Sri Lanka

ஐ.நா. தீர்மானம் 30/1 வரைவு சிறிசேனவின் பங்களிப்புடனேயே செய்யப்பட்டது – மங்கள சமரவீர

‘நீங்கள் இருண்ட விசைகளினால்’ வழிநடத்தப்படுகிறீர்கள்’ நண்பர் மஹிந்தவுக்கு மங்கள எச்சரிக்கை

மார்ச் 1, 2020

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1, அப்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்புடனேயே வரையப்பட்டது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தானும் சிறிசேனவும் தங்கியிருந்த நியூ யோர்க் ஹோட்டலில் இருந்தவாறு கொழும்பிலிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமச்சின் செயலாளர், அமெரிக்கத் தூதுவர், பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடி இவ் வரைவை நிறைவு செய்ததாக சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

“எல்லோரது சம்மதத்தையும் பெற்றதும், அப்போது கொழும்பிலிருந்த முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் ஜெனிவாவிலிருந்த ஐ.நா. வின் இலங்கைக்கான நிரந்தரச் செயலாளருடன் தொடர்புகொண்டு விடயம் தெரிவிக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

“இத் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டதும், பாராளுமன்றத்தில் அக்டோபர் 23, 2015 இல் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில், ஐ.தே.கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, த.தே.கூ., ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் உறுப்பினர்களின் பரந்துபட்ட ஆதரவு அப்போது இத் தீர்மானத்துக்குக் கிடைத்திருந்தது.

சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இத் தேசத்தில் கிடைக்காத அமைதியையும், ஸ்திரத்தையும், செழுமையையும், நல்லிணக்கத்தையும் மீண்டும் பெற்று முன்னேறுவதற்கு, முதலில் அவற்றை முறையாக ஆராய்ந்து, நடந்தவற்றை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இதற்காக, முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, சகல கட்சிகளையும் இரண்டு தடவைகள் சந்தித்து ஆலோசனை நடத்தி, பொறிமுறைகளின் வடிவமைப்பு உள்ளிட்ட, தீர்மானத்தின் சகல அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்திருந்தார்.

இருப்பினும், எனது நினைவு சரியாக இருப்பின், அப்போது ‘பொது எதிர்க்கட்சி’ யாக்ச் செயற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், இத் தீர்மானம் தொடர்பாக, எந்தவிதமான ஆலோசனைகளையும் முன்வைக்கவில்லை என்றே கருதுகிறேன்” என அவர் தெரிவித்தார்.

இத் தீர்மானம், முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவினதும், பாராளுமன்றத்தினதும் அங்கீகாரத்தைப் பெறாததால் தான் தாம் இணை அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாகத் தற்போதய அரசு தெரிவித்திருக்கிறது.

பிரதமர் ராஜபக்சவுக்குத் தனிப்பட்ட ரீதியில் மங்கள சமரவீர விடுத்த அழைப்பில் ” மஹிந்த, நீங்கள் துர் விசைகளாற் சூழப்பட்டுப் பிழையாக வழிநடத்தப்படுகிறீர்கள். நீங்கள் அப்படியான ஆளில்லை என்பதை இதயபூர்வமாக அறிவீர்கள். அச்சமும், வன்முறையும் சூழ்ந்த இருண்ட காலத்திற்கு நாம் பின்னோக்கிச் செல்லாமல், அமைதியையும், செழிப்பையும் தேடி முன்னோக்கி நகர வேண்டும். இந்த இருண்ட ‘விசைகளினால்’ வழிநடத்தப்படுவீர்களானால், கடந்த காலத்தில் எஸ்.டலிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா தீவிரவாதிகளுடன் ஒப்பந்தம் செய்ததனால் ஏற்பட்ட விளைவுகளையே நீங்களும் சந்திக்கவேண்டி ஏற்படும்” என எச்சரித்துள்ளார்.