ஐ.நா. முன்னாள் அதிகாரி ஜெப்ரி பெல்ட்மன் இரா.சம்பந்தன் சந்திப்பு -

ஐ.நா. முன்னாள் அதிகாரி ஜெப்ரி பெல்ட்மன் இரா.சம்பந்தன் சந்திப்பு

Spread the love

இலங்கை வந்துள்ள ஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை கொழும்பில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது அக்டோபர் 26, 2018 அன்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் அவர்கள் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்கள் எப்போதும் அரசியல் யாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள் என்றும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள் என்றும் தெரிவித்தார். மேலும் அரசியலமைப்பு சபையானது உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கின்ற போது மிகவும் அவதானத்துடன் செய்யப்பட்டமையானது அரசியல் யாப்பிற்கு முரணான சம்பவங்களை இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்கள் அனுமதிக்காமைக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் காணாமல் போனோருக்கான அலுவலகம், நஷ்ட ஈடு அலுவலகம் மற்றும் உண்மை நல்லிணக்க அலுவலகம் போன்றவை மக்கள் மத்தியில் செயற்படுவது அவசியம் எனவும் அத்தகைய அலுவலகங்கள் உண்மையை நிலைநாட்டும் முகமாக தொடர்ச்சியாக மக்களோடு இடைப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது மாத்திரமல்லாது அரசாங்கமும் ஏனைய மக்களும் தங்களை குறித்து கரிசனையாக உள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் முகமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார். மேலும் அரசாங்கமும் சில அரசியல்வாதிகளும் இதனை தமிழ் சிங்கள பிரச்சினையாக உருவாக்க முயற்சிப்பதாகவும் இது அத்தகைய பிரச்சினை அல்ல என்றும் மாறாக இது அடிப்படை மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும் எனவும் இரா.சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தூதுவரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன் அவர்கள் அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விடயம் தொடர்பில் அநேக கருமங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையை சுட்டிக்காட்டினார். ஆனால் அரசியல் விருப்பும் உத்வேகமும் இல்லாமையும் அரசியல் ரீதியாக இருக்கின்ற செல்வாக்கினை இழந்துவிடுவோம் என்ற பயமும் அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகின்றன என்றும் இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை தீர்ப்பது தலைவர்களின் கடமை என தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் அரசியல் விருப்பம் இல்லாமை ஆனது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாடு முன்னேற்றகரமான பாதையில் செல்வதற்கு தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related:  ராஜபக்ச ஆட்சியில் இலங்கையில் மனித உரிமைகளுக்குப் பேராபத்து- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கிறார்கள் என்று தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு சரியானதை செய்வது தொடர்பில் சிங்கள தலைவர்கள் பின்வாங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான மக்கள் என்றும் நாங்கள் கேட்பது எமது அடிப்படை உரிமைகளையே என்றும் இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்பதனையும் இரா.சம்பந்தன் அவர்கள் எடுத்துரைத்தார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இலங்கை தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என முன்னாள் ஐநாவுக்கான அரசியல் துறை செயலாளர் நாயகம் அவர்களை இரா.சம்பந்தன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *