Spread the love

“ஒன்ராறியோ மாகாணம் கோவிட்-19 நோய்த்தொற்றைக் கையாளும் முறை பயனற்றது” என மாகாணத்தின் 34 பிரதேச மருத்துவ அதிகாரிகளில் ஒருவரான டாக்டர் சங்கர் நேசதுரை அரசாங்கத்தைச் சாடுகிறார். இது குறித்து அவர் இதர மருத்துவ அதிகாரிகளுக்கு எழுதிய ஈ-மெயில் தமக்குக் கிடைத்திருப்பதாக ‘ரொறோண்டோ ஸ்டார்’ அதன் நேற்றய (20) பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதர மருத்துவ அதிகாரிகளுக்கு அவர் எழுதிய மின் கடிதத்தில், தற்போது பரவி வரும் கோவிட்-19 கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு, ஒன்ராறியோ அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் சகலரையும் ஒன்றுபட்டு உழைக்கும்படி டாக்டர் நேசதுரை கேட்டிருக்கிறார்.

தற்போது ஒன்ராறியோ அரசாங்கம் கையாண்டு வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை எனவும், ஒவ்வொரு பிரச்சினையும் தோற்றும்போது ஒவ்வொரு தீர்வுகளை முன்வைக்கும் (piecemeal) அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் சாடுகிறார். “சுகாதாரப் பணியாளர் சுயநலம் பாராது அயராது, அர்ப்பணிப்போடு பாடுபட்டு நோயைக் கட்டுப்படுத்த எத்தனிக்கும் வேளையில் அரசோ சிறியதும் பெரியதுமாகப் பல வியாபார நிலையங்கள் இன்னும் திறக்கப்பட அனுமதித்திருப்பதும், பயணிகள் சுய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொள்வதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இதற்கு உறுதியான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசு தயங்குகிறது” என அவர் தனது மின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

“மருத்துவ அதிகாரிகள் தமது சட்ட அதிகாரங்களைப் பாவித்து வியாபார நிலையங்களை மூடச் செய்யவும், மக்களை வீடுகளில் தங்கச் செய்யவும் முயற்சிகளை எடுக்கவேண்டுமெனவும், இந்நொய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எங்களிடம் கால அவகாசம் அதிகமில்லை” என அவர் இதர மருத்துவ அதிகாரிகளை மின்கடிதம் மூலம் கேட்டுள்ளதாகச் செய்தி தெரிவிக்கிறது.




மக்மாஸ்டர் பல்கலைக் கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்ற டாக்டர் சங்கர் நேசதுரை, தற்போது ஹோல்டிமாண்ட் நோர்ஃபோக் சுகாதாரப் பிரிவில் மருத்துவ அதிகாரியாகக் கடமையாற்றுகிறார்.

ஒன்ராறியோவில் 318 நோய்த்தொற்றாளர்களில் 22 பேர் மரணமடைத்திருக்கிறார்கள் எனவும், 2002-2003 காலப்பகுதியில் ஒன்ராறியோவில் சார்ஸ் ஏற்படுத்தியிருந்த அதிர்ச்சி, இம் மாகாணத்தைத் தயார் நிலையில் வைத்திருந்திருக்க வேண்டுமெனவும் பலர் எதிர்பார்க்கிறார்கள்.

Print Friendly, PDF & Email
Related:  அபூர்வமான புதிய நோயறிகுறிகளைக் காட்டும் கோவிட்-19