Sri Lanka

ஐ.நா. மனித உரிமைகள் சபை | இணைத் தலைமை நாடுகளின் காட்டமான அறிக்கை


ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 வது கூட்டத் தொடரில், இலங்கை விவரம் தொடர்பாக, இணைத் தலைமை நாடுகளின் சார்பில் பிரித்தானியா சமர்ப்பித்த அறிக்கை:

பிரித்தானியாவின், ஐ.நாவுக்கான உதவி நிரந்தரப் பிரதிநிதி றீட்டா ஃபிரென்ச்
பிரித்தானியாவின், ஐ.நாவுக்கான உதவி நிரந்தரப் பிரதிநிதி றீட்டா ஃபிரென்ச்

இவ்வறிக்கையை, இணைத் தலைமை நாடுகளான கனடா, ஜேர்மனி, வட மகெடோனியா, மொண்டிநீக்ரோ, பிரித்தானியா ஆகிய ஐந்து நாகுகளினதும் சார்பில், பிரித்தானியாவின் ஜெனீவாவுக்கான உதவி நிரந்தர பிரதிநிதி றீட்ட ஃப்ரென்ச், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 வது கூட்டத்தொடரில் சமர்ப்பித்திருந்தார்.


நன்றி, கெளரவ தலைவர் அவர்களே:

இலங்கை மீதான இவ்வறிக்கை, கனடா, ஜேர்மனி, வட மகெடோனியா, மொண்டிநீக்ரோ, பிரித்தானியா ஆகிய இணைத் தலைமை நாடுகளின் சார்பில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அரிக்கையில் குறிப்பிட்டிருந்த கரிசனைகள் குறித்து நாம் கவனமெடுத்துள்ளோம்.

கோவிட்-19 சவால்களின் மத்தியிலும், அமைதியானதும், பாதுகாப்பானதுமான பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தியிருந்தமைக்காக அதன் பால் உழைத்தவர்களுக்கும், இலங்கை மக்களுக்கும், இணைத் தலைமை நாடுகளின் சார்பில் எமது வாழ்த்துக்கள்.

வருகிற மார்ச் மாதம், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகிய விடயங்கள் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் முக்கியமானதொரு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறிப்பாக, ஆணையாளரினால் பதிவுசெய்யப்பட்ட, மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் போன்ற, இன்னும் தீர்க்கப்படாமலிருக்கும் விடயங்களைத் தீர்த்துக் காயங்களை ஆற்றுவதற்கு இலங்கை அரசுக்கு உதவும் வகையில் அதன் ஒத்துழைப்புடன், 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தொடர்பாக இலங்கை அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்பது பற்றி அவ்வறிக்கை விவரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இத் தீர்மானம், இலங்கையின் பூரண ஆதரவுடன், இரண்டு தடவைகள், இச் சபையால் புதுப்பிக்கப்பட்டிருந்தது.தீர்மானம் 30/1 இற்குத் தாம் இனிமேலும் ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் இச் சபைக்கு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந் நிலைமை தொடர்பாக, இணைத் தலைமை நாடுகள், மீண்டுமொரு தடவை, தமது ஆழ்ந்த ஏமாற்றத்தைத் தெரிவிக்கின்றன.

இலங்கையின் பரந்துபட்ட சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும், நீதியையும், சமாதானமான இருப்பையும் தொடர்ந்தும் கையாள்வோம் என்று இலங்கை அரசு கூறிவருகிறது. புதியதொரு ஜனநாயகப் படிமுறை இதை முன்னெடுத்துச் செல்லும் என அது வலியுறுத்துகிறது. இந்த தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நாம் வரவேற்கும் அதே வேளை, இதற்கு முந்திய, இப்படியான முன்னெடுப்புக்கள் எதுவும், துரதிர்ஷ்ட வசமாக, உண்மையாந நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதாகவோ அல்லது தண்டனைகளைப் பெற்றுக்கொடுத்ததாகவோ இல்லை. இப் புதிய அணுகுமுறை, முந்தியவற்றிலிருந்து எப்படியாக வேறுபடப் போகிறது, பாதிக்கப்பட்ட மக்களை எப்படி மனதில் கொள்ளப் போகிறது என்பதைச் சபை குறிப்பாகக் கவனத்தில் எடுக்க வேண்டும். காணாமற் போனோர்களுக்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் உட்பட்ட, சுயாதீன ஆணையங்களின் எதிர்காலம் மிக முக்கியமானது.

அதே வேளை, இலங்கையில் குடிமைச் சமூகங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியன சிரமமின்றித் தொடர்ந்து இயங்குவதற்கான சூழல் அருகி வருவது பற்றி எமக்கு கரிசனையாக உள்ளது. காணாமற்போனவர்களின் குடும்பங்கள் உடபடப் பலருக்கும், மிரட்டல், துன்புறுத்தல், கண்காணிப்பு ஆகியன தொடர்கின்றன. வழக்கறிஞர் ஹேஜாஸ் ஹிஸ்புல்லா போந்ர பல தனிப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல் வரையறையற்றுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.இலங்கையின் பரந்துபட்ட, சக்தி வாய்ந்த குடிமைச் சமூகத்தின் இதயமே அங்குள்ள துடிப்பான ஜனநாயகம் தான். இலங்கையின் குடிமைச் சமூகம், மனித உரிமைக் காவலர்கள் ஆகியோருடன் இணைத் தலைமை நாடுகள் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதி செய்வதோடு, அவர்களைச் சுதந்திரமாக இயங்க இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அது கேட்டுக் கொள்கிறது.

நன்றி