ஐ.நா.மனித உரிமைகள் சபை | இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது – இலங்கை வெளிவிவகாரச் செயலாளர்

இணைத் தலைமை நாடுகளால் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்படும்போது அதற்கு (இலங்கைக்கு) ஆதரவளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளதென இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மையம் நேற்று (புதன்) அனுப்பிய ருவீட் செய்தி ஒன்றில் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது “இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்கு” இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கைக்குக் கூறியதாக வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே உறுதிசெய்ததாக தெரிவித்துள்ளது.

“வல்லரசு ஸ்தானத்தில் இருக்கும் இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டுக்கு இலங்கை மிகவும் நன்றியுடையதாகவிருக்கிறது” என அவர் தெரிவித்ததாக ஊடக மையம் தெரிவித்துள்ளது.

‘தி இந்து’ பத்திரிகைக்கு முன்னர் கொடுத்த பேட்டியொன்றில், “எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் போர்க்குற்ற வழக்குகளுக்காக சர்வதேச தடயம் சேகரிக்கும் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்காக பிரித்தானியா தலைமையில் இணைத்தலைமைநாடுகள் முயல்கின்றன எனவும் அத் தீர்மானம் சபையில் முன்வைக்கப்படும்போது இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டுமெனவும் கொலம்பகே இந்தியாவிடம் இறைஞ்சியிருந்தார். அத்தோடு அதிகாரப் பகிர்வுக்காக இந்தியாவினால் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தம் பழையதாகப் போய்விட்டது எனவும் இந்தியா அதைத் திருப்பித் திருப்பி மீட்டுவதை நிறுதவேண்டுமென்றும் அதே பேட்டியில் கொலம்பகே இந்தியாவுக்கு ஆலோசனை கூறியிருந்தார்.

13 வது திருத்தத்தை அகற்றப்போவதாகவும் மாகாணசபைகள் சட்டத்தை மாற்றியமைக்கப்போவதாகவும் கூறிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, இந்தியாவை மகிழ்விப்பதற்காகத் தற்போது மாகாணசபைத் தேர்தல்களைத் துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார். அதே வேளை புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குப்படும்வரை மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறமாட்டாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சபை தீர்மான விடயத்தில் இந்தியா இதுவரை எந்த முடிவையும் எடுத்ததுபோலக் காட்டிக்கொள்ளாமல் இருந்துவந்தது. ஆனால் சபைக் கூட்டத்தின் ஆரம்பத்தில் ” மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையில் குறிப்பிட்டதுபோல இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்துபோய்க்கொண்டிருக்கின்றன. இலங்கையில் தமிழ் மக்களது நியாயமான அபிலாட்சைகளை வழங்குவதோடு இலங்கையின் ஒருமைப்பாடு பிணைக்கப்பட்டுள்ளது” என இந்தியப் பிரதிநிதி தெரிவித்திருந்தார்.