NewsUS & Canada

ஒன்ராறியோ | செப்டம்பர் 30 விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தப்படமாட்டாது


மத்திய, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசுகள் செப்.30 ஐ ‘தேசிய உண்மைக்கும் நல்லிணக்கத்துமான தினமாகப்’ பிரகடனம்

சுதேசிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அவர்களுக்கு நீதி, நிவாரணம் வழங்கப்படுவதை முன்வைத்து கனடாவின் மத்திய அரசு பல முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. அதில் ஒன்றாக, செப்டம்பர் 30 ம் திகதியைத் தேசிய விடுமுறை நாளாக அது அறிவித்திருக்கிறது.

“தேசிய உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான நாள்” (National Truth and Reconciliation Day) என்ற பெயரில் இவ் விடுமுறை நாள் நாடு பூராவும் அனுட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் ஒன்ராறியோ மாநிலம் அதை ஏற்றுக்கொள்ளமாட்டாது என மாகாண சுதேசிகள் விவகார அமைச்சர் கிரெக் றிக்ஃபோர்ட் அறிவித்துள்ளார்.

இருப்பினும், ஒன்ராறியோவில் பணிபுரியும் மத்திய அரசின் திணைக்களப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கங்களினால் பேரம் பேசப்பட்டு உடன்பட்ட நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர், கனடா தொழிற் சட்டத்தின் ஆளுமைக்குள் வருவதால், அவர்கள் செப் 30 ஐ விடுமுறை நாளாக அனுட்டிக்க முடியுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசினாலும், கத்தோலிக்க சபையினாலும் மிக மோசமாக நடத்தப்பட்ட கனடிய சுதேசிகளுக்குப் பரிகாரம் வழங்குமுகமாக, செப்டம்பர் 30 ம் திகதியை தேசிய விடுமுறை நாளெனக் கனடிய மத்திய அரசு இந்த வருடம் ஜூலை மாதம் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, சென்ற மாதம், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசும் இந் நாளை மாகாண விடுமுறை நாளாக அறிவித்திருந்தது. சென்ற வாரம் வரை ஒன்ராறியோ மாகாண அரசு இது பற்றி ஒரு முடிவையும் எட்டவில்லை எனக் கூறிவந்தது.

இதர மாகாணங்களில், நியூ பிறண்ஸ்விக், அல்பேர்ட்டா, சாஸ்கச்செவன் ஆகியன செப். 30 ஐ விடுமுறை நாளாகப் பிரகடனப் படுத்துவதில்லை எனத் தீர்மானித்துள்ளன.

இதன் காரணமாக செப்டம்பர் 30 அந்று, ஒன்ராறியோ மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும்.

ஒன்ராறியோ மாகாணம் தற்போது வருடத்தில் 9 நாட்களைப் பொது விடுமுறை நாட்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அவை: New Year’s Day, Family Day, Good Friday, Victoria Day, Canada Day, Labour Day, Thanksgiving Day, Christmas Day, and Boxing Day ஆகும்.