ஒன்ராறியோ | கோவிட்-19 நான்காவது அலை இதுவரை அறிந்ததைவிட மிக மோசமாகவிருக்கும்-நிபுணர்கள்


அடுத்ததாகத் தாக்கவிருக்கிறது என எதிர்பார்க்கப்படும் கோவிட்-19 இன் நான்காவது அலை, நாம் இதுவரை சந்தித்ததைவிட மிக மோசமானதாகவிருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

“முதன் முதலாக நாம் அறிந்த வைரஸ் எம்மை விட்டு எங்குமே போய்விடவில்லை; அதை நாம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தவில்லை; அதன் தொடர்ச்சியே இப்போதும் நாம் சந்தித்துவரும் தொற்று” எனக்கூறும், இந்த ‘அலைகள்’ கருத்தில் உடன்படாத மருத்துவ நிபுணர்களும் இருக்கிறார்கள். இருப்பினும், கனடாவின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் தெரேசா ராம், “நான்காவது அலை ஏற்கெனவே தொடங்கி விட்டது; அதிகரிக்கும் தொற்றுக்கள் அதையேதான் சொல்கின்றன” எனக் கூறுகிறார்.

ஜூலை மாதம் முழுவதும், ஒன்ராறியோவின் தொற்றாளரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 200 என இருந்தது ஆனால் ஆகஸ்ட் 21 இல் அது 722 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி போடாதவர்கள். ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள 80% மானோர் முதலாவது தடுப்பூசியையும், 75% மானோர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறார்கள். தடுப்பூசிகளைப் போடுவதற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தடுப்பூசி வழங்கும் பல கிளினிக்குகளை நகராட்சி அரசுகள் குறைத்துக்கொண்டுள்ளன.

தடுப்பூசி போடுவது குறைந்ததற்கும், வேகமாக அதிகரித்துவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? நாம் இன்னுமொரு மோசமான கோவிட் அலையைச் சந்திக்கவுள்ளோமா? எனச் சில நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

புதிய டெல்ட்டா திரிபின் பரவலால், இன்னும் 3 வாரங்களில் ஒன்ராறியோவில் தொற்றாளர்களின் ஒருநாள் எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிக்கலாம் என, ஒன்ராறியோ கோவிட் ஆலோசனைக்குழுவின் விஞ்ஞானப் பணிப்பாளர் டாக்டர் பீட்டர் ஜூனி தெரிவித்துள்ளார். ஆனாலும் அதற்கான விஞ்ஞான ரீதியான கணிப்பை (modeling) அவர் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.



முதலாவது, இரண்டாவது தடுப்பூசிகளை இதுவரை பெறாதவர்கள் உடனடியாக அவற்றைப் போட்டுக்கொள்ளவேண்டுமென ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்டும் அவரது குழுவிநரும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். “நாங்கள் கோவிட் நோயை இன்னும் முற்றாக ஒழிக்கவில்லை. அது நீண்ட காலத்துக்கு எம்மோடு இருக்கப்போகிறது” என ஃபோர்ட் மக்களை எச்சரித்து வருகின்றார்.

மூன்றாவது அலையைத் தொடர்ந்து ஒன்ராறியோ மாகாணத்தால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத் தளர்த்தல் இப்போது மூன்றாவது படியில் இருக்கிறது. ஆனால் அதிகரித்துவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இத்தளர்த்தல் மூன்றாவது படியைத் தாண்டிப் போக அனுமதிப்பதாகவில்லை. இதனால் ஒனராறியோவில் இன்னுமொரு பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமோ என்று பல மாகாணவாசிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

இதே வேளை கோவிட் தொற்றினால் ஒன்ராறியோவின் சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மிகவும் களைப்பும் சலிப்புமடைந்துவிட்டனர் எனவும் பெருந்தொகையான தாதியர் இத் துறையை விட்டு வேறு தொழில்களுக்குச் செல்கின்றனர் எனவும் இதனால் ஏற்பட்டுவரும் தாதியர் பற்றாக்குறை கோவிட் கட்டுப்பாட்டு முயற்சிகளில் பாரிய தளர்வை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுகாதாரத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இந் நிலையில் நான்காவது அலை மோசமாக இருப்பின், அதுவும் மிகக் கடுமையான டெல்ட்டா திரிபின்போது, உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கலாம் எனவும் அவர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.