ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கென சட்டக் கல்லூரி – நடிகர் சூர்யா, நீதிபதி சந்துரு, ரி.ஞானவேல் தொடக்கி வைத்தனர்
ஜெய்பீம் (2021) இந் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு மற்றும் ஜெய்பீம் இயக்குனர் தி.ஞானவேல் ஒன்றிணைந்து ‘சத்தியதேவ் சட்டக் கல்லூரி’ (Sathyadev Law Academy) என்ற பெயரில் புதிய கல்வி நிலையமொன்றை உருவாக்கியுள்ளனர். ஜூலை 16 அன்று முதல்வர் எம்.கே.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட இக்கல்லூரி பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வறுமையான மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு உதவியாகவிருக்கும் என இக் குழு தெரிவித்துள்ளது.
இருளர் குலத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் மீது பொலிசார் முன்வைத்த பொய்க் குற்றச்சாட்டையும் அதன் காரணமாக பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை பற்றிய கதையைப் பின்னணியாகக் கொண்டு ஜெய் பீம் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரித்து தீர்ப்பளித்தவர் நீதிபதி சந்துரு ஆவார்.
‘அஹரம் ஃபவுண்டேஷன்’ எந்ற பெயரில் நடிகர் சூர்யா ஏற்கெனவே சில பாடசாலைகளை நடத்தி வருகின்றார். இப்பாடசாலைகளில் தமிழ்நாட்டின் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே முதலிடம் தரப்படுகிறது.
“சட்ட நிபுணர்களாகப் பணி புரியும் வாய்ப்பு சாதாரண மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் காலனித்துவ சட்ட அறிஞர்கள் மூட்டைகளைக் கட்டியபோது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய சட்டத்தரணிகள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். ஆனாலும் இச் சட்ட அறிஞர்கள் குறிக்கப்பட்ட சமூகங்களிலிருந்தோ அல்லது குடும்பங்களிலிருந்தோ தான் வரமுடியும். 1961 இல் உருவாக்கப்பட்ட ‘அட்வொகேட்ஸ் சட்டத்தின்’ (Advocates Act 1961) பின்னர் தான் சட்டக் கல்வியும் தொழிலும் பரவலாக்கப் பட்டது” என சத்யதேவ் சட்டக்கல்லூரியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இக்கல்லூரியில் கற்பிக்கப்படும் பாடங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு யூ-டியூப்பில் ஏற்றப்படும் எனவும் இவற்றை மாணவர்கள் இலவசமாகப் பார்த்துக்கொள்ள முடியுமெனவும் இதற்கான செலவுகளை சூர்யா, ஜோதிகா தம்பதியினருக்குச் சொந்தமான 2D என்ரெரெயின்மெண்ட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமெனவும் கூறப்படுகிறது. இக்கல்லூரியில் கற்கும் மாணவர்களில் மாவட்டத்துக்கொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரியவருகிறது. (Pic: The news Minute)