HealthNews & AnalysisUS & Canada

ஒன்ராறியோ | ஜூன் 2 வரை வீட்டு முடக்கம் தொடரும் – முதல்வர் டக் ஃபோர்ட் அறிவிப்பு!

ஒன்ராறியோ மாகாண அரசினால் அறிவிக்கப்பட்டு மே 20 வரை நடைமுறையிலிருந்த ‘வீட்டு முடக்க’ ( Stay at Home) கட்டளை மேலும் இரு வாரங்களால், ஜூன் 2 வரை, நீடிக்கப்பட்டுள்ளது.

வியாழனன்று (13), ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் இவ்வறிவித்தலைச் செய்துள்ளார்.

மாகாண அரசின் ‘வீட்டு முடக்க’ கட்டளை, ஏப்ரல் 8ம் திகதியிலிருந்து, 6 வாரங்களுக்கு நடைமுறையிலிருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

வியாழனன்று ஒன்ராறியோ மாகாணத்தின் தொற்று எண்ணிக்கை 2,759 எனவும், மொத்த தொற்றாளர் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டிவிட்டது எனவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தீவிர் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரு வாரங்களாகச் சரிவடைந்து வருகின்றது எனினும் சராசரி நாட் தொற்று இன்னும் 3,000 அளவில்தான் இருக்கிறது. இவ்வெண்ணிக்கை 1,000 த்துகும் உள்ளே வரும்வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படமாட்டாது எனவே எதிர்பார்க்கலாம் என மாகாண சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

வியாழனற்று அறிவிக்கப்பட்ட தொற்று எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்து சராசரியைவிடக் குறைவாக இருப்பதற்குக் காரணம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடமாட்ட முடக்கமே என்பது தெளிவாகத் தெரிந்துள்ளது.

“நாம் கடந்துவந்த பாதையோடு ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல செய்தி என மக்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. இரண்டாவது அலையிலிருந்து முற்றாக வெளிவராத நிலையில் நாம் மூன்றாவது அலைக்குள் மாட்டுப்பட்டு விட்டோம். இது இன்னுமொருதடவை நடைபெற நாம் அனுமதிக்கப் போவதில்லை. தடுப்பூசி வழங்குதல் திட்டம் மிகவும் சீராக நடைபெற்று வருவதால், இன்னும் இரண்டு வாரங்கள் பொறுமை காப்போமானால், நாம் எதிர்பார்க்கும் கோடை அனுபவத்தைப் பெற ஏதுவாக இருக்கும். அதுவரை ஒன்ராறியோ மெதுவாகவே நகரும்” என டாக்டர் வில்லியம்ஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஒன்ராறியோ, தற்போது நாளொன்றுக்கு 100,000 தடுப்பூசிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை 6.6 மிலியன் டோஸ்கள் கொடுக்கப்பட்டு விட்டன. 407,600 பேர்கள் இரண்டாம் கட்டத் தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டனர்.

உரிய காலத்தில் தடுப்பூசிகள் எமக்குக் கிடைக்குமானால் கோடைக்கு முன்னரே சகலரும் இரண்டு ஊசிகளையும் பெறக்கூடியதாகவிருக்கும் என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.

மே 31 முதல் 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கல் ஆரம்பமாகும் எனவும் ஜூன் 14 முதல், ஒரு வாரத்துக்கு ‘இளையோருக்கும் குடும்பங்களுக்குமான’ விசேட கிளினிக்குகளை ஒழுங்குசெய்திருப்பதாகவும், போர்ட் தெரிவித்துள்ளார்.