ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையை இலங்கை நிராகரித்தது
இலங்கை நாட்டின் இறையாண்மைக்குட்பட்ட பொருளாதாரம், நிதி மற்றும் வரவு செலவு விடயங்களில் கருத்துக்கூறுவது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையரின் ஆணைக்கு அப்பாற்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆணையரின் இவ்வருட அறிக்கையை இலங்கை அரசு முழுமையாக நிராகரித்திருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானம் 51/1 இன் மீது கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா “இலங்கை தனது பொருளாதாரத் தீர்மானங்கள், நிதி மேற்பார்வை, ஆட்சி நிர்வாகம் போன்ற விடயங்களைக் கவனமாகக் கையாண்ட காரணத்தால் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தியிருப்பது பலராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதே வேளை மூன்று தசாப்தப் போரின்போது விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அராஜகங்கள் பற்றி ஆணையரின் அறிக்கையில் எதுவுமே கூறப்படவில்லை ” எனத் தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது சகல இலங்கையர்களினதும் மேம்பாட்டுக்கு அவசியமானது என்பதனால் அதற்கு அரசு முன்னுரிமை கொடுக்கிறது எனவும் அதே வேளை பல்வேறு உள்ளகப் பொறிமுறைகள் மூலம் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க முயற்சிகளிலும் நாடு முன்னேற்றம் கண்டுவருகின்றது என்பதோடு ஐ.நா. மனித உரிமைகள் சார்ந்த ஒப்பந்தங்களை மதித்து தொடர்ந்தும் ஐ.நா. சபையுடன் உறவைப் பேணுவதில் இலங்கை உறுதியாக இருக்கிறது என அருணதிலகா தெரிவித்துள்ளார். காணாமற் போனவர்களுக்கான அலுவலகம், நட்டஈடு வழங்கல் அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கான அலுவலகம் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான தற்காலிக செயலகம் போன்ற உள்ளகச் செயற்பாடுகளில் அரசு முன்னேற்றம் கண்டுவருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
