ஒன்ராறியோ வாகன உரிமையாளர்கள் இனிமேல் இலக்கத் தகடுகளுக்கான ஒட்டிகளை வாங்கத் தேவையில்லை

ஒன்ராறியோவாசிகள் இனிமேல் வருடம் $120 டாலர்கள் கொடுத்து தமது வாகனங்களுக்கான இலக்கத்தகடு ஒட்டிகளை (license plate stickers) வாங்கத் தேவையில்லை என மாகாண அரசு உத்தேசித்து வருவதாக அறியப்படுகிறது.

இதுபற்றிய முடிவெதையும் மாகாண அரசு எடுக்கவில்லையாயினும், நடைமுறைப்படுத்தப்படின், பயணி வாகனங்கள் (passenger vehicles), பாரமற்ற வணிக வாகனங்கள் (light commercial vehicles), பிக்கப் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான வருடாந்த ஒட்டிகளை இனிமேல் வாங்கத் தேவையில்லை என அறியப்படுகிறது.

நடைமுறைப்படுத்தப்பட்டால் ஒன்ராறியோ மாகாண அரசு இதன் மூலம் வருடமொன்றுக்கு $1 பில்லியனுக்கு மேல் வருமான இழப்பைச் சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படுமெனத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கெனவே இவ்வருடத்துக்கான ஒட்டிகளை வாங்கியவர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையில் உரிய பகுதியை அரசாங்கம் திருப்பிக் கொடுக்குமெனவும் கூறப்படுகிறது. இப்பணத்தின் தொகை கணீக்கப்பட்டவுடன் அவற்றை வங்கிக்கணக்குகளில் நேரடியாக இடுகை செய்யப்படுவதற்கான திட்டங்களையும் அரசு ஆராய்ந்துவருவதாகத் தெரிகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அரசாங்கம் இப்படியான சலுகைகளை அறிவிக்கவுள்ளது எனவும், பெரும்பாலான வாகனச் சொந்தக்காரர்கள் ரொறோண்டோ பெரும்பாகத்துக்கு வெளியே வாழ்வதால் அவர்களது வாக்குகளைப் பெற டக் ஃபோர்ட் அரசாங்கம் இம்முயற்சிகளை எடுத்துவருகிறது எனவும் கூறப்படுகிறது.

கோவிட் பெருந்தொற்றைத் தவிர்க்கும் அரசாங்கத்தின் நடைமுறைகளுக்கிணங்க மார்ச் 2020 முதல் வாகனச் சொந்தக்காரர்கள் இவ்வொட்டிகளைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பெப்ரவரி 28 உடன் நிறைவுக்கு வருகிறது.

தற்போது ஒன்ராறியோ மாநிலத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. (சீ.ரீ.வீ. நியூஸ்)