராம்’, லிண்டன் பி.ஜோன்சனின் ‘கிறேட் சொசையெட்டி புறொஜெக்ட்’, றொனால்ட் றேகனின் ‘றேகனோமிக்ஸ் ட்ரைவ்’ ஆகியன.
முரணாக, சிறீலங்காவின் தலைவர்கள் மிகவும் வித்தியாசமான கோட்பாட்டு அணுகுமுறைகளைக் கொண்டிருந்தார்கள் என அவர் தெரிவித்தார்.
தேசிய இனப்பிரச்சினை
தேசிய பிரச்சினைக்கு அவர் தனது தீர்வாக 13 பிளஸ் என்ற ஐ.தே.கட்சியின் கடந்த கால நிலைப்பாடே தன்னுடையதும் என்றார்.
“சில வருடங்கள் பின்னால் போனோமென்றால் வெளிவிவகார அமைச்சரும், பின்னர் ஜனாதிபதியும் தத்தம் கேட்போர் அரங்கங்களுக்கு ஏற்றாற்போல் கதைகளைச் சொனார்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருக்கும்போது 13 பிளஸ் என்பதையும், சிறீலங்காவிற்குத் திரும்பியவுடன் 13 மைனஸ் என்பதையும் அடித்துச் சொன்னார்கள். என்னைப் பொறுத்த வரையில், எனது தொடர்ச்சியான கொள்கை, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பயிர்வு’ என்பதே” என்பதை வலியுறுத்தினார்.
” ஒன்றுபட்ட இலங்கை என்று நான் சொல்லும்போது, எல்லா மதங்களைச் சார்ந்தவர்களும், இனக் குழுமங்களும், பொருளாதார, சமூக மற்றும் இதர பின்னணிகளைக் கொண்டவர்களும், தங்கள் இதயங்களில் இந்த ஒன்றுபட்ட குணாதிசயத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். வெறுமனே ‘ஒன்றுபட்ட’ என்ற சொல் மட்டும் எனக்குத் திருப்தியைத் தராது. எல்லா இலங்கையர்களும் தங்கள் இதயங்களில் உணர்ந்து கொள்ளும் வகையில் நாம் சட்டங்களை உருவாக்கயோ, கொள்கைகளை உருவாக்கியோ, கற்றலுக்குட்படுத்தியோ சாதிக்க வேண்டும்.” என்றார் பிரேமதாச.
” இதைச் செய்வதற்கு நாம் முதலில் எமது சமூகத்திலிருந்து இனத் துவேசத்தை ஒழிக்க வேண்டும். பாகுபாட்டையும், ஏற்றத்தாழ்வையும் அகற்ற நாம் போராட வேண்டும். கலவரங்கள் இருக்க முடியாது. துவேசங்கள் இருக்க முடியாது” என கரகோசஹ்த்தின் மத்தியில் கூறினார்.
பெண்கள்
பெண்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்களை முன்னிலைப்படுத்தும் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றார் அவர்.
“எமது நாட்டின் பெண்களது உரிமைகளை முன்னெடுக்கும் வகையில் அவர்களுக்குச் சார்பான பேதப்படுத்தலை நாம் கையாள வேண்டும். இவ் விடயங்களில் நோக்குள்ள அரசாங்கத் தலையீடு அவசியம்” என்றார்.
எதிர்காலச் சந்ததிகளுக்காக, ஸ்காண்டினேவியன் நாடுகளில் உள்ளதைப்போல் தேசிய சேமிப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“எல்லா இலங்கையர்களும் பங்கெடூக்கும் வகையில் தேசிய சேமிப்பு நிதியமொன்றிற்கான கொள்கை முன்மொழிவைச் செய்திருக்கிறோம். இது அவர்களது அத்தியாவசிய, அவசரகாலத் தேவைகளுக்கு உதவிசெய்யும்” என அவர் குறிப்பிட்டார்.