Sri Lanka

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் விடுதலைப் புலிகளின் கையாள் – அமைச்சரவைப் பேச்சாளர் கம்மன்பில


” ஐ.நா. மனித உரிமைகள்சபை ஆணையாளர் மிஷெல் பக்கெலெ, விடுதலைப் புலிகளின் கையாள்” எனக் குற்றஞ்சாட்டுகிறார் இலங்கைப் பாராளுமன்றத்தின் இணை-அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில.

“கடற்படை வீரராகப் பணியாற்றிய சரத் வீரசேகர பாராளுமன்ற அரசியலுக்கு வந்து 10 வருடங்களின் பின்னர் தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 328,000 விருப்பு வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டவர் அவர். இப்படியான இராணுவ அதிகாரிகளின் குடிமை உரிமைகளைப் பறித்து உலகம் முழுவதும் அவ்ர்களது நடமாட்டத்தைத் தடை செய்ய விரும்புகிறாரா இந்த மனித உரிமை ஆணையாளர்?

“ஷவேந்திர சில்வாவைப் போர்க்குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டும் தமிழ்ப் பிரிவினைவாதிகள், அவர் புரிந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய எந்தவொரு ஆதாரத்தையும் கடந்த 12 வருடங்களாக முன்வைக்கவில்லை. இப் பின்னணியில், மனித உரிமை ஆணையாளரும் ஷவேந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி என வெட்கமின்றிக் கூறி வருகிறார். முந்திய அரசாங்கம் அவரை இராணுவத் தளபதியாக நியமித்தபோது அவர்கள் எதுவுமே கூறவில்லை. இந்த அரசாங்கத்தில் இருக்கும்போதுதான் அவர் போர்க்குற்றவாளி. மனித உரிமை ஆணையாளர் ஒரு கபடதாரி என்பதையே இது காட்டுகிறது. அவர் விடுதலைப் புலிகளின் கையாள் என்பதையே இது நிரூபிக்கிறது. அவரது அறிக்கையை எங்கள் அரசாங்கம் நிராகரித்ததை இச் சந்தர்ப்பத்தில் வரவேற்று மரியாதை செய்கிறோம்” என கம்மன்பில தெரிவித்தார்.