ஒன்ராறியோ வாசிகள் தடுப்பூசிப் பத்திரத்தை தரவிறக்குவது எப்படி?How to Download Your COVID-19 Vaccination Certificate?
செப்டம்பர் 22 முதல் ஒன்ராறியோ மாகாணத்தில் அவசியமற்ற சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் தாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சிப் பத்திரங்களைச் சேவை பெறுமிடங்களில் சமர்ப்பிக்கவேண்டும்.
இந்த அத்தாட்சிப் பத்திரத்தை ஒன்ராறியோ மாகாண இணையத்தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இவ்விணையத் தளத்தில் நுழைவதற்கு உங்கள் மாகாண சுகாதார அட்டை தேவைப்படும். தரவிறக்கப்பட்ட பத்திரத்தை அச்செடுத்து (print) வைத்துக்கொள்ளலாம் அல்லது பத்திரத்தின் PDF பிரதியை உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். தரவிறக்கும்போது ஒன்ராறியோ மாகாணத்தின் சுகாதார அமைச்சின் இலச்சினை இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். இப் பத்திரத்தின மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.

இப்பத்திரம் அச்சில் எடுக்கப்பட்டதானாலும், ஃபோனில் தரவிறக்கப்பட்டதானாலும் செல்லுபடியாகும். பத்திரத்தில் காணப்படும் பெயரும், பிறந்த திகதியும் உங்கள் அடையாள அட்டையில் (உ+ம் சாரதி அனுமதிப்பத்திரம்) உள்ளதுபோல இருக்க வேண்டும். இரண்டாவது தடுப்பூசி பெறப்பட்டு குறைந்தது இரண்டு வாரங்களாகியிருக்கவேண்டும்.
“முழுமையாக தடுப்பூசி பெற்றவர்” என்ற ஒன்ராறியோ மாகாணத்தின் வரைவிலக்கணத்துக்கு இணக்கமாக இருப்பின், வெளிமாகாணங்கள், வெளிநாடுகளினால் வழங்கப்பட்ட தடுப்பூசி அத்தாட்சிப் பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
நீங்கள் முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர் எனக் கருதப்படுவதற்கான ஆதாரங்கள்:
- மொடேர்ணா, ஃபைசர்-பயோஎன்ரெக், அஸ்ட்றாசெனிக்கா (கோவிஷீல்ட் உட்பட), எப்படியான கலப்பு முறையிலாகிலும், இரண்டு டோஸ்கள் எடுத்திருந்தால்
- கனடிய சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசீயில் ஒன்று அல்லது இரண்டு டோஸ்களுடன் கனடிய சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு டோஸ் mRNA ரக தடுப்பூசியையும் (மொடேர்ணா அல்லது ஃபைசர்) பெற்றிருந்தால்
- கனடிய சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றில் மூன்று டோஸ்கள் எடுத்திருந்தால், நீங்கள் முழுமையாகத் தடுப்பூசி ஏற்றப்பட்டவர் எனக் கருதப்படுவீர்கள்.
அடையாளப் பத்திரம்
அச்ச்டைக்கப்பட்ட தடுப்பூசிப் பத்திரம் அல்லது ஃபோனில் தரவிறக்கப்பட்ட பத்திரத்தோடு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட, உங்கள் பெயர், பிறந்த திகதி ஆகிய தகவல்களைக் கொண்ட ஒரு அடையாளப் பத்திரம் இருந்தால் போதுமானது. அடையாளப் பத்திரம் உங்கள் படத்துடன் கூடியதாக இருக்கவேண்டியதில்லை.
எந்தெந்த இடங்களில் தடுப்பூசி அத்தாட்சிப் பத்திரத்தைக் காட்டும்படி கேட்கப்படுவீர்கள்?
- உள்ளிருந்து உணவருந்தும் உணவகஙகள் மற்றும் இரவு விடுதிகளின் உள் மற்றும் வெளியரங்குகள்
- இசையரங்குகள், திரையரங்குகள், சூதாட்ட நிலையங்கள், பிங்கோ மண்டபங்கள் மற்றும் அதற்கிணையான விளயாட்டு மண்டபங்கள்
- உள்ளக விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், நீர்ப் பூங்காக்கள், பொழுதுபோக்கு விளையாட்டு அரங்குகள்
- உள்ளக மாநாட்டு மண்டப நிகழ்வுகள், பெரியளவிலான குடும்ப நிகழ்வுகள்
- உள்ளக குதிரைப் பந்தய நிகழ்வுகள், காரோட்டப் பந்தய நிகழ்வுகள்
- உள்ளக காமக் கேளிக்கை நிலையங்கள்
தவிர்க்கப்படுபவர்கள்
12 வயதுக்குக் குறந்தவர்களிடம் தடுப்பூசி அத்தாட்சிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கும்படி கேட்க முடியாது. அதே போல் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசியைப் பெற முடியாதவர்களிடமும் இப் பத்திரத்தைக் கேட்க முடியாது.
டிஜிட்டல் தடுப்பூசிப் பத்திரம்
அக்டோபர் 22 முதல் ஒன்ராறியோ மாகாணம் டிஜிட்டல் முறையிலான அத்தாட்சிப் பத்திரத்தை வழங்க ஆரம்பிக்கும். இதன் போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட QR இலச்சினை ஒன்றை நீங்கள் உங்கள் ஃபோன்களில் தரவிறக்கி வைத்துக்கொள்ளலாம். அனுமதி தேவைப்படும் இடங்களில் இவ்விலச்சினையை ஸ்கான் செய்து, அது சரியானாதாக இருக்கும் பட்சத்தில் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.