ஐ.நா. மனித உரிமைகள் சபை | இலங்கையின் அடுத்த நகர்வு எப்படியிருக்கப் போகிறது? – ஒரு அலசல்
எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை நேற்று (27) வெளியிடப்பட்டுள்ளது. போர்க்குற்றம் புரிந்தவர்களென முன்னர் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது சில இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பரிந்துரைத்து அவற்றை நிறைவேற்ற மனித உரிமை ஆணையத்தின் அங்கத்தவ நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆணையாளர் மிஷெல் பக்கெலெ.
சொத்துக்களை முடக்குதல், பயணத் தடை, குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல், சர்வதேச சட்டவரைமுறைத் தத்துவததைப் (Universal Jurisdiction Principle) பிரயோகித்தல் போன்ற சில நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
ஆணையாளரின் இவ்வேண்டுகோள் எவ்வளவு தூரத்துக்கு நடைமுறைச் சாத்தியமானது, இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் என்ன?, இப்படியான நடைமுறைகள் வேறு நாடுகளிலோ அல்லது தனி மனிதர்களிலோ வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பன போன்ற விடயங்களை ஆராய்கிறது இக்கட்டுரை.
2021 ஆம் ஆண்டு கூட்டத் தொடர்
மனித உரிமைகள் ஆணையத்தின் 2021 க்கான கூட்டத் தொடரின் முதலாவது அமர்வு பெப்ரவரி 22 முதல் மார்ச் 23 வரை நடைபெறவுள்ளது. மனித உரிமைகள் சபையின் 47 அங்கத்துவநாடுகளின் அமைச்சர்கள் மட்டுமே (High-Level Segment) இதில் கலந்துகொள்ளலாம். இந் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், மனித உரிமைகள் அமைச்சர்கள், நீதி அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான அமைச்சர்கள் தமது நாடுகள் தொடர்பாகவும் உலகில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பற்றியும், இவ்வமர்வின்போது உரையாற்றுவார்கள். மேலும் இரண்டு அமர்வுகள் ஜூன், செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளன.
எல்லா அமர்வுகளிலும் மனித உரிமைகள் ஆணையாளர் (மிஷெல் பக்கெலெ) தனது அறிக்கையை வாசிப்பார். மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன என முறைப்பாடு செய்யப்பட்ட நாடுகளில் ஆணையத்தின் நிபுணர்களால் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆணையாளர் இவ்வறிக்கையைத் தயாரிக்கிறார். இலங்கையைப் பற்றி அவர் தயாரித்த அறிக்கையின் வரைவை அவர் கடந்த வாரம் இலங்கை அரசின் பார்வைக்கு அனுப்பியிருந்தார். நேற்று (27) அவ்வறிக்கையை அவர் பகிரங்கப்படுத்தியிருக்கிறார். அதே போல சில குறிக்கப்பட்ட விடயங்களை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை, சாட்சிகளின் உறவினர்களைச் சந்தித்து விடயங்களை அறிந்து தயாரித்த அறிக்கைகளையும் இந் நிகழ்வில் சமர்ப்பிப்பார்கள்.
ஐ.நா. பொதுச் சபை
அதுமட்டுமல்லாது, நியூ யோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபையின் சமூக, பொருளாதார சபைக் கூட்டத்திலும் மனித உரிமை ஆணையாளர் இலங்கை மீதான தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கை விவகாரம்
தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஆணையாளரின் அறிக்கை இலங்கையைப் பற்றிப் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதோடு, மனித உரிமைகள் சபை அதன்மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் கூறுகிறது. இதுவரை பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளைவிட இது சற்று காட்டமானது என்பது பலரது கருத்து.
ஆணையாளரின் இக் காட்டத்துக்குக் காரணம் இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் சிறுபான்மை, மதப் பிரிவினர் மீதான ஜனநாயக, அரசியல், சமூக ஒடுக்குமுறைகளும் சர்வதேச அபிப்பிராயங்களை மதிக்காது உதாசீனம் செய்யும் ஆட்சியாளரிம் மனப்பாங்குமென்பது தெட்டத் தெளிவு. இதனால் தான் அங்கத்துவ நாடுகளின் உடனடிக் கவனம் இலங்கை மீது செலுத்தப்படவேண்டுமென்று அவர் விசேடமாகக் கேட்டிருக்கிறார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
மனித உரிமைகள் சபை அங்கத்தவர்களிடம் ஆணையாளர் முன்வைத்த கோரிக்கைகளில் சில மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலொன்று, இந் நாடுகள் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைப்பது. இலங்கையில் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இராணுவமயமாக்கம், ஜனநாயகத்துக்கான வெளி படிப்படியாக நீக்கப்பட்டு வருதல் போன்றவற்றை, இப் பரிந்துரைப்புக்குக் காரணிகளாக அவர் முன்னிறுத்துகிறார்.
அவரது பரிந்துரைப்புக்களில் இன்னுமொரு முக்கியமான விடயம், சர்வதேச சட்டவரம்புத் தத்துவத்தை (Principle of Universal Jurisdiction) இலங்கைக்கு எதிராகப் பிரயோகிப்பது. இத் தத்துவத்தின்படி, எந்த ஒரு நாடும், இலங்கையோ அல்லது அதன் ஒரு குடிமகனோ இழைத்த குற்றத்துகாக அதன் /அவர் மீது வழக்குப் பதிவுசெய்யலாம். உதாரணமாக, லண்டனில் வசித்துவந்த சிலி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்ற்றோ பினோச்சே சிலி மக்கள் மீது புரிந்த குற்றங்களுக்காக , ஸ்பெயின் அவர் மீது வழக்குத் தொடுத்திருந்தது. ஸ்பெயினின் பிடியாணையின் பிரகாரம் லண்டனில் அவர் 1998 இல் கைது செய்யப்பட்டு ஸ்பெயின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவரது கைதுக்கு, சர்வதேச சட்டவரம்புத் தத்துவமே பாவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முந்திய மனித உரிமைகள் சபை ஆணையாளர், சாயிட் அல் ஹுசேன் இதே தத்துவத்தை இலங்கை மீது பிரயோகிக்கும்படி பரிந்துரைத்திருந்தார். ஆனால் அப்போதிருந்த ரணில் ஆட்சி 30/1 தீர்மானத்தை இணை-முன்மொழிந்ததுடன் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களில் உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் மூலம் தாம் நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி கூறியதால் அங்கத்துவ நாடுகள் எதுவும் இலங்கை மீது வழக்குப் பதிவதை ஊக்கப்படுத்தாமல் நல்லிணக்க, பொறுப்புக்கூறல் விடயங்களில் முன்னேற்றங்களைக் காண்பதற்கு கால அவகாசத்தை வழங்கியிருந்தன. அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் பேரம் பேசுதலும் தமிழர் தரப்பின் விட்டுக்கொடுப்பும் இவ்விடயத்தில் இலங்கைக்கு உதவியாகவிருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது.
ரணில் அரசாங்கம் ஐ.நா.வுக்குக் கொடுத்த வாக்குறுதியின் பலனாகச் சில இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும், காணாமற் போனவர்களுக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதும் நடந்தேறின. ஆனால் அதுவே ரணிலின் ஆட்சியைக் கவிழ்க்கவும், ராஜபக்சக்கள் ஆட்சியைக் கைப்பற்றவும் காரணமாகியிருந்தது.
தென்னிலங்கை அரசியலில் இப்படி நடைபெறுவது தமிழருக்குப் பரிச்சயமாக இருந்தாலும், சர்வதேசங்கள், குறிப்பாக ஐ.நா., இப்போதுதான் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுளது போலத் தெரிகிறது.
தற்போதுள்ள ஆட்சியாளர் ஐ.நா.தீர்மானத்தின் இணை முன்மொழிவிலிருந்து சுயமாக வெளிவந்தமையும், மங்கள சமரவீரவைப் போன்று ராஜதந்திரத்துடன் நடந்துகொள்ளாமையும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களில் உள்ளகப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டாமையும் இந்தத்தடவை அங்கத்துவ நாடுகள் சர்வதேச சட்டவரைமுறைத் தத்துவத்தைப் பிரயோகப்படுத்துவதிலிருந்து இலங்கை தப்புவதில் சிரமமாகவிருக்குமெனவே எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கத்துவ நாடுகள்
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளில் அரைவாசிக்கும் மேல் ஆசிய, பசிபிக், ஆபிரிக்க நாடுகள். இவற்றில் பெரும்பாலானவை சீனாவின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திலுள்ளவை. எனவே வாக்களிப்பு என்று வரும்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்குகள் திரள்வதற்கான சாத்தியமே அதிகம்.
- ஆபிரிக்க நாடுகள்: 13
- ஆசிய பசிபிக்: 13
- லத்தின் அமெரிக்க, கரிபியன் நாடுகள்: 8
- மேற்கு ஐரோப்பிய நாடுகள்: 7
- கிழக்கு ஐரோப்பிய நாடுகள்: 6
இந் நிலையில் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவது சிரமமாகவே இருக்கும். குறிப்பாக ட்றம்ப் நிர்வாகம் அமெரிக்காவை மனித உரிமைகள் சபையிலிருந்து விலக்கிக்கொண்டதால் அமெரிக்கா தனது அழுத்தத்தை வெளியிலிருந்துதான் கொடுக்கவேண்டி வரும்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னான இலங்கையின் பொருளாதாரம் முன்பு போல சுற்றுலா, ஏற்றுமதி ஆகியவற்றில் தங்கியிருப்பினும் இரண்டு விடயங்களிலும் சீனாவின் தயவே போது. ஐரோப்பாவிலோ அல்லது ஐரோப்பியர்களிலோ இலங்கை தங்கியிராத பொருளாதாரமொன்றைச் சீனாவின் உதவியுடன் அது கட்டியெழுப்ப முயற்சிக்கிறது. எனவே ஐ.நா. சபையில் சீனாவின் ஆதரவுநாடுகள் வாக்களிப்பு மட்டுமே இத் தீர்மானத்திலிருந்து தப்புவதற்குப் போதுமானது.
ஆணையாளரின் அறிக்கை வரைவு கிடைத்த பின்னர் இலங்கை 2011 இல் உருவாக்கிய கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கையை மீண்டும் கையிலெடுத்து அதை ஒரு உள்ளகப் பொறிமுறையாகப் பாவிக்கலாமெனவும் அதில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தலாமெனவும் ஆலோசித்துவருவதாகப் பேசப்படுகிறது. ஆனால் அதற்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களும், தற்போது முஸ்லிம்களின் உடற் தகனம் போன்ற விடயங்களில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையையே அரசாங்கம் உதாசீனம் செய்தமையும் ஆணையாளரின் நிலைப்பாட்டை மிகவும் இறுக்கமாக்கியுள்ளன என்பதே உண்மை.
மைய நாடுகளின் ஒருமித்த தீர்மானம்
இம்மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தீர்மானத்தை அங்கத்துவ நாடுகளின் மைய நாடுகளான பிரித்தானியா, கனடா, மகெடோனியா, ஜேர்மனி, மொண்டிநீக்ரோ ஆகிய ஐந்தும் சேர்ந்து தயாரித்து வருகின்றன. அங்கத்தவர்களது ஒருமித்த தீர்மானத்தின் வரைவை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக நம்பப்படுகிறது. தீர்மானம் எதுவித எதிர்ப்புமில்லாது முன்மொழியப்பட்டால் அங்கத்தவர்களிடையே வாக்கெடுப்பு நடைபெறாது. அல்லாவிடில் 47 அங்கத்தவர்களிடையே இத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இதில் எவருக்கும் வெட்டு வாக்கு (veto) அதிகாரம் இல்லை. மைய அங்கத்தவர்களின் இத் தீர்மானத்தின் வரைவு இலங்கைக்குச் சாதகமில்லாத பட்சத்தில் அதை நிராகரிக்க வைப்பதற்காக இலங்கையும், அதன் தரப்பில் சீனா, ரஷ்யா, சவூதி அரேபியா போன்ற நாடுகளும் தீவிரமாகச் செயற்படுமென எதிர்பார்க்கலாம்.
எப்படியாயினும் இந்த 47 நாடுகளும் வாக்களிப்பதற்கு முன்னர் ஐ.நா. பொதுச்சபையின் 193 அங்கத்தவர்களுக்கும் இத் தீர்மானம் பற்றிக் கருத்துக்கூற அனுமதிக்கப்படும். இதன்போது அவர்கள் 47 அங்கத்தவர்கள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகிக்கவும் வாய்ப்புண்டு. இந்நிலையில் அமெரிக்க அரசின் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியவர்களான சூசன் றைஸ் (உள்ளக), சமாந்தா பவர் (தேசிய பாதுகாப்பு / ஐ.நா) ஆகியோர்களின் ஆலோசனைகள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதற்கான சாத்தியங்களே உண்டு.
இந்தியாவின் திரிசங்கு சொர்க்க நிலை
ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானங்கள் இலங்கைக்குச் சார்பாகவா எதிராகவா சாய்கின்றன என்பதைத் தீர்மானிக்கும் நாடுகளில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமானவை.
கிழக்குக் கொள்கலன் முனைய விடயத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் ஒரு இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. முனையத்தைத் தன்வசப்படுத்துவதற்காக இந்தியா எதையும் செய்யும். அதனால் இலங்கைக்கு மீண்டும் கால அவகாசத்தை வாங்கிக்கொடுக்கப் பகீரதப் பிரயத்தனம் எடுக்கும். இக்காரணங்களுக்காக இலங்கை ஆட்சியாளர் முனையம் கையளிக்கப்படுவதை இழுத்தடிக்கவோ அல்லது இந்தியாவுக்குத் தாரைவார்க்கவோ செய்யலாம். எப்படியாயினும் தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி., புத்த சங்கங்கள் ஆகியன இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள். இதனால் இலங்கை ஆட்சியாளர் இருதலைக் கொள்ளி எறும்பாக மாட்டிக்கொள்ளவும் கூடும். இம் முனையம் இந்தியாவின் கைகளில் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக சீனா எதையும் செய்யும். தற்போதைய தொழிற்சங்க, ஜே.வி.பி. எதிர்ப்புகளின் பின்னால் சீனாவே உள்ளது. ஆனாலும் இந்தியா ஐ.நா. பொறிமுறையைவிடத் தனது 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதில் மட்டுமே ஆவலாக இருக்குமெனவே நம்பலாம். எனவே ஐ.நா.வின் வெற்றி முற்று முழுதாக ஆணையாளரினதும் இதர மனித உரிமை அமைப்புகளினதும் உறுதியான செயற்பாடுகளை மட்டுமே நம்பியிருக்கிறது.
தமிழர்களது நிலைப்பாடும் செயற்பாடும்
ஐ.நா. மனித உரிமைகள் சபையளவில் இலங்கையின் தமிழ்க் கட்சிகளோ அல்லது அமைப்புகளோ அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ காத்திரமான எந்த அழுத்தத்தையும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அப்ப்டியிருந்தால் அது ஆணையாளரின் அறிக்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தமிழர் தரப்பில் முன்னெப்போதையும் விடப் பிரிவுகள் ஆழமாகவும் அகலமாகவும் இருப்பதால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ அவர்களது அழுத்தம் பயனளிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதாயில்லை. புலம் பெயர்ந்த அமைப்புகளிடமும் இதே நிலைதான். எனவே இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மனித உரிமை ஆணையாளர் மிஷெல் பக்கெலெ தான்.