ஐ.நா. மனித உரிமைகள் சபை: இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றம்

“இதை ஏற்றுகொண்டால் அது நமது ‘போர்வீரர்களுக்கு’ எதிரானதாகும்” – அலி சப்றி

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மைய நாடுகளின் குழுவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 51/L1 இருபது வாக்குகளின் ஆதரவுடன் நிறைவேறியது. மொத்தம் 47 நாடுகள் இச்சபையில் வாக்களிக்கும் தகமையைக் கொண்டிருந்தன. அவற்றில் தீர்மானத்துக்கு ஆதரவாக 20 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது 20 நாடுகளும் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்திருந்தன. 2012 இல் இலங்கை தொடர்பாக இச்சபையில் எடுக்கப்பட்டுவரும் வாக்கெடுப்புகளின்போது இம்முறைதான் இலங்கைக்கு ஆதரவாக மிகக்குறைந்த வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

இம்முறை சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பிரேரணை, எதிர்காலத்தில் கொண்டுவரப்படவிருக்கும் போர்குற்ற வழக்குகளில் சமர்ப்பிக்கப்படும் பொருட்டு தகவல்களைத் திரட்டிப் பகுப்பாய்ந்து அவற்றைச் சேகரித்துவைப்பதற்காக மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை நீடிப்பதுடன் மேலும் பலமாக்குவது சம்பந்தமானதாகும்.

வாக்களிப்பு விபரம்: YES= ஆதரவு NO= எதிர் ABST= வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறுபவர்களை உலகின் எந்தநாடுகளிலும் நீதிமன்றங்களில் நிறுத்துவதற்கும் ஆணையர் அலுவலகத்தினால் சேகரிக்கப்பட்ட விடயங்களை இவ்வழக்குகளில் பயன்படுத்துவதற்கேற்ற வகையிலுமான அதிகாரங்களை இத் தீர்மானம் பெற்றுத் தருகிறது.

அமர்வில் கலந்துகொண்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி இத் தீர்மானத்தை அறவே நிராகரித்ததுடன் இது நாடுகளைத் துருவப்படுத்துவதுடன் பிரித்தும் வைக்கின்றது எனச் சாடியுள்ளார். இலங்கையின் உள்ளகப் பொறிமுறையில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஐ.நா.வின் ஸ்தாபக நோக்கங்களிலிருந்து வெகுவாக விலகிச்செல்ல இத் தீர்மானம் வழிவகுக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சீனா மற்றும் வெனிசுவேலாவின் பிரதிநிதிகளும் இத் தீர்மானத்தைச் சாடியுள்ளனர்.

இந்தியா, யப்பான் போன்ற நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இத் தீர்மானம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்தியப் பிரதிநிதி “இலங்கையில் நீண்டகால அமைதியையும் நல்லிணக்கத்தையும் எட்டுவதற்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் சமத்துவம் பேணப்படுவது அவசியம் என்ற கருத்தையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம்” எனக் கூறியுல்ளார். “இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என யப்பானிய தூதுவரும் கருத்து தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர் மீது குற்றச்சாட்டு

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை ஊடகவியலாளருடனான சந்திப்பின்போது “புலம் பெயர் தமிழர்களின் கடுமையான பிரச்சாரம் காரணமாகவே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்நாட்டிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கும் புலம்பெயர் தமிழர்களது அழுத்தமே காரணம். இது இலங்கை மக்களின் உண்மையான விருப்பின் வெளிப்பாடல்ல மாறாக பூகோள அரசியலின் வெளிப்பாடு. இலங்கையால் முன்னெடுக்கப்படும் விடயங்கள் மேற்கு நாடுகளையோ அல்லது புலம்பெயர் குழுக்களையோ திருப்திப்படுத்தவில்லை. இச் சிறிய நாட்டை நிரந்தரமாகச் சிறைபடுத்தி வைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் நாங்கள் நடந்துகொண்டால் அது எமது போர் வீரர்களுக்கு எதிராகச் செயற்பட்டதாவே முடியும். எனவே நாம் இதற்கு உடன்படக் கூடாது. 2009 படுகொலைகளின் மூலம் கொண்டுவரப்பட்ட சமாதானத்தால் அனைத்து மக்களும் பலன்பெற்றுள்ளனர். அவர்கள் எல்லா விடயங்களிலும் தலையிடுகிறார்கள். அடுத்ததாக அவர்கள் கிரிக்கெட்டையும் விசாரண செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.