Sri Lanka

ஐ.நா. தீர்மானம் 30/1 இலிருந்து இலங்கை விலகிக்கொள்ளும் – மஹிந்த ராஜபக்ச

பெப்ரவரி 19, 2020

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் 30/1 ஒன்றின் இணை அனுசரணையாளர் நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம், இலங்கை ஐ.நாவுக்கும் சர்வதேசங்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை முற்றாக நிராகரிக்க முடிவெடுத்துள்ளதாக பிரத்மர் ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார்.

இத் தீர்மானம், முந்தைய அரசின் அனுசரணையுடன், அக்டோபர் 1, 2015 இல், ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

சமீபத்தில், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமெரிக்கா விதித்த பயணத்தடை தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை இன்று பிரதமர் ராஜபக்ச வெளியிட்டிருக்கிறார். அதில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்குச் செய்த வரலாற்றுத் துரோகம் எனவும் எமது நாட்டு இராணுவப் படைகளை மனித உரிமைகளை மீறியவர்கள் என்று மற்ற நாடுகள் கூறுவதற்கு அது வகைசெய்துள்ளதெனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

“இராணுவத் தளபதி உரிமை மீறல்களைச் செய்திருக்கிறார் எனக் கூட்டுத் தண்டனைக்குட்படுத்தியிருப்பினும் அக் குற்றங்கள் என்ன எனக் கூறப்படவில்லை” என அவர் அவ்வறிக்கை மூலம் கேட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அது நிரூபிக்கப்படும்வரை நிரபராதி எனக் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை கூறுகிறதெனினும் அது இலங்கையின் இராணுவத்தளபதி மீதோ அல்லது அவரது குடும்பத்தினர் மீதோ பிரயோகிக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாகத் தமது அதிருப்தியை இலங்கை அரசு, அமெரிக்க அரசுக்கு மிகவும் கடுமையான தொனியில் தெரித்துள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா. தீர்மானத்தை, பிரித்தானியா, மகெடோனியா, மொண்டிநீக்ரோ ஆகிய நாடுகளுடன் இலங்கையும் இணைந்து நிறைவேற்றியிருந்தன. அதில் 9 முக்கிய பொறுப்புகள் குறிப்பிடப்பட்டிருந்தன எனினும் அவற்றில் இலங்கையை அதிருப்திப்படுத்திய முக்கியமான ஒன்றாக, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணை அதிகாரிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குதல், இருக்கிறது.

இருப்பினும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 40 வது கூட்டத் தொடரின் போது, அப்போதைய அரசின் வெளிவிவகார அமைச்சர் திலக் மரப்பாண அவர்கள், இலங்கை அரசின் அரசமைப்பு விதிகளை மீறுகிறது என்ற காரணத்தால், கலப்பு நீதிமன்றம் என்ற பொறிமுறையை நடைமுறைபடுத்த முடியாது எனத் தெரிவித்திருந்தார். அப்படியிருந்தும், இறுதியில், பிரித்தானிய தலைமையில், இலங்கை அரசின் அனுசரணையுடன் அத் தீர்மானம், எந்தவித மாற்றங்களுமின்றி, முழுமையாகவே நிறைவேற்றப்பட்டிருந்தது.

இத் தீர்மானம் நட்டுக்கு எதிரான பல அம்சங்களைக் கொண்டிருந்தும் அதை நிறைவேற்றுவதற்கு, அப்போதைய பிரதமர் விக்கிரமசிஙகவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், அமைச்சரவையையோ அல்லது ஜனாதிபதி சிரீசேனவையோ கலந்தாலோசிக்காமல் தம்மிச்சையாகத் துணைபோயிருந்தார்கள் என மஹிந்த ராஜபக்ச கூரியிருக்கிறார்.

இக் காரணங்களுக்காக, இலங்கை அரசு இத் தீர்மானத்தின் இணை அனுசரணையாளர் என்ற நிலையிலிருந்து விலகிக்கொள்வதாக இன்றைய அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறது.

அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் தெரிவிக்கப்பட்ட பின்னர், இம் முடிவை, வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என நம்பப்படுகிறது.