ஐ.நா.வின் ‘கற்றுக் கொண்ட பாடங்கள்’

ஐ.நா. சபையின் இலங்கை தொடர்பான உள்ளக விசாரணை அறிக்கை வெளிவந்திருக்கிறது. பரிதாபம். ஆயிரக் கணக்கான தமிழர்களைஉயிர்ப்பலி கொடுத்து அதற்கான விருந்துபசாரங்களை ஏற்றுக் கொண்ட பின்னர் சபை கண்ணீர் வடிக்கிறது. சபையின் கீழ்த்தட்டு ஊழியர்களின் கண்ணீரை ஏளனப்படுத்திய உயரதிகாரிகள் இன்னும் களியாட்டத்தில்தான் இருக்கிறார்கள். இந்த அறிக்கை அவர்களை அம்பலப்படுத்தவுமில்லை. அநீதியளிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்தவித நிவாரணம் பெற்றுத்தரும் திட்டங்களையும் அது கொண்டிருக்கவில்லை. இது ஐ.நா. வின் ‘கற்றுக் கொண்ட பாடங்கள்’ அறிக்கைதான்.

அறிக்கையின் அதி சுருக்கமான வடிவம் இதுதான்.

“Some agencies and individuals had failed in their mandates to protect people, had under-reported Government violations, and suppressed reporting efforts by their field staff”

இந்த அறிக்கைகூட சில மனிதாபிமானம் கொண்ட ஐ.நா. அதிகாரிகளின் முயற்சியால் தான் கைகூடியிருக்கிறது. வழிமுறைகள் இருந்திருந்தால் செயலாளர் நாயகம் இதையும் முடக்கி விட்டு அலரி மாளிகையில் இன்னுமொரு விருந்துண்ணப் போயிருப்பாரோ என்னவோ.

ஐ.நா. வின் உள்ளக ஈ மெயில்கள் மற்றும் இலங்கை அரசுடனான தொடர்பாடல்கள், படங்கள், காணொளிகள் உட்பட 7000 பத்திரங்கள் இவ்விசாரணைக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டன. அந்த வகையில் இவ்விசாரணைக்குழு சுயாதீனமாக இயங்கியிருக்கிறது.

ஐ.நா.வின் திரை மறைவு நடவடிக்கைகள் பல திடுக்கிடும்படியானவை. போர் பற்றி அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் தமிழர் தரப்பினாலும் ஏனைய நிவாரண, மனித உரிமை அமைப்புகளாலும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டவைதான். மேற்கு நாடுகளின் தெருக்களில் மனிதச் சங்கிலிகளாலும் தெரு மறிப்புகளாலும் சர்வதேசத்துக்கு சொல்ல முனைந்தவைதான். வரலாறு தோற்றவர்களால் எழுதப்பட முடியாது என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம். தமிழின அழிப்பில் அரசுடனும், சர்வதேசங்களுடனும் கைகோர்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஐ.நா. சபை சொல்வதனால் மட்டுமே இது வரலாகிறது.

போரின் ஆரம்ப காலகட்டத்தில் 2800 பொதுமக்கள் கொல்லப்பட்டதும் 7000 பேர் வரையில் காயமடைந்ததும் பற்றி உள்ளக ஊழியர்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் மீது நவநீதம் பிள்ளை அவர்கள் நடவடிக்கை எடுக்க முனைந்தபோது அதைத் தடுத்து நிறுத்திய விஜே நம்பியார், ஜோன் ஹோம்ஸ் போன்றவர்களுடைய பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.



‘Some UN staff in Colombo expressed to the UNCT leadership their dismay that the UN was placing primary emphasis on LTTE responsibility when the facts suggested otherwise, and urged a more public stance.

According to the Panel of Experts report “From as early as 6 February 2009, the SLA [Sri Lanka Army] continuously shelled within the area that became the second NFZ, from all directions, including land, sea and air. It is estimated that there were between 300,000 and 330,000 civilians in that small area. The SLA assault employed aerial bombardment, long-range artillery, howitzers and MBRLs [unguided missile systems] as well as small mortars, RPGs [Rocket Propelled Grenades] and small arms fire …”33 The RC told a 13 February meeting of the IAWG-SL that as many as 3,000 people may have been killed since 20 January.’

‘The UN repeatedly condemned the LTTE for serious international human rights and humanitarian law violations but largely avoided mention of the Government’s responsibility. Senior UN officials said this was because information could not be verified. In fact, information had been verified to a good standard.’

அறிக்கை உண்மையானது நம்பகத் தன்மையானது. ஆனால் அடுத்து என்ன? 

ரூவாண்டாவில் பல லட்சங்கள், யூகோஸ்லாவியாவில் பல்லாயிரங்கள். மத்திய கிழக்கில் பல. ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றும். அறிக்கைகளை விடும். எல்லாம் நடந்து முடிந்த பின்னரே தான். அறிக்கைகளும் தீர்மானங்களும் தம் இருப்புக்கான கவசங்கள் மட்டுமே.

அறிக்கை பற்றி நாம் உணர்ச்சி வசப்படலாம். ஏனேன்றால் அது மட்டுமே எமக்குத் தெரிந்தது. அதற்கு மட்டுமே நாம் பழக்கப்பட்டவர்கள். அது மட்டுமே இப்போதைக்கு எம்மால் முடியக் கூடியது!

நவம்பர் 14, 2012