News & AnalysisOpinionSri Lankaசிவதாசன்

ஐ.நா. மனித உரிமைகள் சபை திரிவிழா, இலங்கையின் தோல்வி அல்லது ஒரு technical error?

ஒரு அலசல் – சிவதாசன்

ஜெனிவாவில் பெப்ரவரி மாதம் கொடியேறிய மனித உரிமைகள் சபையின் திரிவிழாவின் கொடியிறக்கம் இன்று. வழக்கம் போல் நடைபெறும் வடக்கு வீதிச் சபாக்கள், சின்ன மேளங்களை இந்த வருடம் கொறோணேஸ்வரி தடுத்துவிட்டார். ஜெனிவாத் தெருக்களில் ஒருவரும் பிரதிஷ்டை பண்ணவும் இல்லை. அடி பிடிகள் ஏதுமில்லாமல் விழா சுமுகமாக இனிதே நடந்தேறியதில் சிலருக்கு அக மகிழ்ச்சி.

பொதுவாக உள்வீதி ஆராதனைகளைவிட வெளிவீதிச் சண்டைகளும், தாச்சி விளையாட்டுகளும் கலகலப்பாகவிருக்கும். இதற்கென்றே இலங்கை, பாரிஸ், லண்டன், நியூயோர்க், ரொறோண்டோ எனப் பல நகரங்களிலுமிருந்து பக்த கோடிகள் குவிவார்கள். அவர்கள் இல்லாமல் இந்த திரிவிழா ‘சப்’பென்று போய்விட்டது.

அதற்குப் பதிலாக zoom வழியாக இலங்கை உபயகாரர்கள் உள், வெளி வீதிகளில் நடமாடினார்கள். அவர்களது அறிக்கைகளும், பதிலறிக்கைகளும் ஓரளவு கிளு கிளுப்பைத் தந்தன. வெளிவிவகார அமைச்சர், அவரது செயலாளர் எல்லோரும் கோமாளிகளாக (court jesters) வந்து ஆடிப் பாடி மக்களை அப்பப்போ மகிழ்வித்தார்கள். தாமதமாகியேனும், இன்று திரிவிழா ஒருவாறு முடிவுக்கு வந்தது.

இத் திரிவிழாவில் ஐந்து பங்காளிகள். சிலருக்கு அதிக பங்கு, சிலருக்கு குறைவு, ஆனாலும் எல்லோரும் stake holders. வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் தமக்கே ஆதரவாகவும் வாக்களித்திருந்தன. அந்த வகையில் தீர்மானம் வெற்றி பெற்றது.

பிரதான பங்காளர் இலங்கை. வாக்கெடுப்பில் தாமே வெற்றி பெறுவோம் என மார் தட்டிக்கொண்டு வடிவேலு ஸ்டைலில் ‘டாய்’ போட்டுக்கொண்டு வந்து அடி வாங்கி மூலையில் போய்நின்று இரத்தத்தைத் துடைத்துக்கொண்டு “எங்களுக்குத் தான் வெற்றி” எனக் கையை உயர்த்தினார் தினேஷ் குணவர்த்தனா. பாவம் அவரது நெஞ்சும் வாயும் மிதமாகப் புண்ணாகியிருக்க வேண்டும்.

இரண்டாவது பங்காளர் இணைத் தலைமை நாடுகள். ஆரம்பத்திலிருந்தே ‘ஏனோ தானோ’ என்ற மனப்பான்மையுடன் நடந்துகொண்ட அவர்களுக்கு இதுவே எதிர்பார்க்கப்பட்ட முடிவு. இதில் இலங்கையைப் பழிவாங்குவதோ அல்லது பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவுவதோ அவர்களது அடிப்படை நோக்கமாக இருந்திருக்குமென்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்களது ஆட்டத்துக்கான உடுக்கடி வேறெங்கோ நடைபெற்றிருக்கிறது. விழா முடியும்போது அவர்கள் களைத்துப்போனார்கள்.

மூன்றாவது பங்காளிகள் தமிழர்கள், அல்லது இலங்கையின் சிறுபான்மையினங்கள். இத் தீர்மானம் தோல்வியடைந்திருந்தால் இலங்கை இன்னும் தனது தண்டாயுதத்தை வேகமாகச் சுழற்றும்; தோற்றுப்போன, வெந்த புண்களில் மேலும் வேல்கள் பாயலாம் என அஞ்சிய அவர்களுக்கு இது ஒரு வெளி மருந்து. வலியை மட்டும் குறைக்கும் ஆனால் காயங்களை ஆற்றமாட்டாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அவர்களுக்கு இது ஒரு ஆறுதல் இடைவேளை.

நான்காவது பங்காளிகள் மனித உரிமைகள் சபை ஆணையாளரும், உண்மையான அக்கறையோடு இயங்கிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும். சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானமே அவர்களின் முதல் தோல்வி. எனவே வாக்கெடுப்பில் கிடைத்தது வெற்றியென்றோ அதனால் புளகாங்கிதமடைந்து உள்ளமுருகித் தேவாலயங்களில் நேர்த்திக்கடன்களைத் தீர்ப்பார்களென்றோ எதிர்பார்க்க முடியாது. மனித உரிமைகள் சபை என்ற ஒரு அருமையான ஆயுதத்தைப் பாவிக்க மறுக்கும் சர்வதேசங்கள் மீது அவர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை. எனவே புழுங்குவதைத் தவிர அவர்களால் எதையுமே செய்ய முடியாது.

ஐந்தாவது பங்காளிகள், pseudo வல்லரசான இந்தியா உட்பட்ட வல்லரசுகள். அவர்களது நகர்த்தல்களில் பாவிக்கப்படும் பல காய்களில் இதுவுமொரு pawn. முன்னணியில் போய் மரணிக்கும் அந்தஸ்து மட்டுமே உங்களுக்கு உண்டு என்பதுவே அவர்களது போர் நெறி. தப்பி வந்தால் அவர்களது party யில் நமக்கும் ஏதாவுது ஊற்றப்படலாம். அல்லாதபோது நாமும் ஆயிரத்தில் ஒருவர் தான். இத் தீர்மானத்தில் நாம் தப்பி வந்திருக்கிறோம். அவர்களுக்கு இது ஒரு சண்டை (battle) மட்டுமே, போர் (war) அல்ல. திரிவிழா முடிய வழக்கம்போல அவர்கள் bar இல் சந்தித்திருப்பார்கள். அங்கே அவர்கள் முக்கிய பங்காளிகளுடனும் சரசமாடியிருக்கலாம். யார் கண்டது?

அடுத்த நகர்வு

இத் தீர்மானம் எதைச் செய்யப்போகிறது எனப் பலருக்கும் கேள்வியிருக்கலாம். அதற்கான விடையும் உங்களுக்குத் தெரிந்துமிருக்கலாம். சர்வத்ஏசத்தின் போர்த் திட்டம் இலங்கைக்கு மேலும் அவகாசம் கொடுப்பது. முந்திய தீர்மானம் போலல்லாமல் இது இன்னும் கூடிய கால அவகாசத்தைத் தருகிறது. இதுதான் சர்வதேசங்களின் நிகழ்ச்சி நிரல்:

நடந்து முடிந்தது 46 வது திரிவிழா. (வருடத்தில் மார்ச், ஜூன், செப்டம்பர் மாதங்களில் மூன்று திரிவிழாக்கள் நடைபெறுகின்றன). இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46/L.1 கொண்டிருப்பது:

  • இலங்கையில் இனிமேல் நடைபெறப்போகும் நல்லிணக்கச் செயற்பாடுகள், பொறுப்புக்கூறல்கள், மனித உரிமை மீறல்களில் முன்னேற்றம் காணப்படுகிறதா என்பதை அவதானித்து மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் குறிப்பெடுத்துக்கொள்வது. இதற்காக US$ 2.8 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இதில் கண்டறிந்தவற்றை 48 வது திரிவிழாவில் (செப்டம்பர் 2021) வாய் வழியாக ஒப்படைக்க வேண்டும்
  • 49 வது திரிவிழாவில் (மார்ச் 2022) எழுத்து மூலமாக அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்.
  • 51 வது திரிவிழாவில் (செப். 2022) – இலங்கையுடன் ஆலோசித்து, அதன் ஒத்துழைப்புடன் பொறுப்புக்கூறலை விரிவாக்கும் தேர்வுகளுடன் கூடிய , பரஸ்பர ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும்.

எனவே இறுதியில் 2.8 மில்லியன் டாலர்கள் செலவில் இலங்கையின் விருப்பத்தை அனுசரித்துபோகும் விரிவான அறிக்கையொன்றை 51வது திரிவிழாவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கலாம்.

வெற்றி தோல்வி

இத்திரிவிழாவில் நடத்தப்பட்ட கயிறு திரிப்புப் போட்டியில் யாருக்கு வெற்றி கிடைத்ததென்பது, யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இலங்கையின் வெளிவிவகாரக் கோமாளிகள் தங்களுக்கே வெற்றியெனப் பிரகடனம் செய்துவிட்டார்கள். அவர்களைத் திருத்துவது நம் கடமையல்ல. இது அவர்களின் மகத்தான தோல்வியென நம்புபவர்கள் இலங்கையில் சில திருத்த வேலைகளை மேற்கொள்ளலாம். ஒன்று சரத் வீரசேகராவை அரேபியாவிற்கு நாடுகடத்துவது. இரண்டாவது, இலங்கையின் நீதிமன்றங்கள் தொழில்நுட்பத் தவறுகள் (technical errors) மூலம் குற்றவாளிகளை விடுதலைசெய்வதையும், குற்றமில்லாதவர்களைக் கைதுசெய்ய உத்தரவிடுவதையும் பிழை திருத்த, மேற்குநாடுகளிலிருந்து (சீன ரகமில்லாத) ரெக்னீசியனை வெள்ளைவானில் கொண்டு வருவது.

இந்த தடவை வாக்களித்த பல இஸ்லாமிய நாடுகள் (சூடான், இந்தோனேசியா etc.) இலங்கைக்கு சாதகமாக வாக்களிக்காமைக்கோ அல்லது நடுநிலைமை வகித்தமைக்கோ வீரசேகரா & கோ காரணமென கோதாபயவுக்கே தெரிந்திருக்ககூடிய இந்நிலையில் தினேஷ் குணவர்த்தனா damage control நாடகமாடுகிறாரா? அல்லது வெளிவிவகார vs உள்விவகாரப் போட்டியில் ஒருவரை ஒருவர் குறுக்குத்தடம் போட்டு வீழ்த்தினார்களா? அல்லது இதுவும் ஒரு technical error எனக் கடந்துபோவதா?

சர்வதேசம்

இந்தியா, யப்பான் நடுநிலைமை வகித்திருக்கின்றன. அவற்றின் diplomatic dance ஓரளவு எதிர்ப்பார்த்தது. நடுநிலைமை வகிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்களுக்கு இலங்லையில் இன்னும் unfinished business நிறைய இருக்கிறது. கிழக்கு கொள்கலன் துறைமுகப் பாவனையை இழந்ததனால் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டுப்போக மோடியொன்றும் திராவிடனல்ல. திருகோணமலை பாக்கி இருக்கிறது. மனித உரிமைகள் சபையில் அவரது பிரதிநிதியின் பேச்சு காத்திரமாக இருந்தது. தமிழரை மோடி மறக்கவில்லை என அதில் தெரிந்தது.

சீனா, ரஷ்யா ஆகிய ஒருகாலத்து பொதுவுடமைக் காவலர்கள் அப்படித்தான் வாக்களிப்பார்கள் என்பதை எதிர்பார்க்கலாம். கியூபா, பொலிவியா, வெனிசுவேலா பாவம். அவை அமெரிக்காவுக்கு எதிர்ப்பக்கம் நிற்பவை. தார்மீகம் பற்றி அவர்களது பாடத்திட்டத்தில் இருக்கவில்லைப்போலிருக்கிறது. வெனிசுவேலாவின் பிரதிநிதிக்கு இலங்கையாட்கள் நன்றாக வகுப்பெடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறவேயில்லை என கோதாபய பாணியில் அடித்துச் சொன்னார்.

ஏமாற்றம் தந்தது எரித்திரியா. தலைவரோடு எவ்வளவு நெருக்கமாக இருந்த நாடு? சீனா எவ்வளவுதூரத்துக்கு ஆபிரிக்காவை விழுங்கி வருகிறது என்பது நன்றாகத் தெரிந்தது. விரிந்துவரும் சீன வயிறுகளுக்கு உணவளிக்கத் தயார்படுத்தப்படும் ஆபிரிக்கக் கண்டத்தின் கடைசி ஆதிக்குடிகளாக அவர்கள் இருக்கக்கூடும். Global South எங்கள் கைகளில் என்பதை இத் திரிவிழா மூலம் சீனா நிறுவியிருக்கிறது.

Global South பல்வளமுள்ள பகுதி. உணவும், கனிம வளமும் அங்குதான் இருக்கிறது. இங்குள்ள வறிய நாடுகளுக்கு உதவுகிறேனென்று மைல் கணக்கில் தெருக்களையும், ரயில்வே தண்டவாளங்களையும் அமைப்பதும், துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் சீனாவின் பசியைப் போக்குவதற்கே என்பதை அவை உணர்வதற்குள் அங்கு சீனர்கள் குடியேறி முடித்திருப்பர். இலங்கையின் துறைமுக நகரத்தில் பணியாற்ற 30,000 சீனர்களைக் குவித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் தொழிற்சங்கங்களும், ஜே.வி.பி.யும், வீரவன்சக்களும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இத் திரிவிழாவில் இலங்கை வெல்லவேண்டுமென்பதில் சீனா குறியாகவிருந்தது. தீர்மானம் நிறைவேறக்கூடாது எனச் சபையில் அது உரத்துக்கூறியது. சீனா, இலங்கை, பிலிப்பைன்ஸ், பொலிவியா, வெனிசுவேலா ஆகிய அனைத்தும் ஒரே குறிப்பையே வைத்து வாசித்தன. அது சீனா + இலங்கையின் இணைத் தயாரிப்பு என்பது நன்றாகத் தெரிந்தது. சீனாவின் விருப்பம் சபையில் நிறைவேறவில்லை. அந்த வகையில் அவர்களுக்கு அது ஒரு தோல்வி.

அமெரிக்கா இதில் நிறையப் பாடங்கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாக்களிக்க முடியாவிட்டாலும் அது பின்னணியிலிருந்து அது பல வேலைகளைச் செய்திருந்தது தெரிந்தது. ஆனாலும் ஏன் ஆணையாளரின் பரிந்துரைப்புகள் அப்படிச் சிரைத்து எடுக்கப்பட்டன என்பது புரியாத மர்மம். கோதாபய & கோவின் விசர்த்தனமான கொள்கைகளினால் நாடு சீரழிந்துபோகிறது என்பது இப்போது பாமரருக்கே புரியத் தொடங்கிவிட்டது. காடு, மணல், தமிழர் எல்லாமே அவர்களது ஏற்றுமதிப் பொருட்கள். சீனாவின் மேற்பார்வையில் இத் தீர்மானம் அதை மேலும் முடுக்கிவிடப் போகிறது.

தமிழர் எதிர்பார்த்த அளவுக்கு இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இத் தீர்மானத்தில் தெரியவில்லை. மங்கள சமரவீரா களத்தில் இல்லாமையே தமிழரின் வெற்றிக்குக் காரணம் என்று பிரித்தானிய தமிழ்க் கன்சர்வேட்டிவ் அமைப்பு கூறியிருக்கிறது. சமரவீர தோளில் கையைபோட்டு காரியத்தைச் சாதிப்பவர். சாமர்த்தியசாலி என்பதில் ஐயமில்லை. ஆனால் அக்கூற்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளின் பணிகளை அவமானப்படுத்துவது. அவரது காலத்தில், தமிழர் முற்றுமுழுதாக நம்பியிருந்த அரசியலமைப்பின் பின்னால் அவரும் இருந்தார். எனவே சில சமரசங்கள் அங்கே செய்யப்பட்டன. அதில் இரண்டுதரப்பும் தோல்வியடையவில்லை. வாக்கெடுப்பின்றித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைய நிலைமை முற்றிலும் வேறானது.

இந்தியாவின் மெளனம், தாமதம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்தியாவின் தவறான கணிப்புகள், கவனக்குறைவு, தமிழர்களின் அணுகுமுறை எல்லாமே இந்த நிலைமைக்குக் காரணம். இலங்கையில் சீனாவின் காலூன்றலும், ராஜபக்சக்களின் மீள்வரவும் திட்டமிடப்பட்ட விளைவுகள். நல்லாட்சி அரசாங்கத்தின் தவறுகளின் நேரடி விளைவு அது. அதேபோல வடக்கு கிழக்கிலும் ஜனநாயகரீதியாக ஒரு திட்டமிட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். சமீபத்தில் வடக்கு கிழக்கில் நடந்த மூன்று நிகழ்வுகள் இம் மாற்றத்துக்கான கட்டியங்கள் என நான் கருதுகிறேன். ஒன்று: முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிப்பு, இரண்டு: P2P, மூன்று: இந்திய தூதுவர் பாக்லே – தமிழ்த் தலைவர்கள் சந்திப்பு. இந்தியா ஒரு புதிய நகர்வுக்குத் தயாராகிறது என்றே படுகிறது. “இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்காமல் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் தன்மானத்துடனும் வாழ” வழிசெய்வதற்கான அந்நகர்வு ஆரம்பித்துவிட்டது எனவே நான் நினைக்கிறேன். அதன் கருத்து “இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத வகையில் எமது அயலுக்குள் யார் இருக்கப்போகிறார்கள் எனபதை நாங்கள்தான் தீர்மானிப்போம்”. இதற்கு அவர்களுக்குக் கால அவகாசம் தேவை. இந்தத் தீர்மானம் அதை வாங்கிக்கொடுத்திருக்கிறது. இத் தீர்மானத்தின் உருவாக்கலில் இணைத்தலைமை நாடுகளின் பின்னணியில் இந்தியா இருந்திருப்பதற்கான தடயங்கள் அத்தனையும் உள்ளன. அமெரிக்கா அதற்கு இணங்கியிருக்கிறது. இப்படி கழுவி ஊற்றிய ஒரு தீர்மானத்தைப் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வரவேற்கின்றன என்றால் காரணம் இல்லாமலில்லை.

இத் ‘திரி விழா’ வில் நிறையக் கயிறுகள் திரிக்கப்பட்டுள்ளன. Everything’s happen for a reason…