ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேர்தல் 2022: ‘ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்….’
மாயமான்
இன்று வாக்களிப்பு நாள். மறுபடியும் போர்ட்டர் தான் வருவார் என்கிறார்கள். அவர் தூக்கிவைத்துக் கொஞ்சும் தமிழ்ப் பரிவாரமும் அதைத்தான் சொல்கிறது. அரசியல் என்று புறப்பட்டுவிட்டால் விபச்சாரம் வீட்டுப்பிள்ளையாகிவிடும். அது தமிழர்களுக்கு மட்டும் என்று எழுதப்பட்ட விதி அல்ல.
இரண்டு தமிழர்கள் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிடுகிறார்கள். இருவரும் முதலாவது அலையில் குதித்துக் கரை சேர்ந்தவர்கள். இப்போதும் அலை சாதகமாகவிருக்கிறது என்றுதான் நம்பப்படுகிறது. இந்த இருவரில் சின்னவர் புலி வாலைப் பிடித்தமைக்காக முதலாவது தேர்தலின்போது பெரும்சமூக ஊடகங்களால் கிழிக்கப்பட்டவர். புலி தானாகவே வாலைத் தனது கைகளில் திணித்தது என்பதுபோல் கதையைவிட்டுப் பின்னர் கழற்றிக்கொண்டார். ஆனாலும் புலிக்குக் காடுதான் பலம். இனப்படுகொலை என்றொரு பந்தைத் தூக்கிக்கொண்டு ஓடத் தொடங்கினார். டக் ஃபோர்ட் அரசாங்கமும் ‘பொடியன் விளையாடட்டும்’ என்று விட்டு விட்டு இருந்தது. Bill 104 என்ற ‘இனப்படுகொலைக் கற்கை வார’ சட்டமூலத்தைக் கொண்டுவந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி கனடிய, உலக சிங்களவர் வயிறுகளில் புளியைக் கரைத்திருந்தார். Bill 104 கன்சர்வேட்டிவ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்கள் மத்தியில் அன்னியப்பட்டிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியைத் தமிழர்களது வீடுகளில் உள்வீட்டுப் பிள்ளையாக மாற்றுமளவுக்கு நீக்கமறை நிறைத்துவைத்தது. ஆனால் இப்போது கன்சர்வேட்டிவ் கட்சி தமிழரின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதோ என்று மக்கள் சந்தேகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று ஒரு கதையை விடலாம்.
எல்லாம் இந்த Bill 104 இனால் தான். ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட Bill 104 ஒரு ACT எனப்படும் சட்ட அந்தஸ்தைக் கொண்டது. சட்டமன்ற அங்கத்தவர்களிடையே வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேறிய ஒரு சட்டம். கனடிய மத்திய பாராளுமன்றத்தில் நிறைவேறிய தனிநபர் சட்டமூலம் போன்றதல்ல இது. ‘இனப்படுகொலைக் கற்கை வாரம்’ என வருடத்தில் ஒரு வாரத்தை ஒதுக்கி 2009 இல் இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை எனவும் இவ் விடயம் ஒன்ராறியோ பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டு இனப்படுகொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுவுமே இதன் அடிப்படை நோக்கம் எனக்கூறப்பட்டது. இவ்விடயத்தில் உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பாலான ஈழத் தமிழர்கள் கருத்தொருமித்திருந்தார்கள் என நம்பலாம். ‘இனப்படுகொலை’ என்ற பதம் என்னதான் அரசியல்மயப்படுத்தப்பட்டாலும் 2009 சம்பவங்கள் தமிழ்மக்களின் இதயங்களில் எப்போதும் வலிகளைத் தந்துகொண்டேதான் இருக்கும். 1948 இல் இருந்து தமிழினத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி, மதம், இருப்பு, நிலம், சுதந்திரம் என்பன சிங்கள-பெளத்த பேரினவாதிகளால் அரச துணைகொண்டு அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு வருகிறது என்பது ஒரு இனத்தை ஒட்டுமொத்தமாகப் படுகொலை செய்வதற்குச் சமம்.
இருந்தாலும் 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை என்ற வரைமுறைக்குள் அடங்காது என வாதிடுவோரும் உள்ளனர். அங்கு நடைபெற்றவை மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் (crimes against humanity), போர்க்குற்றங்கள் (war crimes) ஆகிய வரைமுறைகளுக்குள் அடங்குவன என்பதால் அவற்றையே தமிழர்கள் சர்வதேச அரங்குகளில் ஒலிக்கவேண்டும் சர்வதேச சட்டவியல் நிபுணர்களை மேற்கோள் காட்டி சிலர் கூறிவருவதும் உண்டு. ஆனாலும் சர்வதேசங்கள் இந்த வரைமுறைகளைத் தம்மைப் பலப்படுத்தவும் மற்றவர்களைப் பலவீனப்படுத்தவுமென்பதற்காகவுமே பயன்படுத்தி வருகிறார்கள் என்ற பின்னணியில் இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை எனக் குரலெழுப்புவர்களது குரல்வளைகளை நசுக்கவேண்டுமெனக் கூறுபவர்களுடன் எனக்கு உடன்பாடில்லை.
‘2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களோடு புலிகளும் நின்றார்கள். அவர்கள் enemy combattants. அதனால் அவர்கள் மீது குண்டுகளை வீசினோம். துர்ப்பாக்கியமாக அருகில் நின்ற பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். அது colatteral damage. அமெரிக்காவும் இதையேதான் செய்தது’ என்கிற பாணியில் இலங்கை அரசு சர்வதேசங்களின் வாய்பாடுகளைத் திரும்ப ஒப்படைப்பதால் சர்வதேசங்களின் காதுகளும் வாய்களும் பூட்டப்பட்டுவிட்டன. எனவே நீதி, வரைமுறை என்றெல்லாம் உலகுக்குப் போதிக்க நேர்மையான ஒரு நாடும், மனிதனும் இப்போதைக்கு இல்லை. இதனால் நாமே தான் நமது போராட்டத்தை நிகழ்த்தவேண்டும்.
இப் பின்னணியில் Bill 104 சமீபத்தில் எழுப்பியிருக்கும் சர்ச்சை பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியமானது. இச் சட்டம் ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் நிரைவேற்றப்பட்டிருந்த போதிலும் இது கனடாவின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்குமான பட்டயத்திற்கு (Charter of rights and Freedoms) முரணானது; தனிப்பட்ட கருத்துச்சுதந்திரதிற்கு தடையாக இருக்கிறது எனக்கூறி ஒன்ராறியோ மாகாண அரசுக்கெதிராக நீதிமன்றமொன்றில் சில சிங்களக் கனடியர்கள் வழக்கொன்றைப் பதிவுசெய்திருந்தார்கள். இவ்வழக்கில் பிரதிவாதியாக (defendant) ஒன்ராறியோ மாகாண அரசே குறிப்பிடப்பட்டிருந்தது. இவ் வழக்கு சென்றவாரம் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அங்கு மாகாண அரசு நேரடியாகத் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. பதிலாக சில தமிழர் அமைப்புகள் தங்களாலியன்ற வகையில் வழக்கறிஞர்களின் உதவியுடன் இவ்வழக்கை எதிர்கொண்டிருந்தனர். Zoom வழியாக நடைபெற்ற இவ்வழக்கின் ஒரு நாள் இருக்கையில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. இவ்வழக்கு முடிவுற்றதாயினும் அதன் தீர்ப்பு என்ன என்பது பற்றியோ அல்லது அது வெளியிடப்பட்டுவிட்டதா என்பதுபற்றியோ அறியச் சந்தர்ப்பம் கிட்டவில்லை.
இதே வேளை, ரொறோண்டோவில் இருந்து வெளிவரும் NOW என்றொரு சஞ்சிகையில் இதுபற்றி தமிழ் சமூக செயற்பாட்டாளர் கிருஷ்ணா சரவணமுத்து நல்லதொரு கட்டுரையை எழுதியிருக்கிறார். ‘டக் ஃபோர்ட், தமிழர் போராட்டம் விற்பனைக்குரியதல்ல’ என்பது அக்கட்டுரையின் தலைப்பு. ஒரிரண்டு வசனங்களில் சொல்வதானால் ‘கன்சர்வேட்டிவ் கட்சி தமிழர்களுக்குக் கன்னத்தில் அறைந்துவிட்டது’ எனலாம். அதாவது Bill 104 இல் பாவிக்கப்பட்ட ‘இனப்படுகொலை’ என்ற பதம் வெறுமனே ஆரம்ப அழகூட்டலுக்காகச் சொல்லப்பட்டதே தவிர அதற்கு எந்தவிதமான சட்ட அந்தஸ்தும் (non binding) இல்லை என ஒன்ராறியோவின் சட்டமா அதிபர் தெரிவித்திருந்ததாக கிருஷ்ணா கூறுகிறார். அதாவது ‘தயவு செய்து எங்களை விட்டிருங்கோ, இந்தப் பெடியன் கேட்டதுக்காக நாம் ஓமெண்டு சொல்லிப் போட்டம்’ என்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஃபோர்ட்டும் குழுவினரும் ஓடிவிட்டார்கள் எனவே கருதவேண்டியிருக்கிறது.
இதில் அரசியல் / நகைச்சுவை என்னவென்றால் இன்று மாகாண சட்டமன்றத் தேர்தல். விசயம் வெளியே தெரிந்தால் தமிழ் வாக்காளர்களது அலை, வேட்பாளர்களை மறுதிசையில் அடித்துச் செல்லக்கூடும் என்ற காரணத்தால் போர்ட் பரிவாரம் மட்டுமல்ல, இரு தமிழ் வேட்பாளர்களும் கதவுகளைத் தட்டுவதற்குப் பயப்படுகிறார்கள் என்று கேள்வி. பெரும் சமூக ஊடகங்களுக்கு தமிழர்கள் செய்யும் குற்றங்கள் மட்டுமே கண்ணில் தெரிவதால் இதைக் கிளறி ஃபோர்ட்டிடம் பேச்சு வாங்க விரும்ப மாட்டார்கள். எனவே தேர்தல் முடியும்வரை இவ்விடயம் அமுக்கியே வாசிக்கப்படும்.
கிருஷ்ணாவின் இக்கட்டுரையின் பின்னாலுள்ள ஆதங்கம் புரிகிறது. இனப்படுகொலை வரைவுக்குட்படுகிறதோ இல்லையோ அது தமிழரது நெஞ்சங்களோடு பிணைந்துள்ள பிரச்சினை. அதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று அவர் குமுறுகிறார். அதை அரசியலாக்கியது கன்சர்வேட்டிவ் கட்சியல்ல நம்மவர்கள் தான் எனினும் எமது பறைகளை அடிப்பதற்கு பாராளுமன்ற வளாகங்களை விட்டால் வேறிடங்கள் இல்லை என்ற வகையில் அரசியலில் இதுவும் சகஜம் என எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் கனடியத் தமிழர் கன்சர்வேட்டிவ் கட்சியினால் மேலுமொரு தடவை முதுகில் குத்தப்பட்டுள்ளார்கள் என உங்களில் யாராவது நினைத்தால் அந்த வரிசையில் நானும் இணைந்துகொள்வேன். அதே வேளை பின்னால் ஒருவர் பலாப்பழத்துடன் வருகிறார் அவரும் ‘இனப்படுகொலை’ என முனங்கிக்கொண்டு வருகிறார் என்று யாரோ நக்கலடிப்பதுவும் கேட்கிறது.
இந்தவேளையில் சைட் எடுக்க முடியாது. ‘ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்’ என்று ஓரமாகப் போய்விடுவதுதான் சரி.