IndiaNews

ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அதிகப்படியான வாக்குகளால் இந்தியா மீண்டும் தெரிவு!


ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தினால் வியாழன்று நடத்தப்பட்ட 18 புதிய அங்கத்தவர்களுக்கான தேர்தலில் இந்தியா அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகியிருக்கிறது. இதன் பிரகாரம், ஜனவரி 2022 இல் தொடங்கி மூன்று வருடங்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கத்தவராகப் பணி புரியும். இச் சபையில் மொத்தம் 47 அங்கத்துவ நாடுகள் இருக்கின்றன.

வியாழனன்று (அக்.14) நடைபெற்ற இத் தேர்தலில் சபையின் 193 அங்கத்தவ நாடுகள் வாக்களித்திருந்தன. அதில் இந்தியா 184 வாக்குகளைப் பெற்று சபையின் அங்கத்தவராகப் பதவியேற்கிறது. ஒரு நாடு அங்கத்தவராகுவதற்குத் தேவையான ஆகக் குறைந்த வாக்குகளின் எண்ணிக்கை 97 ஆகும்.

“நீண்ட ஜனநாயகப் பாரம்பரியம், பன்முகத்தன்மை, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய எமது அரசியலமைப்பு ஆகிய பண்புகளுக்குக் கிடைத்த இப் பேராதரவு என்னைப் புளகாங்கிதமடையச் செய்கிறது” என இந்தியாவின் தேர்வு பற்றி, இந்தியாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, ரி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.