Art & Literature

ஒட்டகங்களின் பயணம் – ஒஸ்லோ அரங்காற்றுகை குறித்த ஒரு பதிவு

கேமச்சந்திரன் மார்க்கண்டு

புலம்பெயர்ந்து வாழும் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களில் தீவிரமாக இயங்கி வருபவர் ரூபன் சிவராஜா. அரசியல், நாடகம், கலை, கவிதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களிலும் இயங்கிவரும் ரூபனின் மூன்று நூல்களின் அறிமுகமும் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை மையமாகக் கொண்ட ‘ஒட்டகங்களின் பயணம்’ அரங்காற்றுகையும் புத்தகக் காட்சியும் அண்மையில் ஒஸ்லோவில் நடந்தேறின. ஒட்டகங்களின் பயணம் குறித்த பதிவே இது.

தாயகத்திலிருந்து போர் காரணமாகப் புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழநேர்ந்த தலைமுறையொன்றின் நெருக்கடியை ‘அலாஸ்காவின் ஒட்டகங்கள்’ என தனது கவிதையொன்றில் சொல்லியிருப்பார் கவிஞர் ஜெயபாலன். ரூபன் சிவராஜாவின் ஒட்டகங்கள் வேறு வகைப்பட்டன. இவை நாய்கள் குரைத்தாலும் தமது பயணங்களை நிறுத்தாத ஒட்டகங்கள் பற்றிய கதைகள். இரண்டுமே வெவ்வேறு வகைப்பட்ட, வேறுபட்ட காலங்களின் நெருக்கடிகளைப் பேசுகின்ற குறியீடுகள்.

எளிய பார்வையாளர்கள் ஒரு படைப்பை கோட்பாட்டு ரீதியில் அணுகுவதில்லை. படைப்பு என்பது அனுபவங்கள் சார்ந்தது. அது யதார்த்தங்களின் மறுவுருவாக்கம். ஒரு படைப்பு பார்வையாளருக்கு ஏற்படுத்தும் உணர்வுகளும் தாக்கங்களுமே படைப்போடு அவர்களை ஒட்டவைக்கும். உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த நிகழ்வொன்றை தமது வாழ்வில் கடந்துபோன வேறொரு நிகழ்வொன்றுடன் தொடர்புபடுத்தும். நினைவுகளைக் கிளர்த்தும். உணர்வுகளை ஒன்றாக்கும். படைப்பு ஏற்படுத்தும் இதுபோன்ற அனுபவங்களே அதனை மேடை நிகழ்வு எனும் நிலையிலிருந்து முழுமையான ஒரு கலைப்படைப்பாக மாற்றும். ஒட்டகங்களின் பயணம் ஒரு முழுமையான கலை அனுபவம்.

ரூபனின் ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’ கவிதை நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளே ஒட்டகங்கள் பயணப்பட்ட பாதை. அனுபவமிக்க கலைஞர்களின் நெறியாள்கையிலும் ஆற்றுகையிலும் ரூபனின் கவிதைகள் வேறொரு பரிமாணத்தைத் தொட்டன. கவிதை என்பது வாசிப்பிற்கான ரு வடிவம். அதனை காட்சி ஊடகத்திற்கான வடிவமாக மாற்றும்போது வாசிப்பில் பிடிபடாத உயரங்களையும் அவை தொட்டுவிடலாம். இதுவே பல தேர்ந்த கலைஞர்களின் நேர்த்தியான ஆற்றுகையில் நிகழ்த்தப்படும்போது அவை ஏற்படுத்தும் உணர்வுகள் உச்சத்தைத் தொடும். ஒஸ்லோ நிகழ்வில் நிகழ்ந்ததும் அதுவே.

திரு சர்வேந்திரா தர்மலிங்கம் இதுபோன்ற அரங்காற்றுகை முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் ஒரு தேர்ந்த கலைஞர். சர்வேந்திராவுடன் நோர்வேயின் இரண்டாம் தலைமுறைக் கலைஞரான கவிதா லட்சுமியும் இணைந்து ஒட்டகங்களின் பயணத்தை நெறிப்படுத்தியிருந்தனர்.  கவிதைகள், நடனம், பாடல், இசை போன்ற பல்வகை கலைவடிவங்களும் இணைந்த ஒரு anthology வடிவில் இவ் ஆற்றுகை வடிவமைக்கப்பட்டிருந்தது. சமூகம், பெண்விடுதலை, பெண்கள் மீதான வன்முறை, தொழில்நுட்ப வளர்ச்சி மனித உறவுகளில் ஏற்படுத்திவரும் சிதைவுகள், விடுதலை உணர்வு, சமூக ஊடகங்களில் நிலவும் வன்முறை போன்ற கருப்பொருளில் ஒட்டகங்களின் பயணம் நிகழ்ந்தது. இந்நிகழ்வில் என்னைப் பெரிதும் கவர்ந்த மூன்று ஆற்றுகைகள் பற்றி மட்டும் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

‘முகங்கள்’ ஓர் ஆழமான தத்துவப்பார்வை கொண்ட ஒரு கவிதை. வாழ்வில் நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் பல்வேறு வகையான முகங்களையும் அவற்றை மறைத்துநிற்கும் போலியான முகமூடிகளையும் அவை நிகழ்த்தும் அபத்தமான வெளிப்பாடுகளையும் ஓர் அங்கதத் தன்மையோடு கூறுபிரித்துக்காட்டும் கவிதை இது. வாசிப்பின்போது இலகுவாக கடந்துபோகக்கூடிய ஓர் எளிய கவிதைதான். ஆனாலும் ஒவ்வொரு இயல்புக்குமேற்ற மாறுபட்ட முகமூடிகளோடும் அசைவுகளோடும் அவை மேடையை நிறைத்தபோதுதான், இம் முகங்களைக் கடப்பதும் சிரிப்பதும் வாழ்வின் பெருங்கலைதான் என்ற கவிதையின் கடைசி வரிகள் ஆழமாக நெஞ்சில் இறங்கின. இம்முகங்கள் அனைத்தும் ஒன்றுசேர, ஒரு காட்சிப்படிமமாக மேடையில் வெளிப்படும்போது கவிதையின் பரிமாணம் விரிவடைந்து பார்வையாளனை வேறொரு தளத்திற்கு அவை அழைத்துச்சென்று விடுகின்றன. ஓர் எழுத்துரு நெறியாளர்களின் கற்பனையோடு இணைந்து காட்சியாக விரியும்போது ஏற்படுத்தும் மாயத்தையும் பிரமிப்பையும் ஆற்றுகை தந்துவிடுகிறது. இது மொழிகடந்து, இனம் கடந்து எங்கும் யாராலும் தம்மோடு பொருத்திப் பார்த்து ரசிக்கக்கூடிய ஓர் ஆற்றுகை. இதன் பார்வைத்தளம் இன்னும் விரிவானது.

இரண்டாவது ஆற்றுகை சிறுவர்கள் மீதான வன்முறைகள் பற்றியது. காஷ்மீரிய சிறுமி ஆசிபாவும் சிரியக்குழந்தை அய்லானும் அண்மைக்காலத்தில் ஊடகக் கவனம் பெற்ற இரு குழந்தைகள். இருவருமே அநீதியான ஒரு சமூகத்தை அம்பலப்படுத்தும் இரு மரண சாட்சியங்கள். உலகம் இம்மரணங்களை எத்தனை நாட்களுக்குத்தான் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்? ஒரு கலைஞனால் இவற்றை எளிதில் கடந்துவர முடியாது. அவன் மாற்றங்களைத் தேடி தொடர்ந்தும் இயங்கிக்கொண்டே இருப்பவன். அவன் எல்லைகள் கடந்தவன். அவனின் பார்வைகள் சர்வதேச பரிமாணம் மிக்கவை என்பதைத்தான் ஒட்டகங்களின் பயணம் சொல்லியது.

2018 ம் ஆண்டு காஷ்மீரில் கூட்டுப் பாலியல்வதைக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட ஆசிபா என்னும் 8 வயதுச் சிறுமியையும் சிரியாவின் யுத்த அழிவுகளிலிருந்து தப்பி பாதுகாப்பான நாடொன்றுக்கு இடம்பெயர்ந்தபோது குடும்பத்துடன் கடலில் பலியான அய்லான் என்னும் 2 வயதுக் குழுந்தையையும் பற்றிய ரூபனின் இரண்டு கவிதைகள் ஒன்றாகக் கோர்க்கப்பட்டு மேடையில் ஒருசேரக் காட்சிப்படுத்தப்பட்டன. இரண்டு கவிதைகளுமே ஆழமான கவிதைகள். இரண்டு கவிதைகளையும் ஒரே காட்சித்தளத்தில் ஒன்றிணைத்தது கவிதையையும் காட்சியையும் தீவிரத்தின் உச்சத்திற்கு கொண்டுபோனதோடு பார்வையாளரின் உணர்வுகளையும் இரட்டிப்பாக்கியது.

அரங்காற்றுகையில் ஆசிபாவின் உடல்,  இரத்தம் தோய்ந்த வெண்ணிறப் போர்வையொன்றால் மூடியிருந்தமை குறித்த கேள்விகள் பார்வையாளருக்கு எழுந்திருக்கலாம். எனது பார்வையில் ஆசிபா ஒற்றைப் பெண்ணல்ல. அவள் உருவமற்றவள். இங்கு ஆசிபாவின் உருவமும் பெயரும் அவசியமற்ற ஒன்று. உலகம் பூராகவும் பாலியல் வதைக்குள்ளாகி உயிர்விட்ட அத்தனை பெண்களதும் பிம்பமாகவே அவள் தெரிகிறாள். சிறுவன் பாலச்சந்திரனின் முகத்தையே நான் அய்லானில் காண்கிறேன். ஒடுக்கப்படும் இனங்களின் வலிகளும் வதைகளும் இங்கு ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ரூபனின் கவிதை உணர்த்துவதும் இதையேதான்.

காட்சியின் முடிவில் அரங்கின் கதைசொல்லி இதுவரை நேரமும் மூடியிருந்த ஆசிபாவின் முகத்திரையை விலத்துவான். பார்வையாளன் அப்போதுதான் அவளின் நிர்மலமான முகத்தையும் அது காட்டும் உணர்வுகளையும் தரிசிப்பான். பாலியல் வதைக்குள்ளான பெண்கள் இச் சமூகத்தில் தம் முகங்களை மறைத்து, இது தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ளப் பயந்து ஒருவித குற்றவுணர்வுடன் வாழும் சம்பவங்கள் நாம் தினமும் கேள்விப்படுவதுதான். இங்கு மறைந்து வாழ நிர்ப்பந்திக்கப்படவேண்டியவர்கள் குற்றமிழைத்தவர்களேயன்றி பாதிக்கப்பட்ட பெண்களல்ல. இதுபோன்ற அவலங்களை துணிவுடன் எதிர்கொள்ளும் வலிமையை பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கொடுக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு என்பதை உணர்த்தும் ஒரு குறியீடாகவே ஆசிபாவை மூடியிருந்த முகத்திரை விலக்கப்படுவதை நான் புரிந்துகொண்டேன். அவளின் முகத்திரையை விலக்கிவிடும் கதைசொல்லி சமூகத்தின் பிரதிநிதியாகவே எனக்குத் தெரிந்தது.

ஓர் அரங்காற்றுகையில் எது முக்கியமானது? உள்ளடக்கமா, காட்சிகளின் அழகியலா? அல்லது இரண்டுமா?

ரூபனின் ‘வானம் எல்லையென்றான பின்’ என்னும் கவிதை வாசிக்கும்போதே மனங்களில் சமூகம் குறித்த ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தும் கவிதை. கவிதை முற்றுப்பெறும்போது எம் மனங்களிலிருந்து விடுதலையான பறவையொன்று வானில் சிறகசைத்துப் பறந்துபோவது போன்ற காட்சி மனதினில் விரியும். இக்கவிதை பறவையொன்றைப் பற்றியதென நினைத்தாலும் சரி, பறவையை வேறொன்றின் குறியீடெனக் கொண்டாலும் சரி, கவிதையின் பொருள் மனதில் இலகுவில் தங்கிவிடக்கூடிய எளிமையான படிமங்கள் நிறைந்த கவிதை அது. வானம்தான் பறவையின் வாழ்விடம் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தும் கவிதை அதன் அழகியலோடு அரங்கேறியது. விடுதலையாகி வானில் சிறகசைக்கும் பறவைகளை அரங்கில் காட்சிப்படுத்திய அழகும் நடனங்களை ஒழுங்கமைத்த முறையும் தமிழ் அரங்க அழகியலின் ஒரு புதிய படிநிலை (benchmark) என்றே சொல்லலாம்.

இங்கு சொல்லப்பட்டவை உட்பட அனைத்து கவிதைகளுமே சிறப்பாக வடிவமைப்பட்டிருந்தன. ஆற்றுகையில் பங்கெடுத்த கலைஞர்களில் சிவதாஸ், சாந்தக்கண்ணா, சுகிர்தா போன்றவர்கள் ஏற்கனவே ஒஸ்லோவின் அரங்க நிகழ்வுகளில் பார்த்த, அனுபவம் நிறைந்த கலைஞர்கள்தான். இளவாலை விஜேந்திரன், பாஸ்கரன், சண் நரேந்திரன், திருமதி ஜீவா, திருமதி தீபா, திருமதி யமுனா நரேந்திரன் போன்றவர்களை மேடை நிகழ்வுகள் ஊடாக அறியும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில்லை. எனினும் பங்கெடுத்த அனைத்துக் கலைஞர்களுமே தமது முழுமையான ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

பின்னணி இசை வழங்கிய மூத்த கலைஞர் குட்டிமாஸ்ரர், வயலின் இசை மூலம் அரங்காற்றுகையை மேலும் மெருகேற்றிய அதிசயன் மற்றும் தேவகி காண்டீபன், பாடலொன்றுக்கு இசையமைத்திருந்த முரளிதரன் உட்பட அரங்கின் பின்னணியில் இயங்கிய அனைவருக்குமே இந்நிகழ்வின் வெற்றியில் பங்குண்டு.

இவ் அரங்காற்றுகை ஒரு சர்வதேச பரிமாணம் கொண்டது. இன்னும் விரிவான தளத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டிய ஒன்று.  நோர்வேயில் குடிபெயர்ந்த வேறெந்த சமூகமும் இதுபோன்ற சர்வேதேச பரிமாணம் கொண்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறதா என்ற கேள்வியும் எனக்குள் எழவே செய்கிறது.

ஒன்றுடன் மற்றொன்று சேரும்பொழுது இரண்டாகும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அப்படி நடப்பதில்லை. இரண்டு ஆற்றல்கள் இணையும்பொழுது அவை பலவாகத்தான் மாறுகின்றன. நாம் எண்ணிப்பார்க்க முடியாத மடங்குகளாக அவை பரிணமிக்கின்றன என்கிறார் பா.வெங்கடேசன் தனது வேள்பாரி நாவலில்.

கவிதையும் அரங்கும் இணைந்த ஒட்டகங்களின் பயண முயற்சியும் அவ்வாறானதே. ஒட்டகங்கள் தம் பயணத்தை நிறுத்தாது தொடரட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *