ஒன்ராறியோ: 2026 முதல் சர்வதேச மருத்துவ மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு
ஒன்ராறியோ மாகாண அரசு தீர்மானம்
ஒன்ராறியோ மாகாணத்தில் நிலவும் குடும்ப மருத்துவர் பற்றாக்குறையைத் தீர்க்குமுகமாக 2026 முதல் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் மாகாணத்திலுள்ள மாணவர்களுக்கே முதலிடம் கொடுக்கவேண்டுமென்ற சட்டமொன்றை நிறைவேற்றும் திட்டமொன்றை மாகாண முதல்வரும் சுகாதார அமைச்சரும் அறிவித்திருக்கிறார்கள். இம்மாகாணத்தில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறைக்குக் காரணம் இங்குள்ள மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலும் சர்வதேச மாணவர்களுக்கே முதலிடம் வழங்குவதே என மாகாண அரசு குற்றஞ்சாட்டுகிறது.
2026 பிற்பகுதியில் நடைமுறைக்கு வரவிருக்கும் இப்புதிய சட்டத்தின்படி இக்கல்லூரிகளின் 95% மான இடம் மாகாண விண்ணப்பதாரிகளுக்கே வழங்கப்படவேண்டும். மீதி 5% மும் இதர மாகாணங்களில் வாழும் கனடிய மாணவர்களுக்கே வழங்கப்படும் எனவும் 2026 முதல் சர்வதேச மாணவர்களுக்கு ஒன்ராறியோ மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கப்படாது எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஒன்ராறியோ மருத்துவர் சங்கத்தின் அறிக்கையின்படி 2024 ஜூலை வரை 2.5 மில்லியன் ஒன்ராறியோ வாசிகள் குடும்ப வைத்தியரின்றி அவதிப்படுகின்றனர்.
இப் புதிய சட்டத்தின்படி இக்கல்லூரிகளில் கற்று வெளியேறும் மருத்துவர்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் தங்கி சேவைகளை வழங்கும் பட்சத்தில் அவர்களது கல்லூரிக்கட்டணத்தை மாகாண அரசின் மானியம் பொறுப்பேற்கும். ஏறத்தாள 1,360 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இம்மானியத்தைப் பெறத் தகுதி பெறுவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெஹ்ரிவித்திருக்கிறார். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் 1.4 மில்லியன் ஒன்ராறியோ வாசிகள் குடும்ப மருத்துவரைப் பெறக்கூடியதாகவிருக்கும் என நம்பப்படுகிறது.
கனடா முழுவதிலும் 17 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனாலும் இவற்றின் இடம் போதாமை காரணமாக பல விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. (Image Courtesy: Chen Showei)
