Sri Lanka

ஐ.நா.மனித உரிமைகள் சபையிலிருந்து விலகுவதாக இன்னும் முடிவெடுக்கவில்லை -இலங்கை அரசு


செப்டெம்பர் 18, 2020: ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து இலங்கை அரசு வெளீயேறுவதாகச் சில ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன எனவும் அதில் உண்மையில்லை எனவும் அரசாங்கத்தின் தகவற் திணைக்களம் இன்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் சபையிலிருந்து இலங்கை வெளியேறப்போவதாக அரசாங்கத்தின் துணைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று ஊடகங்களுக்கு கூறியதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை குறித்தே இம் மறுப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

“இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் சபையிலிருந்து வெளியேறவிருப்பதாக ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல தெரிவிக்கவில்லை எனவும், மாறாக, ஐ.நா. தீர்மானம் 30/1 மீதான இணைப் பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுவதாக மட்டுமே அவர் கூறியிருந்தார்” என அரச தகவற் திணைக்கள அறிக்கை தெரிவித்துள்ளது.

“இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளிலிருந்து மிக விரைவாகப் பின்வாங்குவது கவலையளிக்கிறது” எனத் திங்களன்று, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிஷெல் பக்கெலெட் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சமாதானத்துக்கும், நல்லிணக்கத்துக்கும், நிலையான அபிவிருத்திக்கும் குந்தகம் விளையாமல் பாதுகாக்க இலங்கை மீது ஐ.நா.மனித உரிமைகள் சபை தனது கவனத்தைச் செலுத்த வேண்டும் என அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.