News & AnalysisSri LankaWorld

ஐ.நா. மனித உரிமைகள் சபை | இறுதி வரைவை இணைத்தலைமை நாடுகள் கையளித்தன

ஐ.நா.ம.உ.சபை | தீர்மானத்தின் இறுதி வரைவு கையளிப்பு

“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தீர்மான வரைவு இதற்கு முன்னர் தாயரிக்கப்பட்டிருந்ததைவிட மிகவும் காட்டமானதாக இருக்கிறது எனப்படுகிறது.

இலங்கையின் சிவிலியன் செயற்பாடுகள் படிப்படியாக இராணுவமயப்படுத்தப்பட்டு வருதல்; நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளை நிலைநிறுத்தும் ஸ்தாபனங்கள் அருகிப் போதல்; ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படாமை, அவர்கள் மீதான பொறுப்புக்கூறல் விடயங்களில் தடைகளை ஏற்படுத்துதல்; சுதந்திரம், மத நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிரான கொள்கை வகுப்பு; தமிழ்,முஸ்லிம் சமூகங்களை ஓரங்கட்டுதல்; சிவில் சமூகத்தினரை மிரட்டுதலும் அவர்கள் மீதான கண்காணிப்பும்; ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளும் அருகிவரும் ஜனநாயக வெளியும்; போரினாற் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்தலைக் கட்டுப்படுத்தலும், நினைவுச் சின்னங்களை இடித்தல்; எழுந்தமானமாக தடுத்து வைத்தல்; சித்திரவதை, கொடிய மனிதத்தன்மையற்ற தண்டனைகள், பாலியல் மற்றும் பால் சம்பந்தப்பட்ட வன்முறைகள்; ஆகிய நடைமுறைகள் கடந்த சில வருடங்களாக காணப்பட்ட முன்னேற்றங்களை மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்பவையாகவும், மேலும் மேலும் புதிய மனித உரிமை மீறல்களைப் புரிவதற்கு வழிகோலுபவையாகவும் இருக்கின்ற போக்கு மிகவும் கரிசனைக்குள்ளனவாக உள்ளன.

வேறு பல விடயங்களுடன், இத் தீர்மான வரைவு, அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்குவதென இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும், 13வது திருத்தத்தின் கீழ் வரையறை செய்யப்பட்ட வகையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட சகல மாகாணசபைகளும் சுதந்திரமாக இயங்குவதற்கான தேர்தல் ஒழுங்குகளைச் செய்யவேண்டுமெனவும் இதன் மூலம் நல்லிணக்கம், சகல குடியானவர்களும் அனுபவிக்கக்கூடிய முழுமையான மனித உரிமைகள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டுமெனவும் இலங்கையைக் கோருகிறது.

இத் தீர்மானத்தைத் தயாரித்த இணைத் தலைமை மைய நாடுகள் குழுவில், பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வட மகெடோனியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.