ஒன்ராறியோ | பெற்றோர்கள் இரண்டாவது கோவிட் உதவிப் பணத்துக்கு விண்ணப்பிக்கலாம்


கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தமது குழந்தைகளின் காப்பகச் செலவீனம், கற்கைச் செலவீனம் ஆகியவற்றின் அதிகரிப்பைச் சமாளிக்க ஒன்ராறியோ மாகாண அரசு இரண்டாவது கோவிட் நிவாரண நிதியொன்றை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இந்நிவாரண நிதிக்கான ஒதுக்கீட்டைச் செய்வதாக, திங்களன்று (நவம்பர் 30), மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

“அரசங்கத்தின் கோவிட் ஆலோசனைகளைச் சிரமேற்கொண்டு பல்லாயிரம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை பாதுகாப்பான வழிகளில் வழங்குவதற்காக பல தியாகங்களைச் செய்து வருகிறார்கள். இதன் பொருட்டு, இந்த மாகாணத்தில் வதியும் ஒவ்வொருவருக்கும் ஆதரவை வழங்க நாம் காத்திருக்கிறோம். இதற்காக ஆரம்பிக்கப்பட்ட “கற்பவர்களுக்கான ஆதரவு” திட்டம் இணையவழி விண்ணப்பங்களைப் பெறும் வகையில் இன்றுமுதல் தன் சேவைகளை ஆரம்பிக்கிறது என்பதை இன்று நான் அறிவிக்கிறேன்” என அவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இத் திட்டத்தின்படி, 12 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளையுடைய பெற்றோர்கள் ஒரு குழந்தைக்கு $200 வீதம் ஒரு தடவைப் பணமாகவும், 21 வயதுக்குக் குறைந்த, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளையுடைய (special education needs) பெற்றோர்கள் தலைக்கு $250 வீதமும் பெற்றுக் கொள்ளலாம். இப் பிள்ளைகள் நேரில் பாடசாலைகளுக்குச் செல்பவர்களாகவோ அல்லது இணையவழியில் கற்பவர்களாகவோ இருக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் இணையவழி வசதிகள் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டன. விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு அண்ணளவாக இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பதாரியின் தகமைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கான பணம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இடுகை செய்யப்படும்.



விண்ணப்பத்திற்கான இறுதித் திகதி ஜனவரி 15, 2021

விண்ணப்பங்களை அனுப்புவதற்கு பின்வரும் இணையவழித் தொடுப்பை அழுத்தவும். அடுத்த வருடம் ஜனவரி 15 வரை இந்த ‘ஒரு தடவை நிவாரண நிதி’க்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஒன்ராறியோ மாகாண அரசினால் வழங்கப்படும் இரண்டாவது கோவிட் உதவிப்பணம் இதுவாகும். ஏற்கெனவே வழங்கப்பட்ட $378 மில்லியன் டாலர்களோடு இரண்டாவது உதவிப்பணமாக $380 மில்லியன் டாலர்களை வழங்க மாகாண அரசு நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது.

கோவிட் தொற்றினால் பெற்றோர்கள் தமது குழந்தைகளின் எதிர்பாராத கல்விச் செலவுகளைச் சுமக்கவேண்டி ஏற்பட்டது. அதற்கு நிவாரணமாக மாகாண அரசு இத் திட்டத்தை அறிவிக்கிறது என ஒன்ராறியோ மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்கீ அறிவித்துள்ளார்.