ஒன்ராறியோ இனப்படுகொலை கற்கை சட்ட மூலம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் கடுப்பு
கனடிய தூதுவரிடம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்
ஒன்ராறியோ மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழினப்படுகொலை கற்கை சட்டமூலம் தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் இலங்கைக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கின்னனிடம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று (அக்.08) வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் வைத்து தூதுவர் மக்கின்னனைச் சந்தித்த அமைச்சர் பீரீஸ் இரு நாடுகளுக்குமிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தபோதே மேற்படி விவகாரம் தொடர்பாகத் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த தூதுவர் மக்கின்னன், இனப்படுகொலை தொடர்பான தீர்மானம், ஒன்ராறியோ மாகாண சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்று எனவும், இன்னும் அங்கீகார நடைமுறைக்குள் அது இருப்பதனால் அது பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறும்து அமைச்சருடன் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஒன்ராறியோ சட்டசபையில் ஸ்காபரோ உறுப்பினர் விஜே தணிகாசலம் அவர்களினால் தனிநபர் சட்டமூலமாக முன்மொழியப்பட்டு சட்ட அந்தஸ்கு கொடுக்கப்பட்டுள்ள இனப்படுகொலை கற்கை வாரச் சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை அரசாங்கம் ஒன்ராறியோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்துள்ளது.
போரின் பின்னர் இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து, இச் சந்திப்பின்போது அமைச்சர் எடுத்துரைத்தார் எனவும், அதை வரவேற்ற தூதுவர், ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு விடயங்களை நிறைவுசெய்ய இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொள்ள்வேண்டுமெனெ அமைச்சருக்கு தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது.