ColumnsNewsSri Lankaமாயமான்

ஐ.நா.வில் ஜனாதிபதியின் முதல் பேச்சு


மாயமான்

அண்ணன் ராஜபக்சபோல் சபையைப் பேய்க்காட்டுவதற்கெனப் பேசாமல் எழுதிக் கொடுத்ததை அப்படியே ஒப்படைத்ததன் மூலம் தானும் podium trained என்று தம்பி ராஜபக்ச காட்டியிருக்கிறார். Cool, composed ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை.

பேச்சை எழுதிக்கொடுத்தது அவரது வியத்மக தலிபான்களாகத்தான் இருக்கவேண்டும். அப்படியே தெரிந்தது. உலகத்திலுள்ள அதி சிறந்த முட்டாள்களில் முன்னணியில் இருக்கும் 15 பேரைத் தள்ளிக்கொண்டு வந்தால் அவர்கள் அனைவரும் இந்த வியத்மகவில் இருப்பவர்களாகவே இருக்கும். பாவம் வைச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணவில்லை அவர்கள்.

கோவிட், உலக அரசியல், புளுகல்கள், துதிபாடல்கள் ஆகியவற்றுக்கு அப்பால், இலங்கை நிலைமையைப் பற்றியும் கொஞ்சம் தொட்டிருக்கிறார். “2019 இல் எனது தேர்தல், 2020 பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றின் மூலம் இறைமையும் பாதுகாப்பும் கொண்ட செழிப்பான, ஸ்திரமான நாட்டைக் கட்டிஎழுப்புவதற்கான ஆணையை மக்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள்” என ஆரம்பிக்கிறார். ‘நீதி, அமைதி சமாதானம், இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் ஆகிய பதங்களைக் காணவில்லை; எதிர்பார்க்கவும் முடியாதுதான்.

“2019 இல் தீவிரவாத மதப் பயங்கரவாதிகளினால் (பயங்கரவாதிகள் என்ற பதமில்லாது வியத்மக எதையும் எழுதுவதில்லை. அது அவர்களது கலவி உச்சத்துக்குச் சமமானது) இலங்கை பேரழிவைச் சந்தித்தது; அதற்கு முன்னர் 2009 வரை, பிரிவினைவாதப் பயங்கரவாதப் போரினால் 30 வருடங்கள் சீரழிந்தது. வன்முறை இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்தது (முள்ளிவாய்க்கால் கணக்கில் இல்லை) மட்டுமல்லாது இலங்கயின் சுபீட்சத்தை ஐம்பது வருடங்கள் பின்னோக்கிக் கொண்டுபோய்விட்டது. உலகத்துக்கே மிகச் சவாலாக இருக்கும் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டுமானால் சர்வதேசங்களின் ஒத்துழைப்பு வேண்டும், குறிப்பாக புலனாய்வு விடயங்கள் பகிரப்படவேண்டும். (எத்தனை கொலைகாரருக்கு அவர் மன்னிப்ப்புக் கொடுத்து விடுதலை செய்தார் என்ற விடயம் தற்செயலாக விடுபட்டிருக்கலாம்)

“அப்படியான வன்முறை இலங்கையில் மீண்டும் தலைதூக்காது என்பதை எனது அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் (இலங்கையில் கை தட்டல் வானைப் பிளக்கிறது);

எனவே அதற்குப் பின்னாலுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வந்துள்ளோம். நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கு பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டல், உள்ளக நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கருத்துடைய நல்லிணக்கம் ஆகியன அவசியமானவை. அதுமட்டுமல்லாது பொருளாதார அபிவிருத்தி மூலம் கிடைக்கவிருக்கும் பலன்களை எல்லோரும் சமாகப் பங்கிடவேண்டும். (.க்கும் ..கும். புரைக்கேறுகிறது – இலங்கை பூராவும் கிராமங்களுக்கு வழங்கப்படும் அரச நிவாரணம் வட மாகாணத்துக்கு மட்டும் வழங்கப்படமாட்டாது – இன்றய செய்தி).

இனம், மதம், பால் என்ற பேதங்களின்றி சகல இலங்கையர்களுக்குமான செழிப்பான, ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்புவதே எனது அரசாங்கத்தின் உறுதியான எண்ணம்.

இதற்காக உள்ளகப் பங்குதாரர்கள், சர்வதேசப் பங்காளிகள், ஐ.நா. ஆகியவற்றை இணைத்துச் செயற்பட நாம் தயாராகவுள்ளோம் ( புலம்பெயர் தமிழர்கள் இதில் அடங்கமாட்டார்கள்). ஆனாலும் (சிங்கள) மக்களின் அபிலாட்சைகளைத் தீர்த்துவைக்கக்கூடிய உள்ளக நிறுவனங்களினால் மட்டுமே அது சாத்தியமாகும் என வரலாறு காட்டி நிற்கிறது.

இலங்கயின் பாராளுமன்றம், நீதிமன்றங்கள், மற்றும் அவற்றின் சுயாதீனமான அங்கங்கள் தமது தொழிற்பாடுகளையும், பொறுப்புக்களையும் பரிபாலிக்க கட்டுப்பாடற்ற சுயாதீனம் வழங்கப்படவேண்டும் (ஹா…ஹா..)தலைவரே, கனவான்களே, புகழ்பெற்ற பெருந்தகைகளே!

இன்றைய விவாதத்தின் எண்ணக்கருவோடு இணக்கம் தரும் வகையில், நம்பிக்கை மூலம் தாங்குதிறனைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், நாமெல்லோரும் ஒரு பொது நன்மைக்காகப் பாடுபடவேண்டும். அளவையோ, பலத்தையோ கணக்கெடுக்காமல் சகல நாடுகளையும், அவற்றின் நிறுவனங்கள், பாரம்பரியம் ஆகியவற்றைக் கவனத்திலெடுத்து, ஐ.நா. அவற்றைச் சமத்துவடன் நடத்த முயற்சிக்க வேண்டும். (ஆஹா… இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!)

ஆப்கானிஸ்தானில் பெளத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டுமென ஐ.நா.வையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறேன் (இதை ஒரு இறைமையான நாட்டில் தலையிடுவாதாக எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கை வேறு, ஆப்கானிஸ்தான் வேறு, உங்களால் முடியாவிட்டால் சவேந்திர சில்வா பார்த்துக்கொள்வார்,ஆமா).

மனித குலத்தின் எதிர்கால நன்மையை மனத்தில் எடுத்து உண்மையான ஒத்துழைப்பு, தாராளம், பரோபகாரம், நல்விருப்பு, பரஸ்பர மதிப்பு ஆகியவற்றுடன் இக்கூட்டத்தில் பங்குபற்றும் அங்கத்துவ நாடுகள் செயற்படவேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி”

[இது ஜனாதிபதியின் பேச்சின் இலங்கை பற்றிய ஒரு பகுதி மட்டுமே]