ஒன்ராறியோ | கோவிட் தடுப்பூசி அடுத்த வாரம் ஆரம்பம்
ஒன்ராறியோவின் கோவிட் தடுப்பூசிப் பிரயோகம் அடுத்த வாரம் ரொறோண்டோ மற்றும் ஒட்டாவா மருத்துவமனைகளில் ஆரம்பிக்கப்படுமெனவும், சுகாதாரப் பணியாளர், நெடுநாட் பராமரிப்புப் பணியாளர் ஆகியோருக்கு முதலில் இது வழங்கப்படுமெனவும் முதல்வர் ட்க் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
ஃபைசர்/பயோஎன்ரெக் நிறுவனங்களின் தயாரிப்பான தடுப்பூசியின் பிரயோகத்தைப் புதனன்று, கனடாவின் சுகாதார அமைச்சு அங்கீகரித்திருந்தது. பெல்ஜியத்திலிருக்கும் ஃபைசர் நிறுவனம் அடுத்த சில நாட்களில் இத் தடுப்பு மருந்துகளைக் கனடாவுக்கு அனுப்புமென அதன் கனடிய முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வருகின்ற செவ்வாய், டிசம்பர் 15 அன்று, ரொறோண்டோ மத்தியிலுள்ள யூனிவேர்சிட்டி ஹெல்த் நெட்வேர்க் (University Health Network (UHN)) மருத்துவமனைகள் மற்றும், ஒட்டாவா மருத்துவமனை ஆகியன நெடுநாட் பராமரிப்பு நிலையயம் மற்றும் இதர ஆபத்தான முன்னணி சுகாதாரப் பணிகளையும் செய்பவர்கள் முதலில் இத் தடுப்பூசியைப் பெறுவார்கள்.
ஒவு பெற்ற இராணுவ அதிகாரி ஜெனெரல் றிக் ஹில்லியெர் ஒன்ராறியோ மாகாணத்தின் கோவிட் தடுப்பூசி விநியோகத்தை நிர்வகிப்பார். இதற்காக ஒரு விநியோகச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இவ் விநியோகத்தின் முதற்கட்டமாக 6,000 அளவுகளை இச் செயலணி திங்களன்று பெற்றுக்கொள்ளும் எனக் கூறப்படுகிறது. ரொறோண்டோ மருத்துவமனைக்கு 3,000 அளவுகளும், ஒட்டவா மருத்துவமனைக்கு 3,000 அளவுகளும் வழங்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து இத் தடுப்பூசி வழங்கப்படுமெனவும், அதைப் பெறுவதற்கெனத் தெரியப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் அவ்விடத்திற்குச் சென்று ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டுமென்றும் கூறப்படுகிறது.
ஃபைசர் தடுப்பு மருந்து -60 முதல் -80 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்குக் கீழ் வைத்துப் பராமரிக்கப்படவேண்டும். இதனால் இத் தடுப்பு மருந்தை ஒரு குளிரூட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வைத்து மட்டுமே பராமரிக்க முடியும்.
இன்னுமொரு தடுப்பு மருந்தான மொடேர்ணாவை (Moderna) கனடிய சுகாதார அமைச்சு இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் அதைப் பாதுகாக்க விசேட உபகணங்கள் தேவையில்லை. சாதாரண குளிரூட்டிகளே போதும். பல நெடுநாட் பராமரிப்பு நிலையங்களில் வைத்தே இத் தடுப்பூசியைத் தேவையானவர்களுக்கு வழங்க முடியும் என ஹில்லியெர் தெரிவித்தார்.
டிசம்பர் மாத முடிவில் ஒன்ராறியோ மேலும் 90,000 அளவுகளைப் பெறலாம் எனத் தான் நம்புவதாகவும், அப்போது 13 மருத்துவமனைகள் தடுப்பூசி வழங்கும் நிலையங்களாக இருக்குமெனவும் ஹில்லியெர் தெரிவித்தார்.
டிசம்பர் முடிவில் 249,000 அளவுகள் மருந்தைப் பெறுவதற்கு கனடிய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்தோடு, சுகாதார அமைச்சு அங்கீகரிக்கும் பட்சத்தில், 35,000 முதல் 85,000 அளவுகள் வரையிலான மொடேர்ணா தடுப்பு மருந்தையும் பெறுவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.